இன்றிருக்கும் நான்


நினைவுகள் பின்னோக்கிச் சுழன்று கொண்டிருக்கின்றன. வாழ்வின் கடந்த கணங்கள் யாவும் அனுபவங்கள்தான். சில இனிப்பானவை. சில கசப்பானவை. இனிப்பானவைகள் மறந்திடினும் கசப்பானவைகள் மேலே மிதந்து கொண்டும் இருக்கின்றன. கொஞ்சம் அடிப்பக்கம் கெட்டித்துப் போய்க் கிடக்கின்றன.

பதினேழு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு ஆண்டின் பிற்பாதி. இத்தனை ஆண்டுகள் ஓடிப்போய்விட்டனவா? இப்படியான ஒரு வெயில் காலத்தில்தான் அமைப்பு ஒன்றின் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட ஒப்புக்கொண்டேன். போட்டியிட விரும்பினேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. உடனிருப்பவர்கள் ஏதேதோ நகர்த்திய விளையாட்டில் எனக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. வண்ணமயமாய் எதைக் காட்டினாலும் ஆசைப்படும் குழந்தை மனம் இருந்திருக்க வேண்டும். ஆட்டத்தை ஆரம்பிக்கும்போது, என்னை அந்த இடத்திற்கு நகர்த்தியிருந்தவர் ஒரே ஒரு நிபந்தனைதான் விதித்திருந்தார். என்ன நடந்தாலும், எக்காரணம் கொண்டும் பின் வாங்கக் கூடாது.

அந்த பின் வாங்கக்கூடாது எனும் நிபந்தனை மட்டுமே களத்தில் என்னை இறுதி வரை நிறுத்தியிருந்தது. தனிப்பட்ட முறையில் சொந்தக் காரணங்களுக்காக பின்வாங்கும் சூழல்களுக்கு ஆட்பட்டேன். மூச்சுத் திணறியது. எனினும் ஒப்புக்கொண்ட வாக்கைக் காக்க வேண்டுமெனும் அறத்திற்காக மட்டுமே களத்தில் தொடர்ந்தேன். உண்மையில் அது குருவி தலையில் பனங்காய் வைத்த பாரம்தான்.

அனுபவப்பட்ட ஒருவருக்கும், ஓடுற பாம்பை மிதிக்கிற துள்ளலில் இருந்த எனக்குமான போட்டி அது. என்னை இயக்குபர்களை அவருக்கும், அவரை இயக்குபவர்களை எனக்கும் நன்கு தெரியும். களத்தில் நாங்கள் இருவர் மட்டுமே முக்கியமில்லை. அந்த வெற்றி தோல்வி எங்களை இயக்குபவர்களுக்கானதும்கூட. இதுதான் முறை, இதுதான் ஒழுங்கு எனச் சொல்லப்பட்டதைத் தாண்டி நான் என் போக்கில் ஓடிக் கொண்டிருந்தேன். சென்று ஆதரவு கேள் என எனக்குப் பணிக்கப்பட்ட இடத்திற்கு, கணக்குகள் போட்டு அது எனக்குத் தேவையில்லையென வேறு திசைக்குத் திரும்பினேன்.

ஒரு கட்டத்தில், எனக்கு எதிராக களத்தில் நின்றவரை இயக்கும் பெரிய ஆளுமையைச் சந்திக்க நேரம் ஒதுக்கக் கேட்டிருந்தேன். களம் பரபரப்பானது. அதேநேரம் எனக்குத் தொழிலில் நெருக்கமாகவும், எதிரணியில் மிக முக்கியமானவராகவும் இருந்த இன்னொருவரை சந்தித்துப் பேச மறுத்தேன். அந்த ஆளுமையைச் சந்திக்க நேரம்  கேட்டிருந்ததைக் கேள்விப்பட்ட என் அணி சார்ந்தவர்கள்ஏன் ஏன்!’ என சற்று பதட்டமாக, காரணத்தோடுதான் சந்திக்கிறேன் என்று மட்டும் சென்றேன். வழக்கமான சம்பிரதாயமான வழவழகொழகொழ எதுவும் இல்லாமல் அவரோடு பேசத் தொடங்கியது இன்றும் நினைவில் இருக்கிறது.

என் போட்டியாளரை ஆதரிக்க அவருக்கு ஆயிரமாயிரம் காரணங்கள் இருந்தன. அவை யாவும் அவர் பகிர்ந்தார். அத்தனையும் அவரளவில் நியாயமானவைகளே. ஏறத்தாழ வாழ்வா சாவா போர் அது. போட்டியாளருக்கான அவருடைய ஆதரவினை எந்தப் புகாரும் கூறாமல் ஒப்புக்கொண்டேன். எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறேன் என்றதோடு ஒரே ஒரு கேள்வி மட்டும் அவரிடம் கேட்க வேண்டுமெனக் கூறினேன். அதுஎன்னை ஏன் மூர்க்கமாய் எதிர்க்கிறீர்கள்!” எனும் கேள்விதான். கேள்வியே முரணானதாக இருக்கலாம். தான் ஆதரிப்பவரின் எதிரியை எதிர்ப்பதுதானே வழக்கம். அவரும் தம் வேட்பாளரை ஆதரிப்பதால், என்னை எதிர்க்க வேண்டி வருகிறது என்றார்.

அவரை ஆயிரம் மடங்கு ஆதரியுங்கள், ஆனால் என்னை ஏன் எதிர்க்க வேண்டும். நாம் ஏதேனும் புள்ளியில் சந்தித்திருக்கிறோமா? என்னைக் குறித்து ஏதேனும் அனுபவங்கள் உண்டா?” என்பதான ரீதியில் என் விவாதத்தை தொடர்ந்தேன். சந்திப்பு, அனுபவம், தொடர்பு எதுவுமற்று என்னை உக்கிரமாய் எதிர்ப்பது எந்தவகையில் நியாயம் எனக் கேட்டேன். அந்தச் சந்திப்புக்கு முன்பு வரை நானும் அவரும் பழகியதோ, பேசியதோ கிடையாது. என்னைச் சுற்றியிருப்பவர்களும் கொண்டாடும் ஆளுமைதான் அவர். ஆனால் ஏனோ நான் எந்தத் தொடர்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கவில்லை. எனினும் காலம் எங்களை எதிரெதிர் அணியில் நிறுத்தியிருந்தது. இறுதியாக என் வாதங்களுக்குப் பரிசாக என்ன  வேண்டுமெனக் கேட்டார். ”அவரை ஆதரித்து எந்த அரசியலும் செய்து கொள்ளுங்கள், எந்த வகையிலும் உங்களோடு உறவும், தொடர்பும் இல்லாத என்னைக் குறித்து எந்த எதிர்மறையும் வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டுமென!” வேண்டினேன். ஒப்புக்கொண்டார். அதன்பின்னும் தம் அணி வேட்பாளருக்கு ஆதரவாய் உக்கிரமாக உழைத்தார். என்னைக் குறித்து எதிர்மறையாகப் பேசியதாக என் கவனத்திற்கு அதன்பின் எதுவும் வரவில்லை.

தேர்தல் முடிந்தது. வென்றேன். அந்த இடத்திற்கு வர என்னென்ன அரசியல்கள் செய்தேனோ அவையாவையும் மிக விரைவில், மிகமிக விரைவில் கை விட்டிருந்தேன். போதுமெனத் தெளிந்தேன். ஆண்டுகள் ஓடிவிட்டன. மிகச் சொற்பமே நினைவில் தங்கியிருக்கின்றன. அவற்றில் இந்த ஒன்று ஏன் மிதந்து வந்ததெனும் கேள்வி வருகிறதா?

இத்தனையாண்டுகள் கழித்து அந்த ஆளுமையை ஒரு புள்ளியில் சந்தித்திருக்கிறேன். அந்த தேடல், போராட்டம், வீரியம், வீம்பு, போட்டி, ஆசை என எதுவுமற்ற மனநிலையில் இந்தப் புள்ளியில் அந்த நினைவுகளை அசை போட்டபடி இந்தத் தினம் கழிகிறது.

உண்மையில் அந்த முன் இரவுப் பொழுதை மனம் விரும்பித் தேடிக் கொண்டிருக்கிறது. காலவோட்டத்தில் கரைந்துபோன அந்த என்னையும்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை அந்த நான் கிடைத்தால் அதுவும் சற்று நேரத்தில் அலுத்துப் போகும். ஏனெனில் இன்றிருக்கும் நான்தான் இந்தக் காலத்தின் நானாக இருப்பது நலம். எனக்கு மட்டுமல்ல என்னைச் சார்ந்த எல்லோருக்கும்!.





No comments: