இடைவேளை






வெண் நிறக்கூரை
துப்பும் குளிரில்
உடல் நடுங்கியபடி
விபத்தில் தந்தையை இழந்துவிட்ட
தேநீர் பரிமாறும் ஒடிசாக்காரன்
ஊருக்குச் செல்ல
ஒவ்வொரு மேசையாக
வசூலித்துக் கொண்டிருக்கிறான்

மழை பெய்யும் ஓசைபோல்
சரசரவெனச் சப்தம் கேட்கிறது
வெளியில் மழை பெய்வதாய்
துள்ளுகிறது மனம்

ஊரிலும் இதே மழையிருந்தால்
பிழைத்துக்கிடக்கும் ஒன்பது தென்னைக்கு
லாரித் தண்ணீர்
வாங்க வேண்டியிருக்காது

வேலையில் மூழ்கியிறுகி
மூச்சுத்திணறுமொரு கணத்தில்
சிகரெட்டொன்றில் தளர
வெளியேறுகையில்
கத்திரி வெயிலில்
துடித்துக்கிடக்கிறது தரை

கண்களில் நிரம்பும் வறட்சியில்
மனதிற்குள் சுருங்கும்
மழை ஈரத்தையும்
மண் வாசனையும்
எப்படி இழுத்துப்பிடிப்பதெனத்
தெரியாமல் தவிக்கையில்
அலுவலக நுழைவாயிலருகே
அந்த ஒடிசாக்காரன்
அவன் சாயலையொத்த ஒருவனோடு
உக்கிரமான சண்டையில் இருக்கிறான்

-