நேர்மறை நெசவு

தி நேர்கோட்டிலா போகிறது? காற்று மோதும் சுவர்களையெல்லாம் உடைத்தா உட்புகுந்து விடுகிறது? வெளிச்சம்கூட தனக்குக் கிடைக்கும் இடைவெளியெங்கும் கசியத்தானே செய்கிறது? வெப்பம், வாசனை என எல்லாமே தம் தடைகளைத் தாண்டவும், ஊடுருவவும் தயக்கமில்லாதபோது, மனிதர்களில் சிலர் மட்டும் ஏன்நான் இப்படின்னா... இப்படித்தான்என அடம்பிடிக்கிறார்கள் எனும் கேள்வியொன்று எழுந்தது.

சிலர்தான் அப்படித்தான்என்பதோடில்லாமல், தன்னோடு இருப்பவர்களும் அப்படித்தான் இருக்க வேண்டுமென கடுமையாக வற்புறுத்துவார்கள். உலகில் தான் எதிர்கொள்வதை நேர்மறையாக எதிர்கொள்வதற்கும், எதிர்மறையாக எதிர்கொள்வதற்கும் சில வேளைகளில் உண்மையும், கடந்த காலத் தரவுகளும் காரணமாய் இருக்கலாம். பல நேரங்களில்மனதுமட்டுமே காரணமாய் இருப்பதை மறுக்க முடியாது.




தின் வயதில் இருக்கும் மகனிடம் ஒவ்வொரு முறையும் அந்த அம்மா, “நீ காலைல சீக்கிரம் எந்திருக்க மாட்ட, ஒழுங்கா பல்லு விளக்க மாட்ட, சீக்கிரம் குளிக்க மாட்ட, லேட்டாதான் பள்ளிக்கூடம் போவஎனக் குற்றம் சாட்டுவதை வருடத்தில் முன்னூறு நாட்களுக்கேனும் ஒரு மந்திரம்போல் சொல்லிக் கொண்டிருக்கிறார். இது பல வருடங்களாக இடைவிடாது தொடர்ந்து பழக்கமாகிவிட்ட ஒன்று. ”ஏன் அப்படிச் சொல்றீங்க?” என்று கேட்டால்,உண்மையத்தானே சொல்கிறேன் என வாதிடுவார். உண்மைகளை எல்லா இடங்களிலும் சொல்லித்தான் தீரவேண்டும் எனும் அவசியம் உண்டா?

பிள்ளை எழுந்திருக்க மாட்டான், ஒழுங்காய் பல் துலக்க மாட்டான், குளிக்க மாட்டான், சரியான நேரத்துக்கு பள்ளி செல்ல மாட்டான் எனும் உண்மைகள் கடந்த காலங்களில் தொடர்ந்து நிகழ்ந்தேயிருந்தாலும் அதையேதான் தொடர்ந்து ஒலிக்க வேண்டுமென்பதில்லை. காரணம் அந்த உண்மைகள் நாம் கண்டவை, கடந்து வந்தவை மட்டுமே, நமக்குத் தேவையானவை கிடையாது. அந்தவரலாற்றுஉண்மைகளுக்கு மாற்றாக அல்லது எதிராக, பொய்யாக இருக்கும் ஒன்றுதான் அந்த இடத்தில் நமக்குத் தேவைப்படுகின்றவை. தரவுகளின் அடிப்படையில் அதுவரை நிகழ்ந்திடாத, சீக்கிரம் எழுந்து கொள்வது, குறிப்பிட்ட நேரத்திற்குள் பல் துலக்குவது, குளிப்பது மற்றும் பள்ளிக்குச் செல்வது எனும் உண்மை இல்லாதவைகள்தான் தேவை.

நம்மோடு இருப்பவர்கள் ஒருவிதம், அவர்களை எதிர்பார்ப்பது இன்னொரு விதம். இரண்டும் பொருந்தாத் தருணங்களில், நாம் எதிர்பார்த்தது நடக்காதபோது, நம் எதிர்ப்பைக் காட்டும் முகமாக அறிந்தோ அறியாமலோ எதிர்மறை எண்ணங்களை போகிற போக்கில் அள்ளிக் கொள்கிறோம் அல்லது பாதையெங்கும் விதைக்கிறோம். எது வேண்டாமோ அதைக் கேட்காதே, மற்றவர்கள் கேட்கும் விதமாய்ச் சொல்லாதே, உனக்கும் சொல்லிக் கொள்ளாதே. ஏனென்றால் விரும்பி எடுத்துக் கொண்டது தங்கும். விதைத்தது தழைக்கும். இவ்வேளையில் எதை விதைத்தால் எதை அறுவடை செய்ய முடியும் என்பதையும் தெளிவுற உணர்தல் நலம்.

மனம் ஒரு மாய வசீகரம் பிணைந்த ஒரு பேராற்றல். எப்போதும் பசித்திருக்கும் ஒரு பெரும் ஜீவன். எப்போது எதை விரும்பும், நினைக்கும், எப்போது எதை ஒதுக்கும், தவிர்க்கும் என்பதெல்லாம் பார்த்துப் பார்த்துத்தான் தீனியிட வேண்டும். அதைப் பிரித்தறியத்தான் ஆயிரமாயிரம் பயிற்சிகள் தேவைப்படுகின்றன. தவறான நிலைப்பாட்டில் அளிக்கும் தீனி அல்லல்களையே அடுக்கச் செய்யும். அல்லல்களை சுற்றுச் சுவராய் எழுப்பி வைத்திருத்தல், எந்தவிதமான மகிழ்ச்சியையும், நிறைவடைதலையும் கொடுத்துவிட முடியாது.

நேர்மறை எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள் இரண்டின் சுதந்திரமான வருகைக்கும் இங்கு இடமுண்டு. இயற்கையாக ஒன்றை மட்டும் அனுமதித்து மற்றொன்றை குழாய் மூடுவதுபோல் மூட முடியாது. வேண்டாததைத் தவிர்க்கலாம் அல்லது வேண்டுவதைப் பழக்கலாம். வேண்டுவதைப் பழக்குவதற்கு முன் வேண்டுவதை எனக்கு இதுதான் வேண்டும் எனப் பிரித்தறிதல் அவசியம். அடுத்து அவ்வாறு வேண்டுவதை நம்பிக்கையோடு நமக்குள்ளும், தொடர்புடையோரிடமும் திரும்பத் திரும்பச் சொல்லுதல் நலம்.

அந்த அம்மா உண்மையில் விரும்பியது, தம் பிள்ளை குறித்த நேரத்தில் எழுந்து, பல் துலக்கி, குளித்து, பதட்டமில்லாமல் பள்ளி செல்ல வேண்டும் என்பதுதான் எனில். ”நீ குறித்த நேரத்தில் எழுந்துடு, பல் துலக்கு, குளி, சீக்கிரம் கிளம்புஎன்பதை மட்டுமே சொல்ல வேண்டுமே தவிர, வரலாறுகளும், தரவுகளும் சொல்லும் தனக்கும், பிள்ளைக்கும் வேண்டாதை அல்ல.


னக்கு ஒரு சிறிய பழக்கம் உண்டு. இன்னும்கூட அடிக்கடி நினைவில் நிறுத்தி பழக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறேன். நான் வாகனத்தில் புறப்படும் போது, நான் செல்ல வேண்டிய வழக்கமான பாதையை மனதில் ஒரு முறை ஓட்டிப்பார்ப்பேன். போகும் வழிகளில் சிக்னல்களில் பச்சை எரியவேண்டுமென விரும்புவேன். நெரிசல் கூடாது என நினைப்பேன். அப்படியாகவே பல நேரங்களில் அமைந்துபோகும். அதை அப்படி நான் நினைத்தால் நடந்ததாக நினைத்து மகிழ்வதுமுண்டு. அப்படி நம்புவதும் ஒருவித மயக்கம் எனினும், நம்புவதற்காக மீண்டும் மீண்டும் நினைப்பதும், நினைப்பதால் நடப்பது போலவும் தோன்றுகிறது. இந்த இடத்தில் ஒன்றை நான் ஒப்புக்கொள்ள வேண்டும், அப்படியாக நினைத்த நாட்களில் சிக்னலில் பச்சை விழுந்த தரவுகள் இல்லையென்றாலும், பயணம் எளிதாய், இனிதாய் அமைவதன் எண்ணிக்கை கூடிக் கொண்டேயிருக்கின்றது. அந்தத் தரவுகளின் அடிப்படையில் நான் ஒவ்வொரு பயணத்திலும், காரியத்திலும் சிக்கல் கூடாது என்பதைவிட, எனக்கு எவ்விதம் அமைய வேண்டுமென விரும்புகிறேன்.

மனதிற்குள் எப்போதும் குறுக்கும் நெடுக்குமாக இழைகள் பாய்ந்து, எண்ணங்களாக, சொற்களாக, உணர்வுகளாக, செயல்களாக வெளிப்படுகின்றன. இதில் தொய்வு ஏற்படும் நேரங்களில் ஏற்படும் பதட்டமும், அயர்வும், உணர்வு மாற்றங்களும் கவனித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. மனம் துவண்டு போதல் என்பது உடலை வதைக்கும் நோய்க்கு நிகரானது. மன வதை பல நேரங்களில் நம்மைக் குலைத்துப் போடும். எல்லாம் இழந்ததுபோன்ற எண்ணத்தைக் கொடுக்கும். அம்மாதிரியான நேரங்களில் உடனடியாக அதை மீட்டெடுத்து வருடிக்கொடுத்தல் தேவை. அப்போது மனதிடம் நாம் சொல்ல வேண்டியது, நம் மனதை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள நாம் மட்டுமல்ல, இன்னும் சில உறவுகள் நம்மோடு எப்போதும் உள்ளனர் எனும் நம்பிக்கையைத்தான்.

மெல்லிய இழைகளைத்தான் நெய்கிறதென்றாலும் மனம் எனும் இயந்திரத்தின் வலிமை, திடம், உறுதிக்கு நிகர் ஏதேனும் இருக்கின்றதா எனத் தெரியவில்லை. ஒன்றிலிருந்து இன்னொன்று, அதிலிருந்து இன்னொன்று எனப் பாயும் எண்ணங்களும் சிந்தனைகளும் கற்பனைகளிலும் பிரித்தரிய முடியா வண்ணங்களில் ஜாலம். அந்த ஜாலத்திற்குள் இருந்துதான் ஒரு இழை நேர்மறையாகவும், ஒரு இழை எதிர்மறையாகவும் எண்ணமாய் வெளி வந்து விழுகிறது. அது செயலுக்கு இட்டுச் செல்லப்படுகிறது. விளைவுகளை அதன் பின்தான் உணர்கின்றோம்.

மீபத்தில் ஒரு கலவரச் சூழல், மெல்ல மெல்ல பதட்டம் ஏற்படுத்துகிறது. கொளுத்தும் மதியப் பொழுது. கலவரம் செய்ய வேண்டுமென்றே இறங்கியிருக்கும் வெறும் பத்து பதினைந்து பேர் கும்பல். கத்தியபடியும் கண்ணில் பட்டதையெல்லாம் சேதப்படுத்தியபடியும் வந்தார்கள். பரபரப்பான சாலை சந்திப்பு சிக்னலில் வாகனங்கள் நிற்கின்றன. வந்த வேகத்தில் கும்பல் மனோபாவத்தில், சாலை நடுவே தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகளை சாலையின் குறுக்கே இழுத்துப்போட்டபடி கடக்கிறார்கள். அந்தச் சூழலில் அந்த எதிர்மறை ஆற்றலை எதிர்கொள்வதென்பது மிகக் கடினமானதுதான். அந்தக் கும்பல் நகர்ந்தபின் எதிர்மறையின் விளைவுகள் மட்டும் மிஞ்சியிருக்கின்றன. பச்சை ஒளிர்கிறது. பின்னாலிருந்து ஒலிப்பான்கள் கதறுகின்றன. வாகனங்கள் நகர முடியவில்லை. கலவர எண்ணத்தில் கணப்பொழுதில் ஏற்படுத்திய தடுப்பில் கண்ணுக்கெட்டிய வரை வாகனங்கள் தேங்குகின்றன. அசாதாரணக் குழப்பம் உருவாகிறது.

இதையெல்லாம் தேநீர்க் கடையில் நின்றபடி நானும், நண்பரும் கவனித்தபடியிருக்கிறோம். நண்பர் என்னைப் பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தம் “ம்ம்ம்... எடுத்துப் போட்றலாம்” என்பதே. அது நேர்மறையின் வீச்சைக் காட்ட வேண்டிய தருணம். அதே நோக்கத்தோடு சுற்றிலும் பார்க்க, எடுத்துப்போடும் முனைப்போடு சிலர் இருப்பதை உணர முடிகிறது.  வாங்க எடுத்துப் போடலாம்என்ற வார்த்தைகள் மட்டும் அவர்களுக்கு தேவைப்பட்டது. சொன்னோம். அடுத்த கணத்தில் தடுப்புகளைத் தூக்கி முன்பு இருந்தது போலவே வைத்தோம். மூன்று நான்கு நிமிடங்களில் போக்குவரத்து சீரானது.


எதிர்மறை மிக எளிது. எதிர்மறைகளை எதிர்கொள்வது எளிதல்ல. அதுவொரு மாயவித்தை. அதை உணர்ந்து நிதானித்தால் நேர்மறையும் எளிதுதான். எதிர்மறை பலம் பொருந்தியதாகத் தோன்றினாலும் நேர்மறையால் அதை வீழ்த்த முடியும் என்பதற்கு மனித வாழ்வெங்கும் சான்றுகள் இருக்கின்றன. காரணம் நேர்மறையில் நல்ல நோக்கங்களும், விளைவுகளும் உண்டு.