அதுவே போர் அதுவே விடுதலை





நான் சேகரித்து வைத்திருக்கும்
பிரியமிகு சொற்களில்
முல்லையின் வாசம்
நுரைத்துப் பொங்கிக் கொண்டிருந்தது

முத்தமும் மோகமும்
என்னவெனக் கிறங்கி கேட்ட
கணத்தில்தான் சொன்னேன்
அதுவே போர் அதுவே விடுதலை

கனகச்சிதமாய் உதிர்த்த
வரியொன்றின் உள்ளும் புறமும்
உன் பெயர் வரியோடிய
சொற்களை நிரப்பி வைத்திருந்தாய்

சடசடக்கும் அடைமழையில்
வெடவெடக்கும் குளிரில்
வேறெதும் கேட்கத் தோன்றவில்லை
காதோரம் கதகதக்கும்
கொஞ்சம் சொற்களைத் தவிர!

-

விடியலின் கதவு

படம் : சாமு க்ளிக்ஸ்


இரவின் வாசனையும்
பகலின் வெளிச்சமும்
மூச்சுக்காற்றில் மணக்க
மெள்ளப் புரள்கிறது
புது மலர்

புதிய வண்ணங்களைக்
சேகரித்துக் கொண்டிருக்கிறது
இமைகளுக்குள்
உறங்கும் உலகம்

கனவொன்றில்
கடவுளுடன் கதைக்கையில்
திறவும் சின்ன இதழ்களில்
விடியலின் கதவு திறக்கப்படலாம்
அப்போது
சிந்தும்
புன்னகையில்
உலகம் சிலிர்க்கும்
உயிர்கள் பூக்கும்
மொழியொன்று மெருகேறும்
இசையில் லயம் கூடும்!

-

இடம் பெயரும் மேகங்கள்



பத்து தினங்களுக்கும் மேலாகச் செல்லவேண்டிய ஒரு பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த அந்த இரவுப் பொழுதில்தான் அவர் என்னிடம் பேச வேண்டுமெனக் கேட்டார். அதற்குச் சிலநாட்கள் முன்புதான் என்னுடைய புத்தக வெளியீட்டில் கை குலுக்கி ஓரிரு நிமிடங்கள் பேசியிருந்தார். அது தவிர்த்து ஃபேஸ்புக்கில் அவரின் முகப்புப் படமும் பெயரும் கண்டிருக்கிறேன். மனதில் பதிந்துபோன பெயரும் முகமும் தான். ”வாழ்தல் அறம் என்றும், வாழ்தல் வரம் என்றும் சொல்கிறீர்கள், அது குறித்து உங்களிடம் பேச வேண்டும், எப்போது அழைக்கட்டும்என்பது போன்றுதான் அவரின் கேள்வி இருந்தது. மனது முழுக்க பயண ஏற்பாடுகளில் இருந்ததால் அதற்கு அப்போதே பதிலளிக்கலாமா, பின்னர் பதிலளிக்கலாமா என்ற குழப்பம் எழுந்தாலும், 'வாழ்தல் அறம்' குறித்துப் பேச விழைகிறார் என்பது உடனடியாக பதிலளிக்க உந்தியது.  



“நாளைக் காலை 11-12 மணிக்குள் நாம் பேசலாம்” என்றேன். அப்படியாகத் துல்லியமாக ஒரு நேரம் சொன்னதைக் கண்டு அவர் என்ன நினைத்திருப்பார் என்ற கேள்வி எழாமலும் இல்லை. இதுவரை எவரிடமும் பேசுவதற்கென்று அப்படியெல்லாம் நேரம் குறிப்பிட்டுச் சொன்ன அனுபவமில்லை. ஆனாலும் அப்போது பேச முடியாது. அதேபோல் அடுத்த பத்து தினங்களுக்கும் பேச முடியாது. ஆனால் அந்த காலை 11-12 மணி என்பது குடியகல்வு மற்றும் பாதுகாப்புச் சோதனைகள் முடிந்து காத்திருக்கும் ஒரு மணி நேரம். ஆகவேதான் அழுத்தம் திருத்தமாக அந்த நேரத்தைக் கொடுத்தேன்.

ஏற்கனவே அந்த ஒரு மணி நேரத்தில் அழைத்துப் பேசிவிட வேண்டுமென பதினொரு பேரின் பெயர்களை குறித்து வைத்திருந்தேன். எல்லாமே ஓரிரு நிமிடங்களில் அன்பு மற்றும் மரியாதை நிமித்தம் பேசிவிட விரும்பியவை. அவர் அழைத்தார். அவரின் பெயர், படம் தவிர்த்து அவர் குறித்து நானேதும் அறிந்திருக்கவில்லை. வழக்கமாய் இப்படி எவரேனும் பேச முனைந்திருந்தால், முடிந்தவரை அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டு நானாக ஒரு வடிவம் ஏற்படுத்திக் கொண்டு தயாராகியிருப்பேன். நேரமும் சூழலும் அப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கவில்லை.

தனது பெயரைச் சொல்லித் துவங்கியவர், வயது, குடும்ப உறுப்பினர்கள் என எனக்குள் ஒரு வரைபடத்தைத் தீட்டினார். சற்றேறக்குறைய என் தாயின் வயதுக்கு மிக நெருக்கத்தில் அவர் வயது இருக்கலாம். தான் பணியாற்றியதன் விபரங்கள், பிள்ளைகளின் கல்வி, குடும்பச் சூழல் என விரிந்தது உரையாடல். தமது வாழ்க்கைத் துணையுடன் நீண்ட காலமாய் இருக்கும் பிரச்சனைகள் குறித்து சற்று தணிந்த குரலிலும், அவஸ்தை நிறைந்த தொனியிலும் கூறத் தொடங்கினார். மனைவி குறித்துக் கணவனும், கணவன் குறித்து மனைவியும் சொல்லும் விமர்சனங்களை, குறைகளை நிறையக் கேட்டிருந்தாலும், அவரின் பிரச்சனையை அணுக முயல்வது எனக்கு சட்டெனக் கை வராததாகத் தோன்றியது. அதற்கு அவரின் வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். இத்தனை ஆண்டுகளுக்குமா இப்படியான பிரச்சனைகள் நீடிக்கும் என்ற கேள்வியும் காரணமாய் இருக்கலாம்.

பொதுவாக எனது பிரச்சனைகள் குறித்து எவரிடமும் அவ்வளவு எளிதாகப் பேசிவிடமாட்டேன். முழுக்க முழுக்க அது என் இயல்பு. அது எனக்குப் பிடித்தது. அதேபோல் மற்றவர்களின் பிரச்சனைகள் குறித்து என்ன ஏதென்று தோண்டித் துருவியும் கேட்கமாட்டேன். நட்புகளில் சிலர் தங்களின் பிரச்சனைகளைக் குறித்துப் பேசும்போது பொறுமையாகக் கேட்டுக்கொள்வேன். முடிந்தவரை குறுக்குக் கேள்விகள் கேட்பதையும், உடனடியாகத் தீர்வு சொல்வதையும் தவிர்ப்பேன். பல நேரங்களில் தமது பிரச்சனையைச் சொல்லி முடிக்கும்போதே அதற்கான தீர்வுகளை அவர்களே இனம் கண்டுகொள்வதையும் உணர்ந்திருக்கிறேன்.


       தமது பல பிரச்சனைகளை என்னிடம் பகிர்ந்துகொள்வதின் மூலமாக அமைதியடைவடைவதாக உணரும் நண்பரிடம் ஒருமுறை "எல்லாப் பிரச்சனைகளையும் புலம்பியே கரைக்கணும்னு நினைக்காதே" என்றேன். அது கடுமையான தொனியில் சொல்லப்பட்டதாக அவரால் புரிந்துகொள்ளப்பட்டது. காரணம், தமக்கு மிக நெருங்கிய ஒருவரைச் சந்தித்தபோது பரஸ்பரம் நலம் விசாரிக்க அவரின் நண்பர்அப்புறம் எப்படியிருக்கே, வீட்டில் எப்படியிருக்காங்க?” எனக் கேட்டபோது, 'நல்லாருக்கேன், நல்லாருக்காங்க' என்ற சம்பிரதாயமான பதிலைச் சொல்லாமல்வீட்ல ஒரு பிரச்சனைஎனத் துவங்க; “உனக்கு புலம்புறதே வேலையாப்போச்சுஎன முகத்தில் அடித்தது போலச் சொன்னதில், இவர் நொறுங்கிப் போயிருக்கிறார். அந்த 'புலம்புறதே வேலையாப்போச்சு' மற்றும் நான் கூறிய 'புலம்பியே கரைக்கணும்னு நினைக்காதே' இரண்டையும் ஒரே அலைவரிசையில் எடுத்துக்கொண்டு சுருங்கிப் போனார். நல்லவேளை தன் சுருக்கத்தையும் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.



நீ எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு நிகராகவோ, ஏறத்தாழ சமமாகவோ நானும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டித்தான் இருக்கின்றது. உதாரணத்திற்கு, எனக்கு தலை வலிக்கிறது என்றால், வலி எதனால்? அதை எவ்விதம் சரி செய்வது? என நான் யோசிக்கலாம். அல்லது அதற்கு சரியான நபரிடம் ஆலோசனை கேட்கலாம். அதை விடுத்து எதிர்ப்படுவோர் அனைவரிடமும் எனக்குத் தலைவலி, தலைவலி எனத் திரும்பத் திரும்பச் சொல்வதில் என்ன அடைந்துவிடப் போகிறோம்? பொதுவாக நீ சொல்வது நேர்மறையான சொற்களாக இருந்தாலும் அல்லது எதிர்மறையான சொற்களாக இருந்தாலும், நீ பேசும் வார்த்தைகளை அவர்கள் கேட்பதற்கு முன்பாக, உன் வாய்க்கு மிக அருகாமையில் இருக்கும் காது தான் முதலில் கேட்கிறது. பத்துப் பேரிடம் சொன்னால் பத்துப் பேரும் ஒவ்வொரு முறை தான் கேட்கிறார்கள். ஆனால் உன் காது பத்து முறை அதுவும் அவர்கள் கேட்டதை விட கூடுதல் சப்தத்தில் கேட்டிருக்கும். அளவுக்கு அதிகமாக புலம்புவதை தவிர்த்து விடு. அவ்வாறு தான் என் பிரச்சனைகளைக் கையாளுகிறேன்என்று விளக்கினேன்.


வாழ்க்கைத் துணையின் இயல்பு குறித்தும், இத்தனையாண்டுகளில் நடந்த சில குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகள் குறித்தும் தனது மனதில் இருக்கும் கனத்தை இறக்கிவைக்கும் முகமாய்ப் பேசிக்கொண்டிருந்தார். பிள்ளைகள் அனைவரும் நல்லதொரு கல்வி பெற்று சிறந்த வகையில் பணியாற்றிக் கொண்டிருப்பதையும் தெரிவித்தார். ஒவ்வொரு இடத்திலும் தான் பட்ட அவமானங்களை, தான் தடுக்கப்பட்டதை வலியோடு பகிர்ந்து கொண்டார். பெரிதாக குறுக்கீடு ஏதும் செய்யாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

மனித உறவுகள் பத்தி நெறைய எழுதியிருக்கீங்க. என்னோட பிரச்சனைகள எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியா சமாளிச்சுத் திணறிட்டிருக்கேன். சொன்னா நம்புவீங்களானு தெரியல, தற்கொலை செஞ்சுக்கலாம்னு கூட சில முறைகள் நெனைச்சிருக்கேன்என்கிறார். அவரின் வயதும், வலிகளும் என்னைத் தடதடக்க வைக்கின்றன. மேலும் சில கேள்விகள் ஆற்றாமைப் பதில்கள் என நிமிடங்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றன. இறுதியாகநான் எப்படி, வாழ்தல் வரம்வாழ்தல் அறம்னு எடுத்துக்கிறதுஎனக் கேட்கிறார்.

பிள்ளைகளின் இன்றைய வாழ்க்கை குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறாரா எனக் கேட்கிறேன். ஆம் என்கிறார். "ஏதோ ஒரு கணத்தில் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்த நீங்கள், அம்முடிவில் தயங்கிய கணம் வரமென்றால்இன்று வரை வாழ்ந்து பெற்ற பிள்ளைகளை வளர்த்து, ஆளாக்கி நல்லதொரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தது அறமெனக் கொள்கஎன்றேன்.

சற்று நிறைவாக, இலகுவாக உணர்வதை தன் விடைபெறும் சொற்களில் உணர்த்தினார். "தொடர்பில் இருப்பேன், எப்போதும் தொடர்பில் இருங்கள்" எனச் சொல்கிறார். வாழ்க்கைத் துணையோடு மீதியிருக்கும் வாழ்க்கையை சற்று இலகுவாக்கிக்கொள்ள ஒரு யோசனை கூறுகிறேன். முயற்சிக்கிறேன் என்கிறார். முயற்சிப்பார் என அப்போது நம்பினேன். இப்போதும் நம்புகிறேன். எப்போதும் நம்புவேன். என்னுடனான உரையாடல்கூட எவ்விதமான உடனடித் தீர்வுகளையும் எதிர்பார்த்து இல்லாமல் இருந்திருக்கலாம். கனத்த மேகமொன்று சிதறி நிலத்தில் தன் கனத்தை இறக்கிவைப்பது போன்றும் இருந்திருக்கலாம்.

இந்த வாழ்க்கையை எதன்பொருட்டும் இழந்துவிடாமல், அதன் அத்தனை பக்கங்களிலும் உள்ள அனைத்து விதச் சுவைகளையும் உணர்ந்து விட வேண்டுமென்பதில் இருக்கும் தீர்க்கம் இன்னும் கூடுகிறது. நிமிடங்கள் கடக்கிறது. விமானத்திற்குள் ஏறுகிறேன். எல்லாத் தொடர்பு சாதனங்களையும் அணைத்து வைக்க வேண்டுகிறார்கள். விமானம் எந்தத் திசையில் இருக்கிறதெனத் தெரியவில்லை. கொஞ்சம் நகர்ந்து, திரும்பி, ஊர்ந்து, விரைந்து, வேகமெடுத்து, சட்டென மேலேறுகிறது. பக்கவாட்டில் இருக்கும் சக்கரம் விடாமல் சுழன்று கொண்டேயிருக்கிறது.

சன்னல் வழியே நோக்குகிறேன். மதிய வெயிலில் பரந்த நிலம் பளிச்சிடுகிறது. இதுவரை பார்த்திராத பயணித்திராத நிலப்பரப்பு அது. வறண்ட மண். ஆங்காங்கே திட்டுத்திட்டாய் கொஞ்சம் மட்டுமே பசுமை. ஒரு பெருமழை பொழிந்து நிலமெங்கும் நீர் நிறைந்திருந்தால் எப்படியிருக்குமென மனதிற்குள் காட்சிகளை நிர்மாணிக்கிறேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் விமானம் இறங்கும் ஆயத்தத்தில் இருக்கிறது. அந்நிலமெங்கும் பசுமை படர்ந்து கிடக்கிறது. கனத்த மேகங்களில் விமானம் மோதி மெல்ல தடதடக்கிறது. இந்த மேகம் இடம் பெயர்ந்து அங்கு பயணித்தால் நன்றாகயிருக்குமெனக் கருதியபடி இறங்க ஆயத்தமாகிறேன்.

-

“நம் தோழி” செப்டம்பர் இதழில் வெளியான கட்டுரை