விதைகளில் உருவாகும் அங்கொரு வனம்

டந்த மாதத்தில் ஒருநாள் ஆதலினால் வாசிப்பீர்!எனும் தலைப்பில் ஒரு கிராமப்புறக் கல்லூரியில் நூலகர் தினத்தில் பேச வேண்டி வந்தது. நிறைவில் கேள்விகள் கேட்கும் தருணத்தில், “புக்ஸ் படிக்கிறவங்கதான் உருப்படுறாங்களா? படிக்காதவங்கெல்லாம் உருப்படுறதில்லையா!?” எனும் முதலாம் ஆண்டு மாணவனின் கேள்விக்கு கணிசமான கை தட்டல் வந்தது.

ஒரு பேச்சாளராக அந்த இடத்தில், அந்தக் கேள்விக்கு போதுமான பதில் சொல்லிவிட்டேன். ஆனாலும் அந்தக் கேள்வி வெறும் மேலோட்டமானதென்று ஒதுக்க முடியாத கேள்வி. அதே நாட்களில்தான் ஈரோட்டில், 13வது வருடமாக புத்தகத் திருவிழாவும் நடந்து கொண்டிருந்தது. கூட்டம் கூட்டமாக மக்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றுகொண்டுமிருந்தார்கள்.

ஒரு காலத்தில் சென்னை, நெய்வேலி என்றிருந்த புத்தகக் கண்காட்சியை புத்தகத் திருவிழாவாக மாற்றிய பெருமை ஈரோட்டிற்கு உண்டென நினைக்கிறேன்.  கடந்த ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் மட்டும் சுமார் 7கோடி ரூபாய் புத்தக விற்பனையெனக் கேள்விப்பட்டேன். ஆனால் இந்த ஆண்டு வறட்சி, பணம் மாற்று, புதிய வரிகளால் தொழில் முடக்கம் போன்ற கடுமையான சூழலில் அந்தளவு அறிவுப்பசியை நிறைவு செய்யுமா புத்தகத் திருவிழா என்பது கேள்விக்குறிதான். 
என்னை இங்கு ஈர்த்த சொல் புத்தகத் திருவிழாவில் இருக்கும் திருவிழாஎன்பது தான். புத்தகங்களைப் பார்வையிடவும், தேவைக்கேற்ப அள்ளிக்கொள்ளவும் மட்டுமான இடமாக மட்டுமில்லாமல், புத்தகங்களை வெளியிடும் நிகழ்வாகவும், புத்தகம் சார்ந்த பேச்சாளார்கள், பிரபலங்கள் வாசிப்பு குறித்து பெரு உரை நிகழ்த்தும் ஒரு தளமாகவும், மிகவும் திட்டமிட்டு ஒழுங்கு நிறைந்த கட்டமைப்போடு தொடர்ந்து வருகிறது. உரை கேட்க மட்டுமே வந்துபோகும் பெருங்கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக புத்தகங்களை வேட்டையாடுவதும் நிகழத்தான் செய்கின்றது.
புத்தகத் திருவிழா ஆரம்பித்த இரண்டாம் நாளே கூட்டம் சூடு பிடித்தது. சில அரங்குகளுக்குள் கூட்டம் கசகசப்பதையும், சில அரங்களுக்குள் யாரும் இல்லாமலிருப்பதையும் காண முடிந்தது. வாசகர்கள்(!) புகழ்பெற்ற கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தாண்டி மற்ற புத்தகங்களின் பக்கம் திரும்பாத ஒரு தீண்டாமையை மக்கள் கடைபிடிக்கின்றனரோ என்றும் தோன்றியது.

சமீபத்தில் அச்சுத்துறையில் வந்திருக்கும் Print-On-Demand வாய்ப்பு தான் இந்தப் புத்தகத்திருவிழாவின் கதாநாயகன் எனச் சொல்ல வேண்டும். புத்தக வெளியீடு என்றால் ஆயிரம் புத்தகம் அல்லது அறுநூறு புத்தகம் கட்டாயம் எனும் தடையைத் தகர்த்து ஐம்பது புத்தகங்கள்கூட அச்சிட்டு, விற்பனைக்கேற்ப மீண்டும் அச்சிட்டுத் தந்துவிடும் வாய்ப்பும், ஒரே தலைப்பில் ஆயிரம் புத்தககங்களை வைத்துக்கொண்டு திணறுவதைவிட பத்து தலைப்புகளில் நூறு புத்தக்கங்கள் என்பது விற்பனைக்கும், புதிய எழுத்து வாய்ப்புகளுக்கும் வரப்பிரசாதம் தானே!

ஆயிரம் பிரதிகள் படைப்புகள் விற்றுத்தீர நீண்டகாலம் எடுக்கிறது என்பது சமூகச் சாபம் தான் என்றாலும், Print-On-Demand முறையில் அச்சிடப்படுவதால் சில நூல்கள் யானை விலை, குதிரை விலை இருப்பதையும் யோசிக்க வேண்டிய தருணம்.  கோடிக்கணக்கில் வியாபாரம் நடந்தாலும், வாங்கப்படும் புத்தகங்கள் வாசிக்கப்பட்டு விடுகின்றனவா எனும் கேள்விக்கு பதில் சொல்ல வாசகர்களுக்கு துணிவில்லை. வாங்கிக் குவிக்கும் வாசகர் படை ஒருபுறமென்றால், வந்து செல்லும் மாணவர் படை மறுபுறம்.புத்தகத் திருவிழாவின் குறிப்பிடத்தகுந்த அம்சம் மாணவ, மாணவியர்களின் வருகை. வார நாட்களின் பகற்பொழுதுகளில் சீருடைகளில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் கூட்டம் மொய்க்கும். ஒவ்வொரு அரங்காகப் புகுந்து புகுந்து ஓடிக்கொண்டேயிருப்பார்கள். நிதானமாய் புத்தகங்களைத் தேடி வாங்குவோருக்கு அந்தப் பிள்ளைகள் கூட்டம் சற்று அயர்ச்சியைத் தரும்.

விற்பனையாளர்களுக்கும் கூட்டம் மொய்ப்பதாகத் தோன்றும், ஆனாலும் அந்தப் பிள்ளைகள் பெரிதாய் ஒன்றும் வாங்க மாட்டார்கள். உண்மையில் மாவட்டத்தின் பல எல்லைகளிலிருந்தும் அப்படியான பிள்ளைகளை அழைத்து வருவதில் இருக்கும் உழைப்பும், சிரமமும் மிகக் கடினமானது. ஆனாலும், இந்தப் பிள்ளைகளின் வருகைதான் புத்தகத் திருவிழாக்களின் ஆணி வேர்.

இந்த அரங்குகளும், பிரமாண்டங்களும், புத்தகக் குவியல்களும் அவர்களின் மனதில் ஆழப்பதிய வேண்டிய சரியான காலத்திலேயே அவர்கள் அங்கு சுற்றவிடப் பட்டிருக்கிறார்கள். இதன் அருமை இன்று தெரியாது. எதிர்காலத்தில் புத்தகச் சந்தைகளுக்குள் புகுந்து வேட்டையாட ஊன்றப்படும் விதையே, ஆங்காங்கு சிற்சில சிரமங்களையூட்டும் இந்த வருகைகள்.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிள்ளைகளுக்கு ஓர் ஆசிரியர் எனப் பொறுப்பெடுத்து, மொத்த அரங்குகளை ஒவ்வொரு குழுவிற்கும், இவையிவையென தனியாகப் பிரித்து, அந்த அரங்குகளுக்கு மட்டும் அழைத்துச் சென்று, அங்கிருக்கும் புத்தகங்களை அறிமுகப்படுத்துவது மட்டுமே எதிர்காலத்தில் பயனளிக்கும் எனத் தோன்றுகிறது. ஆசிரியர்களால் இயலாவிடில் தன்னார்வலர்களின் உதவியை அவர்கள் கோரலாம்.

இப்படியான திட்டத்தைச் செயல்படுத்த முதலில் ஆசிரியர்களுக்கு எழுத்தாளர்கள், புத்தகங்கள், பதிப்பகங்கள், அரங்குகள் குறித்து ஓரளவேணும் தெரிந்திருக்க வேண்டும். எங்களுக்கு இருக்கிற வேலைகளில் இதெல்லாம் சாத்தியமாவென ஆசிரியர்கள் சலித்துக் கொள்ளக்கூடாது. பாடப்புத்தகங்களோடு, தொலைக்காட்சிகளோடு, மாய விளையாட்டுகளோடு பிள்ளைகள் சுருங்கிப் போகும் சாத்தியமுள்ள சூழலில், இம்மாதிரி மாற்று யோசனைகள் மட்டுமே மாணவர்களின் வாசிப்புத்திறனையும், தேடலையும் அதிகரிக்கும்.

கல்லூரி மாணவர்கள் வருகை இருவேறு பக்கங்களைக் கொண்டது. குழுவாய் அரங்கிற்குள் நுழைந்து வேகவேகமாக ஆளுக்கொரு புத்தகத்தைக் கையில் எடுக்கவும், அட இவ்வளவு ஆர்வமா புத்தகத்தை அள்ளுகிறார்களே என ஆச்சரியப்பட்டேன். அடுத்த கணம் வரிசையாக நின்று படம் எடுத்துக் கொண்டனர். எடுத்த அதே இடத்தில் மீண்டும் வைக்காமல்கண்டபடி வைத்துவிட்டு கடகடவென வெளியேறினார்கள். இதுவென்ன யுக்தியென ஒன்றுமே புரியவில்லை. திக்கித்து நின்றேன்.

மிகக் குறைவாகவே குறிப்பிட்ட சில புத்தகங்களைத் தேடி வரும் இளைஞர்களைக் காண முடிந்தது. இளங்கலை முதலாமாண்டு தமிழிலக்கியம் படிக்கும் கல்லூரி மாணவி நீளமான ஒரு பட்டியலோடு புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்தார். அந்த மாணவி வகைவகையான தெரிவுகளோடு வந்து புத்தகங்களை வேட்டையாடுவது பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. இந்த நம்பிக்கை தரமிகு ஒரு விதைக்கு நிகரானது.

தனி மரமாக வளர்ந்தோங்கி நிற்கும். வளர்ந்தோங்கி தனித்து நிற்கும் மரத்தை நோக்கி ஒரு கட்டத்தில் பறவைகள் வரும். அந்தப் பறவைகள் கடத்தி வரும் விதைகளில் அங்கொரு வனம் உருவாகும் என்றெல்லாம் என் கற்பனையை நீட்டிக்கொண்டிருந்தேன்.

உடன் வந்திருந்த நண்பர் இரு மருங்கிலும் அரங்குகளில் குவிந்து கிடக்கும் புத்தகங்களைக் காட்டி, “பாருங்க... எத்தன பொஸ்தகம்னு... இதையெல்லாம் எத்தனையாளுக எழுதியிருப்பாங்க!என்கிறார். எந்தப் புத்தகமாக இருந்தாலும், அதற்கு மனம், எழுத்து, உழைப்பு உள்ளிட்ட எத்தனையோ தேவைப்பட்டிருக்கும்தானே! அந்த உழைப்பு மனதை ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றது.

மாலை நேரத்து சிந்தனை அரங்கில் பேச்சாளர் ஒருவர், ‘ஒழுகும் குடிசையில் உன் மேல் ஒரு சொட்டுத் தண்ணீர் படாமல் காப்பவள் தாய். ஒருவேளை உன் மேல் ஈரம் பட்டால் அது அவளின் கண்ணீராக இருக்கும்என்கிறார். கூட்டம் கை தட்டுகிறது. மகனை அடித்துவிட்டு, மனம் முழுக்க ரணத்தோடு அமர்ந்திருப்பவர் அப்பா. அடி வாங்கிய மகன் தூங்கும்போது, அவன் தலையைக் கோதி கண்ணீரால் நனைப்பவர்தான் தந்தை என்பது உங்களுக்குத் தெரியுமா?’ கூட்டம் வேறென்ன செய்யும்... அதேதான்... கை தட்டுகிறது. அந்தப் பேச்சாளரை கால யந்திரத்தில் வைத்து, அவர் தேங்கி நிற்கும் காலத்திலிருந்து, குறைந்தபட்சம் ஒரு கால் நூற்றாண்டு காலமேனும் முன்னகர்த்திவிட்டுவிட வேண்டுமெனத் தோன்றுகிறது. அவரை மட்டுமல்ல, கூடவே அந்த கை தட்டி ரசிகர்களையும் தான்.

ஒரு வாசகனை உருவாக்கிவிட, ஒரு புத்தகத்தை வாசகனுக்கு அறிமுகப்படுத்திட மற்றும் வாசகனின் அருகாமைக்கு புத்தகங்களை நகர்த்திவிட எனும் நோக்கங்களே இப்படியான புத்தக திருவிழா, காட்சி, சந்தைகளின் தலையாயப் பணி. எந்தப் புத்தகமும் படிக்கப்படாமலோ, படிக்கப்பட்ட பின்போ எவ்வகையிலும் ஓய்வெடுக்கக் கூடாது. அப்படி ஓய்வெடுக்க மறுக்கும் ஏதோ ஒரு புத்தகம்தான் புக்ஸ் படிக்கிறவங்கதான் உருப்படுறாங்களா?” எனும் கேள்வியை முறித்துப் போடும் ஆயுதமாக இருக்க முடியும். அறியாமைப் போர்க்களத்தில் புத்தகமெனும் ஆயுத்தத்தைப் பாவிக்காமல் எதன் துணைகொண்டு யுத்தத்தைத் தொடர்வது தோழா!?

-

நன்றி : நூல்வெளி

ஒரு பொழைக்கத் தெரியாதவனின் கதை - புத்துமண்ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால் ஒரு பொழைக்கத் தெரியாதவனின் கதைதான் புத்துமண். அப்படியான பொழைக்கத் தெரியாதவனின் கதையைப் படிப்பதில் என்ன பெரிய ஆர்வம் கிளர்ந்துவிடப் போகிறது எனத் தோணலாம். இந்தசோ கால்டுபொழைக்கத் தெரியாதவனுக்கு இன்னொரு பெயர் சூட்டினால் என்ன?. சரி போராளி என்று சூட்டிடலாமா?. அந்தப் போராளிகள் அப்படியொன்றும் அந்நியமானவர்கள் அல்ல. நம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள்தான். பொதுவாக போராளிகளிடம் தோல்விகள் இருக்கும். வலி இருக்கும். உறுதி நிரம்பியிருக்கும். நோக்கம் கூர்மையாய் இருக்கும். அவஸ்தை இருக்கும்குடும்பம் தனித்து இருக்கும். அதையெல்லாம் விட அவர்களிடம் போராட்டம் தொடர்ந்து இருக்கும்.

மிக வேகமாய் தன்னை வளர்த்துக்கொண்ட திருப்பூரின் வரைபடத்தில் ஒரு நுண்ணிய சிறு கோடுதான் புத்துமண் நாவலில் வரும்மணியன்’. மணியன் மாதிரியான கோடுகள்தான் மதயானைபோல் எதிர்கொண்ட எல்லாவற்றையும் சிதைத்தோடும் ஒரு தொழில் நகரத்தில் அவ்வப்போது கேள்விக்குறியாய் கொம்பு முறுக்கி நிற்பவை. வளர்ச்சி முறித்துப்போட்ட கிளைகளுக்காகவும், நசுக்கிப்போட்ட தளிர்களுக்காவும் எழும்பும் இவர்களின் குரல், வளர்ச்சி முழக்கத்தில் பெரும்பாலும் தேய்ந்து போவதுதான் முரணான அரண்.

மனித உரிமைக்காகவும், குத்துயிரும் குலையுயிருமாய்க் கிடக்கும் நொய்யலைப் பாதுகாக்கவும், சுமங்கலித் திட்டத்தில் நசுக்கப்படுவதைத் தடுக்கவும் என அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாகக் காட்டப்படும் ஒரு நகரத்தின் பாய்ச்சலில் எதிர்நீச்சல் போடுகிறார்.

அவருடைய வாழ்க்கையில் யதார்த்தமான பாத்திரங்களாய் வரும் மனைவி சிவரஞ்சனி, மகள் தேனம்மை, தனது எம்.பில் ஆய்வுக்காக தேடிவந்த ஜூலியா மற்றும் மணியனின் வீடு உள்ளிட்டோர் நிறைய உணர்த்துகிறார்கள். மாற்றங்களுக்குள் ஆட்படும் தேனம்மை வெகு இயல்பாய் நம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்களின் பிம்பமாய் இருக்கிறார்.

ஆச்சரியக்குறிகளை மட்டுமே விரும்பும் சில முதலாளிகளுக்கு கேள்விக்குறியாய் இருக்கும் மணியன் உறுத்தலாய்ப் படுகிறார். அவரை வளைக்க அல்லது வதைக்க அவர்களுக்கு ஆஜானுபாகுவான நைஜீரிய இளைஞன் விலைக்குக் கிடைக்கிறான். நைஜீரிய இளைஞர்கள் இதற்கும் பயன்படுகிறார்கள் அல்லது பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது அவசரத்திலும் அவசரமான ஒரு எச்சரிக்கை. வதையில் சிக்கிய மனிதனை வாதை ஆட்கொள்கிறது.

இடையில் வரும் மருத்துவர் ஜீவானந்தத்தின் கடிதமும், இறுதியில் தொகுக்கப்பட்ட மணியனின் கை பேசியில் சேர்ந்துகிடந்த குறுந்தகவல்களும், அவர் சேகரித்து வைத்திருந்த குற்றங்களின் செய்திகளும் நிறைய உணர்த்துகின்றன.

அத்தியாயங்களின் தொடக்கத்தில் இருக்கும் லட்சுமணனின் ஒடியன்கவிதை வரிகள் வாசிப்பின் தன்மையை அடர்த்தியாக்குகின்றன. எழுத்து வடிமற்ற இருளர்களின் கவிதைகளை தமிழ் வரிவடிவத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒடியன்தொகுப்பு வாசிக்க வேண்டிய ஒன்று. அதிலிருக்கும் கவிதைகளை மிகப் பொருத்தமாய் அத்தியாயங்களின் தலையில் சூட்டியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன்.

//
ஆட்டுக்கு நல்ல தீனி கிடைக்க வேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுத்து ரிசர்வ் காட்டில் மேய்க்கிறாள் கோசி. தான் நன்றாக மேய்ந்தாலும் அவளுக்கு என்ன லாபம் எனக் கேட்கிறது ஆடு. உனக்கும் இல்லாமல், காட்டு நரிக்கும் இல்லாமல் ரேஞ்சர் வீட்டுக்கு விருந்தாகப் போகிறேன். செம்போத்து குறுக்கே பறக்கும் கெட்ட சகுனமும் தெரிகிறது. எனவேகோசி என்னைக் கொன்று தின்னு இப்பவேஎன்கிறது ஆடு
//

மற்றும்

//
அரசாங்க லோன் மூவாயிரம். அதற்கு செய்த செலவு மூவாயிரத்து அய்நூறு. இப்போது அரசாங்கம் எனக்குக் கடன்காரன்
//

அத்தியாயங்களை
, அதிலிருக்கும் மனிதர்களை, சூழலை, நிலையை எதிர்கொள்வதற்கு இவை நம்மை வெகுவாகத் தயார்படுத்துகின்றன என்றும் சொல்லலாம்.

நாவலை முடித்து விழிகளை இறுக்க மூடி, ஆழ்ந்து மூச்சிழுத்து ஆசுவாசப் படுத்திக் கொள்கையில் முன் அட்டை கண்ணில் படும். பார்வை கூர்மைப்படும். வெளுத்த ஒரு உள்ளங்கை முழுவதும், விரல்களின் நீளம் வரைக்கும் புத்துமண் அப்பியிருக்கிருக்கும் படம் மனதில் அப்பிக்கொள்ளும். விரல் நுனிகளால் அதை வருடும்போது எங்கோ ஏதோ ஒரு இளகுகிறது, ஏதோ ஒன்று உதிர்கிறது. பொதுவாக கரையான் கட்டியெழுப்பும் புற்று எவரும் கற்பனை செய்திடாத ஒரு ஈரத்தை தனக்குள் கொண்டிருக்கும். புதினம் முழுக்கவுமே ஈரத்தின் நசநசப்பு மனதிற்குள் நீடிக்கிறது.

புத்துமண் அளவில் கனமான நாவல் அல்ல. கனமற்ற அந்த நாவலின் கடைசிப் பக்கங்களை நாம் எட்டும்போது மனது கனக்கும்.


புத்துமண்   |   சுப்ரபாரதிமணியன்   |   120 பக்கங்கள்   |  100 ரூபாய்உயிர்மை வெளியீடு

தகிக்கும் பனியுருண்டை
உள்ளங்கையில் அழுத்தி
விரல்கள் மடக்கிவிடப்பட்ட
தகிக்கும் பனியுருண்டை
நீ!

அந்த முத்தங்களை நாம்
கடற்கரையில்
புதைத்திருக்கலாகாது
ஓயாத அலை
வருடிக்கொண்டேயிருக்கிறது!

ஒளி பிடுங்கிச்செல்லப்பட்ட
இருள் வெளியெங்கும்
கவிதையாய்
உன்னை இட்டு
நிரப்பியிருக்கிறாய்
துழாவும் கைகளில்
பிடிபடும் வரிகளில்
பிரியத்தின் வாசனையுண்டு

பிரியத்தின் சுவட்டை
அழிப்பது
அத்தனை ளிதல்ல
நாவிலூறிய தேனின் சுவையை
நினைவிலிருந்து
அழிப்பதற்கு ஒப்பானது!