தலைப்புகளும் செய்திகளும்

சமீபத்தில் ஒரு செய்தித்தாளின் ஏழாம் பக்கத்தில் மூன்று கால அளவிலான ஒரு செய்தியின் தலைப்புச் செய்தியாக பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை - பலாத்காரம் செய்து மிரட்டிய பள்ளி தாளாளர் கைதுகண்ணில் அறைகிறது.

தலைப்பைப் படித்தவுடன் பள்ளித் தாளாளர் தம் பள்ளியில் படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவே கருதத் தோன்றியது. இப்படியாக தலைப்பு வைத்து ஈர்ப்பதில் ஊடகத்தினர் எப்போதும் ஒரு அறம்வைத்திருக்கவே செய்கின்றனர். ‘அப்படி தலைப்பு போட்டாதான் சார் படிப்பாங்க!’ என்கிறார்கள். அவர்களின் கூற்றை பெரும்பாலும் மெய்பிப்பவர்களாகவே நாமும் இருக்கின்றோம்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே அந்த தலைப்பிற்குள் ஒரு கணம் உறைந்து, கீழே நகர்ந்து  வாசித்தால், பலாத்காரத்திற்கு உட்பட்டிருப்பது 15 வயதே நிரம்பிய  மாணவி என்பதும், பலாத்காரத்தால் அவள் கர்ப்பம் அடைந்ததும் தெரிய வருகிறது. அந்தக் கர்ப்பம் பெற்றோர்களுக்கும் தெரிந்திருக்கின்றது. இந்த நிலையில் பலாத்காரம் செய்தவன், அந்தப் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியதும் தெரிகின்றது. இந்தச் சூழலில் அந்தப் பெண் தன் உடலில் தீ வைத்துக் கொண்டு இறந்து போகிறாள். அந்தச் சூழலில் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை எழுதி வைத்திருக்கிறாள். ஒருவேளை தற்கொலைக்கான காரணத்தைக் கடிதமாக எழுதி வைத்திருக்காவிட்டால், அது ஒரு தேர்வு பயத்தினால் நிகழ்ந்த மரணமாகவோ, காதல்(!) தோல்வியால் நிகழ்ந்த மரணமாகவோ முடிந்திருக்கலாம்.

பாலத்காரம் செய்து தற்கொலைக்கு காரணமாய் அமைந்த அந்த நபர் ஒரு பள்ளியின் தாளாளராக இருக்கிறார். அந்தப் பள்ளி இந்த மாணவி படித்த பள்ளி என்பதாக உணர்த்தப்படவில்லை. அந்தக் கொடுஞ்செயலைச் செய்தவன் ஒரு பள்ளியின் தாளாளர் என்பது ஒரு கொடுமை என்றால், தற்கொலை செய்துகொண்ட  பெண்ணின் தந்தையின் சகோதரியினுடைய கணவன் என்பதுதான் மிகப் பெரிய கொடுமை. அதாவது அத்தை வழி மாமா. அடிக்கடி வீடு வந்து செல்லும் உறவினர்.

மேலோட்டமாக தலைப்புச் செய்தியோடு கடந்து போயிருந்தால், ஒரு பள்ளித் தாளாளர், தம் பள்ளி மாணவியை சிதைத்திருக்கிறார் எனும் எண்ணத்தோடுதான் செல்ல வேண்டியிருக்கிறது. உடனடியாக அது தொடர்பான சிந்தனைகளை மட்டும் அதையொட்டி குவிக்கச் சொல்லும். பள்ளிகள் மீது, தாளாளர்கள் மீது ஒரு அவநம்பிக்கையை உண்டாக்கும். அதேநேரம் அப்படியான சில கொடுமைகளும் சில பள்ளிகளில் தாளாளர்களால் நடந்தேறியிருக்கலாம்.

ஆனால் இந்த தலைப்புச் செய்தியில் அமுங்கிப் போனது மற்றும் இந்தச் சம்பவத்தில் நாம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதுகுடும்ப உறவுகளில் முதல் வட்டத்திற்குள் இருக்கும் உறவுகளால் குழந்தைகள் பாலியல் வக்கிரங்கள், சீண்டல்கள் மற்றும் பலாத்காரங்களுக்குள் ஆட்படுவதுதான். இன்றளவும் தங்களுக்கு இப்படியான கொடுமைகள் நிகழ்ந்தால், என்ன செய்ய வேண்டும், எப்படிக் கடந்து மீள வேண்டும்? எனும் அறிவுறுத்தல்களை, விழிப்புணர்வை முழுமையாக இன்னும் நாம் அனைத்துக் குழந்தைகளுக்கும் தந்து விடவில்லை.

இத்தனைக்கும் அந்தப் பெண் கர்ப்பமாக இருந்தது வரை அப்பா, அம்மாவிற்கு தெரிந்திருக்கிறதென செய்தி சொல்கிறது. அந்தச் சூழலில், அந்த இக்கட்டிலிருந்து மனம் மற்றும் உடலளவில் தம் மகளை மீட்க எப்படி பெற்றோர்கள் மறந்து போனார்கள்? தம் பெண்ணிற்கு நம்பிக்கையளித்து எவ்வகையிலேனும் மீட்டிருத்தல் நலம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதியில் ஒன்பதாம் வகுப்பு படித்த மாணவியைக் கடத்தி ஒரு மாதம் அடைத்து வைத்திருந்த டாக்ஸி ஓட்டுனர் என்றொரு செய்தி வருகிறது. அதையும் முழுவதுமாகப் படித்தால், அந்த ஆள் அந்தப் பெண்ணின் சித்தப்பா முறை உறவினராக இருக்கிறான். ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகள் இருக்கும் சூழலில் இந்த மாணவியை கடத்தியிருக்கிறான்.



உறவுகளின் நெருக்கத்தில் இருக்கும் வக்கிரம் பிடித்தோரை இனம் கண்டு அவர்களிடம் நம் பிள்ளைகளை எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்கவும் நாம் தொடர்ந்து வழி நடத்தவேண்டும். அதைவிட முக்கியம் குணத்தின் கண்ணியில் எங்கோ ஒரு பிறழ்வு தோன்றி வக்கிரம் கூடுகையில், அதிலிருந்து வெளியேறிட உடல் மற்றும் மன நலம் சார்ந்த ஆலோசனைகளும், சிகிச்சைகளும் பெறுவதும் அவசியம்

தன் மேல் ஏவப்படும் பலாத்காரத்தை எதிர்க்கும் உறுதியை பெண் பிள்ளைகளிடம் போர்க்கால நடவடிக்கையாய் புகட்ட வேண்டும். அப்படிதேனும் கொடுமைகள் நிகழ்ந்தால், அது உடலில் நிகழ்ந்த ஒரு விபத்திற்கு நிகரானது எனும் தெளிவினை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். உடல் மற்றும் மனக்காயத்திலிருந்து மீண்டு விடலாம் எனும் நம்பிக்கையை தந்தே ஆகவேண்டும். இன்னும் மிச்சம் இருக்கும் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவ, சமூகத்திற்கு பாடுபட, சுயமாய் சாதித்து முன்னேறிட ஆயிரமாயிரம் காரணங்கள், வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

பாலியல் வன்கொடுமையில் சிதைந்து மீண்டு சாதித்திருக்கும் பெண்களின் காணொளிகள் இணையவெளியெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. அதை பதின் மற்றும் பருவ வயதுப் பெண்களிடம் காட்டிவிடுவது அவசியமெனத் தோன்றுகிறது. தாங்க முடியாததைத் தாங்கி, கடக்க முடியாததைக் கடந்து வந்திருப்பவர்கள் வாழ்க்கையையும், அதிலிருக்கும் உறுதியையும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது மிக அவசியமானது.

-



2 comments:

Avargal Unmaigal said...

எவ்வளவோ விஷ்யங்களை குழந்தைகளுக்கு கற்று கொடுக்கும் நாம் உறவினர்கள் தகாத முறையில் நடந்த்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி தருவதில்லை. அதுமட்டுமல்லாமல் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களும் தமது உறவினர்கள் தங்கள் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கண் கொத்தி பாம்பாக பார்க்கவேண்டும்

ப.கந்தசாமி said...

"நாய் மனிதனைக் கடித்தது" என்று செய்தி போட்டால் எவன் படிப்பான்? "மனிதன் நாயைக் கடித்தான்" என்றால் அதுதான் செய்தி. தினத்தந்தி ஆரம்பித்தபோது இதைத்தான் அதன் ஆசிரியர் தன் நிருபர்களுக்கு போதித்தார். இன்றைய செய்தித்தாள்களின் தாரக மந்திரமே அதுதானே!