இலங்கையில் ஐந்து நாட்கள் - 4



இலங்கை வந்திருந்ததன் நோக்கத்தில் 90% சதவிகிதம் நிறைவாய்க் கடந்துவிட்ட நிம்மதியில் அந்த சனி இரவு கனமற்றதாய் இருந்தது. மட்டக்களப்பின் விடியல் ஆச்சரியமும் அதிசயமுமானது. அவர்களின் நேரம் இந்திய நேரமே என்றாலும் மட்டக்களப்பு இலங்கையின் கிழக்குக் கோடியில் இருக்கின்றது. காலை 5.30 மணிக்கு வெளிச்சம் சுள்ளென்று அடிக்கிறது. அவர்கள் இரவை அணுகும் விதமும் அலாதியானது. இரவு 9 மணிக்கு நகரமே வெறிச்சோடிப்போகிறது. உணவகங்களில் அதற்கு மேல் உணவு கிடைப்பதில்லை. விடியலில் சரியாக எழுந்து முன்னிரவுப் பொழுதில் உறங்கிவிடும் ஒரு காலத்திய வாழ்க்கையை அவர்கள் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 



ஞாயிறு காலை அங்கிருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள். அது சுனாமியால் பாதிக்கப்பட்ட கோவில். அருகிலேயே புதிதாக ஒரு கோவில் உருவாக்கப்பட்டு சாமி கடலைப் பார்க்கும் வண்ணம் வைத்திருக்கிறார்கள்.

அதன்பின்னர், கல்லடியில் ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு கொழும்பு திரும்ப வேண்டும். போர், சுனாமி போன்ற காரணங்களால் வாழ்க்கைத் துணையை இழந்த பெண்கள்பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி சங்கம்எனும் அமைப்பில் சுயதொழில் செய்து வருகிறார்கள். இந்திய அரசாங்கம் அவர்களை குஜராத்திற்கு அழைத்து வந்து தையல் மற்றும் ஆடை வடிவமைப்பு பயிற்சியளித்து, அவர்களுக்கு தையல் இயந்திரம் அளித்து சுயமாய் தொழில் செய்யவும், வாழவும் வழிவகுத்திருக்கிறது



வாழ்க்கையின் மிகக் கடுமையான சவால்களை எதிர்கொண்டு, தனித்த பாதையில் நடைபோடும் அவர்களின் தன்னம்பிக்கையும் உழைப்பும் கண்டு வியப்பாக இருந்தது. சிறிது நேரம் அவர்களோடு, தையல் தொழில், துணி கொள்முதல், வியாபாரம், இன்றைய வாழ்க்கைநிலை ஆகியவற்றை மட்டும் பொதுவாக கேட்டுவிட்டு உரையாற்றினேன். ஒரு வார்த்தைகூட தயாரிப்பின்றி பேசிய முதல் கூட்டம் அது. அவர்களின் கண்களில் தெரியும் நம்பிக்கையும், ஆற்றலுமே அரை மணி நேரம் என்னை மிக இயல்பாக பேசவைத்தது.

திட்டமிட்டிருந்த கடமைகளில் 100% நிறைவேறிவிட்டது என்ற மகிழ்ச்சியோடு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை துவங்கினோம். தோரயமாக ஆறு மணி நேரம் ஆகலாம் என ஓட்டுனர் தெரிவித்தார். இரவு மூன்று மணிக்கு சென்னைக்கு விமானம்.

மனது கடந்து போயிருந்த நான்கு நாட்களின் ஓட்டம் குறித்து அசைபோட ஆரம்பித்தது. நான்கு நகரங்கள், மூன்று கூட்டங்கள், இரண்டு முழுநாள் பயிலரங்கு, புதுக்குடியிருப்பில் பார்த்த வார் மியூசியம், சந்தித்த ஒரு போராளி தம்பதியினருடன் உரையாடல், ஆயிரம் கி.மீ தொலைவுக்கும் மேலான சாலைப் பயணம் என எல்லாம் கலந்த சற்றே கனத்த நிம்மதியான மனநிலை. ஏற்ற பணியை திடமாக முடித்திருந்த பெருமிதம் பெரும் ஊக்கமாய் இருந்தது.

சமூக வலைதளங்களால் என்ன கிடைத்துவிடப்போகிறது என்ற மேம்போக்கான கேள்விக்கான பதிலுக்கான விடையாக நான் இந்த இலங்கைப் பயணத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். நிறைவான பயிலரங்கிற்கும் பயணத்திற்கும் பேருதவியாய் இருந்த மஞ்சுபாஷினியின் நட்பும்கூட ஃபேஸ்புக் வாயிலாக கிடைத்ததே. பயிலரங்குகளில் உடனிருந்து, உடன் பயணப்பட்டு என இந்தப் பயணத்தில் அவர் எடுத்துக்கொண்ட சிரமங்களும் உழைப்பும் நன்றிகளுக்கு அப்பாற்பட்டது.

மாலை கொழும்பு சென்ற பிறகு நேரம் இருந்தால் ஒரு கூட்டத்தில் பேச முடியுமா என மஞ்சு கேட்டார். வந்த பணி நிறைவடைந்த மனநிலையில் இருந்த எனக்கு புதிதாய் ஒன்றை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இருந்தது. கடந்த நான்கு நாட்களுமே கிட்டத்தட்ட தேர்வு எழுதும் மாணவனின் மனநிலையை ஒத்ததுதான். குறிப்பாக கல்லடிக் கூட்டம் முடிந்தவுடன்மிஷன் கம்ளீடட்எனும் அக்கடா மனநிலை. குறித்த தேர்வுகளை எழுதிமுடித்தவனிடம் இன்னொரு கேள்வித்தாளைக் கொடுத்து எழுத முடியுமா எனும் சூழல் அது.  சரிங்ககொழும்பு போயிட்டு பார்த்துக்கலாம்என்று அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். அந்த முற்றுப்புள்ளியை அவர் காற்புள்ளியாக நினைத்துக்கொண்டிருக்கலாம்.

வாகனம் இலங்கையை கிட்டத்தட்ட குறுக்காக பிரிக்கும் மையப் பகுதியில் பொலன்னறுவை, தம்புள்ள, குருணாகல, நீர்க்கொழும்பு வழியில் விரைந்து கொண்டிருந்தது. 11, 6 சாலைகள் மிகத் தரமாய் இருக்கின்றன. தம்புள்ளகுருணாகல இடையே சாலை விரிவாக்கம் செய்யப்படுவதால் சற்று அவதியான பயணம். மற்றபடி இலங்கையின் சாலைகள் மிகத் தரமான சாலைகள்தான்.

இலங்கையின் மையப்பகுதி மலை, காடு, பெரிய நீர்நிலைகள், ஆறு என திரும்பிய திசை தோறும் மிக அழகானதாய், செழிப்பானதாய், பச்சையை அடர்த்தியாக போர்த்தியிருக்கின்றது. நான்கு நாள் பயணத்தில் கிட்டத்தட்ட முக்கால் பகுதி இலங்கையை சாலை வழியே பயணித்தாகிவிட்டது. இதில் என்றைக்கு மறக்க முடியாத ஒரு நபர் ஓட்டுனர்அனுரா”.

வியாழன் அதிகாலையில் புறப்பட்டபோது பின்னிருக்கையில் தூங்கும் மனநிலையோடு அமர்ந்து கொண்டேன். அவர் வாகனம் ஓட்டும் விதம் ஏனோ பிடிக்கவில்லை. திடீரென சீறுவது, திடீரென வேகம் குறைப்ப, முன்னால் செல்லும் வாகனத்தை கடக்காமல் நெருக்கியபடியே செல்வது என கடுமையான பயணமாக, கலங்கடிக்கிற ஓட்டுனராகவே மனதில் பட்டார். ஒரு கட்டத்தில் உறக்கம் பிடிக்காமல் முன் இருக்கைக்கு இடம் பெயர்ந்தேன்.

சாலைகளை கவனிக்க ஆரம்பித்தேன். வேகமாகவும் மெதுவாகவும் செல்கின்ற காரணம் புரிபட ஆரம்பித்தது. இலங்கையின் நெடுஞ்சாலை முழுவதும் மிகத் தெளிவாக கோடுகள் போடப்பட்டிருக்கின்றன. வளைவுகளில் சாலை நடுவே தொடர் கோடுகள் போடப்பட்டிருக்கின்றன. மற்ற இடங்களில் இடைவிட்ட கோடுகள் வரையப்பட்டிருக்கின்றன. இடது பக்கம் பேருந்துகள் நிறுத்தம் என்பதைக் குறிக்கும் வகையில் இடது ஓரம் செல்லும் கோட்டில் ஒரு பெட்டி வடிவம் இணைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் கடந்து செல்லும் இடங்களில் குறுக்காக மஞ்சள் கோடுகள் போடப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட இடைவெளிகளில் தலைக்கவசம் அணிந்த போக்குவரத்துக்கு காவலர்கள் இருவர் நின்று கொண்டிருக்கின்றனர்.


இடைவிட்ட கோடுகள் இருக்கும் இடத்தில் மட்டுமே முன்செல்லும் வாகனங்களை முந்துகிறார். தொடர் கோடு போடப்பட்டிருக்கும் இடங்களில், அது ஆள் நடமாட்டமே இல்லாத வனமாக இருந்தாலும் வேகத்தைக் குறைத்து கோட்டிற்குள் உள்ளடங்கியே செல்கிறார். இருசக்கர வாகனத்தை கோட்டிற்குள் ஒதுங்க முடியாவிட்டால் கோடு முடியும் வரை மெதுவாகச் செல்கிறார். கோட்டை தாண்டியபிறகே வாகனம் சீறி தாண்டுகிறது. மனிதர்கள் கடப்பதற்காக குறுக்கு கோடுகள் போட்ட இடம் ஆள்நடமாட்டமே இல்லாத பகுதியாக இருந்தாலும் வேகத்தைக் குறைத்து விடுகிறார், வாகனங்களை ஒதுங்குவதில்லை. சாலையைக் கவனிக்க ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே, அவர் எத்தனை அற்புதமான ஓட்டுனர் என்பதைப் புரிந்துகொண்டேன். பயணித்த சுமார் 1200 கி.மீ பயணத்தில் சுமார் 15 முறைகூட ஹார்ன் அடித்திருக்கமாட்டார். ஒருபோதும் வாகனத்திலும் மோதிவிடுவது போலும், சடன் ப்ரேக் போட்டு நிலைகுலையச் செய்யவும்  இல்லை. ஒரே ஒரு முறை மட்டும் கை பேசியில் ஒரு அழைப்பில் நான்கைந்து நொடிப்பொழுது பேசினார்.



போக்குவரத்து விதிகளை முழுதும் மதிக்கும், அதை நேசிக்கும் திறன்வாய்ந்த, ஒழுக்கம் நிறைந்த ஒரு ஓட்டுனரால் மட்டுமே நான்கு நாட்கள் இரவு பகல் பாராத நீண்ட பயணங்களை நுண்ணியதொரு சங்கடமுமின்றி சாத்தியப்படுத்த முடியும். ஆகச்சிறந்த ஒரு சாரதியைப் பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும். இந்தப் பாராட்டைக்கூட அவர் அறிந்துகொள்ளவோ, படிக்கவோ சாத்தியமில்லை. காரணம் தமிழ் வாசிக்க, பேசத் தெரியாத ஒரு சிங்களர் அந்தஅனுரா

இலங்கையின் மொத்தப் பயணத்திலும் தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளை நான் பார்க்கவேயில்லை. பின்னால் அமரும் வயதான பெண்மணிகள் முதல் முன்னால் அமரும் சிறிய குழந்தைகள் வரை தலைக்கவசம் அணிந்தே பயணிக்கின்றனர். தலைக்கவசம் அணிவதால் தலையைச் சாய்த்து தோளில் அழுத்தியபடி செல்போன் பேசிக்கொண்டு போகும் ஆட்களைக் காண சாத்தியமில்லை. ஒரே ஒரு ஆள் மட்டும் தலைக்கவசத்திற்குள் செல்போனை சொருகிக்கொண்டு பேசிய படி சென்றதைக் கண்டேன்

கொழும்பினை நெருங்குகையில் கொழும்பு கூட்டம் பற்றிய விபரங்களைக் கேட்டேன். இரத்மலானை எனும் இடத்தில் இருக்கும் "சக்தி இல்லம்" என்ற சிறுவர் இல்லத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் "மனித நேயம்" என்னும் அமைப்பின் ஆதரவில் பராமரிக்கப் படுகிறார்கள். வசதி குறைந்த குடும்பக் குழந்தைகள், பெற்றவர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளென பலதரப்பட்ட 3 - 20 வயதுகளில் இருக்கும் மாணவ மாணவிகள் அவர்கள்.




மனிதநேய அமைப்பின் நிர்வாகியாகிய திருமதி. கைலாசபிள்ளை அலைபேசியில் பேசினார். அவர் குழந்தைகள் குறித்து பேசியதும், அவர்களுக்கான தேவைகள் குறித்து விளக்கியதும், என்னில் அதுவரையிருந்த தடுமாற்றங்களைத் துடைத்து முழுமனதாக ஒப்புக்கொள்ள வைத்தது. அங்கு சென்றபின்தான், தெரிந்தது புதன்கிழமை கொழும்பில் முதலாவதாய்ப் பேசிய கூட்டத்தில் அங்கிருந்து விடுதிக்காவலர்களும், பிள்ளைகளும் பங்கேற்றிருந்தனர் என்பது.



திருமதி. கைலாசபிள்ளை அவர்கள் கவனத்தில் கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்த தளங்களையொட்டியே அவர்களிடம் பேசினேன். ஒருவகையில் சரியான நேரத்தில் அவர்களுக்குத் தேவைப்படுபவை அதுதான் என்பதை பலதரப்பட்ட வயதிலிருந்த பிள்ளைகள் ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்ததில் புரிந்துகொண்டேன். தயக்கங்களுக்குப் பின்னே அமைந்திருந்தாலும் அவசியமான ஒரு கூட்டம்தான் அது என்பதில் மிகப்பெரிய ஒரு நிம்மதியும் மகிழ்ச்சியும்.

-

1 comment:

https://youtu.be/sARKE4RNNxI said...

அருமை தொடரட்டும் ......
உங்கள் பயணம் .....
vinodevaraj....