இலங்கையில் ஐந்து நாட்கள் - 3



ஆறு ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலுமாக சிதைக்கப்பட்ட கிளிநொச்சி நகர் ஏ-9 நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளில் பார்க்கும்போது பளிச்சிடும் ஒரு நகரமாய்த் தெரிகிறது. மிக அகலமான சாலையும், சாலையின் நடுவே நிற்கும் பெரிய கம்பங்களில் இரு பக்கமும் தலை கவிழ்ந்த விளக்குகளும் கற்பனையில் இருந்த கிளிநொச்சியைக் கலைத்துவிட்டு புதியதொரு நகரமாக பார்வை வழியே மனதிற்குள் சேமிக்க வைக்கின்றது. சாலையின் இருமருங்கிலும் அடர்த்தியாய் எழும்பியிருக்கும் கடைகள் கிளிநொச்சியை ஒரு பரபரப்பான நகராக வெளிச்சமிட முயற்சிக்கின்றன. நெடுஞ்சாலைகள் தவிர்த்த பகுதிகளில் இப்படியான சீரமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. போரின் வடுவாக கிளிநொச்சியில் வீழ்ந்துகிடக்கும் மிகப்பிரமாண்டமான ஒரு தண்ணீர் தொட்டி மட்டுமே கிடக்கிறது. ”இனியொரு அழிவுக்கு வாய்ப்பளிக்க மாட்டோம்” என்பதுபோன்ற வாசகமொன்று எழுதப்பட்டிருப்பதை சில நொடிகள் காண்கிறேன்.

பரந்தனிலிருந்து முதுகுக்குப் பின்னே சூரியன் மறையத் துவங்கும் அந்த மாலை பொழுதில் ஏ-35 நெடுஞ்சாலையில் கிழக்கு நோக்கி வாகனம் சீறுகிறது. சின்னச்சின்ன ஊர்கள் கடந்துபோகின்றன. சாலைகளின் இருபக்கமும் வளம் மிகுந்த வயல்வெளிகளாய்த் தென்படுகின்றன. வயலொன்றில் ட்ராக்டர் சேற்று உழவுப் பணியில் இருக்கிறது. இன்னும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு இரையாகாமல், குளங்களையும், ஏரிகளையும் நம்பியிருக்கும் வளமான பகுதி அது. சாலையோரங்களில் ஆங்காங்கே இந்திய அரசின் அசோகச் சின்னமிட்ட பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. வடக்கின் சீரமைப்புக்கான இந்தியாவின் திட்டங்கள் குறித்த பலகைகளாக இருக்கலாம்.

விஸ்வமடு கடக்கிறது. அப்போதுவரை எனக்கு அந்த வழியாகப் பயணிக்கப்போகிறோம் என்பது தெரியாது. கிளிநொச்சியிலிருந்து மட்டக்களப்பு செல்ல வேண்டும். நானாக எனக்குள் ஒரு வரைபடம் வரைந்து வைத்திருந்தேன். அதன்படி வவுனியா, அநுராதபுரம் வழியாகத்தான் போவோம் என நினைத்திருந்தேன். எந்த வழியாகப் போகிறோம் எனக் கேட்கிறேன். புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, ட்ரிங்கோ, பேட்டிக்லோ என ஓட்டுனர் சொல்கிறார்.

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு என்பதை கேட்டவுடன் என்னவோ ஒரு இருண்மை மனதைக் கவ்வுகிறது. இதெல்லாம் இறுதிக்கட்ட போர் நடந்த பகுதிகள் எனப் புரிகிறது. உடன் வருபவர் இறுதி யுத்தத்தின் பின்னால், கெடுபிடிகள் தளர்த்தப்பட்ட பிறகு புதுக்குடியிருப்பில் இருந்த புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீட்டை வந்து பார்த்த அனுபவத்தை விவரிக்கிறார். நிலமட்டத்திற்கு மேல் மிகச் சாதரணமாய்த் வீடு தெரிந்தாலும், தரைக்குக் கீழே மிகப்பாதுகாப்பாய் விரிந்திருந்ததை, சுவர்கள் தடிமனாய், மிகப் பாதுகாப்பானதாய் இருந்ததைக் கண்டு தெற்கிலிருந்து வந்த மக்கள் வியந்ததாகவும், 80 அடி ஆழம் கொண்டிருந்த பெரிய நீச்சல் தடாகம் ஒன்று இருந்ததாகவும், அது கடற்புலிகள் பயிற்சி பெறுவதற்காகப் பயன்படுத்தப் பட்டதாகவும் சொல்கிறார். புலிகளின் கட்டுமானங்கள் கற்பனையே செய்துபார்க்க முடியாத அளவிற்கு இருந்ததை பார்த்தோர் எல்லோரும் வியந்ததாகக் கூறுகிறார்.

அந்தப் பகுதியை பார்த்துவிட வேண்டுமெனும் தவிப்பு கூடுகிறது. செல்லமுடியுமா எனக் கேட்கிறேன். நேரம் ஆகிவிட்டபடியால் செல்லமுடியாது என்றும் மேலும் அங்கு ஒன்றுமே இப்போது இல்லையென்றும் சொல்கிறார் ஓட்டுனர். வடக்கில் தமிழ்கூட்டமைப்பின் வெற்றிக்குப் பிறகு அந்த வீடு நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் இலங்கை அரசு அப்படி ஒரு வீடு மற்றும் ஆழமான தடாகம் ஆகியவை இருந்ததற்கான சுவடுகளே இல்லாமல் அழித்துவிட்டதாகவும் சொல்கிறார். ஏதேதோ நினைவுகள் நிரம்பித் தத்தளிக்க, இறுகிய மனதோடும், மிக மெல்லிய நடுக்கத்தோடும் அமர்ந்திருக்கிறேன். 



புதுக்குடியிருப்பு தாண்டியபிறகு ஓட்டுனர் வேகத்தை குறைக்கிறார். வலது பக்கம் ஒரு ராணுவக் குடிலும், இடதுபக்கம் நம்மூர் தீம் பார்க் நுழைவாயிலை நினைவூட்டும் ஒரு பிரமாண்டமான நுழைவு வாயிலும் தெரிகிறது. நுழைவு வாயிலருகே வாகனத்தை நிறுத்த எதிர்பக்கத்திலிருந்து ராணுவ வீரர் ஒருவர் வருகிறார். இருவரும் சிங்களத்தில் ஏதோ பேசுகிறார்கள். ஓட்டுனர் ’ஆறு மணிக்கு மேல் அனுமதி இல்லையாம்’ எனச் சொல்லிவிட்டு, ’தமிழில் எதும் பேசாதீங்க’ எனச் சொல்லிவிட்டு இறங்கிச் செல்கிறார். பின்னால் வந்து நிற்கும் ஒரு ராணுவ வாகனத்தில் இருப்பவர்களுடன் ஏதோ பேசுகிறார். திரும்பிவந்து ‘சீக்கிரம் போய் பார்த்துட்டு வாங்க, எதும் பேசாம பார்த்துட்டு வந்துடுங்க’ அனுப்புகிறார். நுழைவு வாயிலின் இடப்புறம் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதப்பட்ட ”வார் மியூசியம்” என்ற பலகை தென்படுகிறது. பொதுவாக அனைத்து இடங்களிலும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என எழுதப்பட்டிருந்தாலும், வார் மியூசியம் என்பதில் மட்டும் தமிழ் தவிர்க்கப்பட்டு சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது.

உள்ளே கண்ணுக்கெட்டிய தொலைவிற்கு புலிகள் பயன்படுத்திய பலவிதமான படகுகள், போர் தளவாடங்கள் நிலமெங்கும் பரவிக்கிடக்கின்றன. நீருக்குள் மூழ்கிக் கிடப்பதுபோலவும், மூச்சு முட்டுவதுபோலும் ஒருகணம் உணர்கிறேன். விதவிதமான வடிவங்களில், விதவிதமான அளவுகளில் கற்பனையே செய்ய முடியாத அளவிற்கு, வரிசையாக படகுகள் எண்கள் இடப்பட்டு கிடத்தப்பட்டிருக்கின்றன. சிறிய நிலப்பரப்பிற்குள் இருந்துகொண்டு, இதையெல்லாம் எப்படி உருவாக்கி இருப்பார்கள் என்பதை கற்பனை செய்யவே முடியாத ஆச்சரியங்களோடு ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு நகர முடியாமல் மலைத்து நிற்கிறேன். விதவிதமான வடிவத்தில் குண்டுகளும், நீர்மூழ்கி சாதனங்களுமென திசைகள் தோறும் பரவிக் கிடக்கின்றன.  அத்தனை உருவாக்கங்களும், உழைப்புகளும் இறுதியில் ஒரு இயக்கத்தின் தோல்வியின் அடையாளமாய், ராணுவ வெற்றியின் முழக்கமாய் கிடக்கின்றனவே எனும் குமைச்சல் உலுக்குகிறது. தங்களின் ஆளுகைக்குள் இருந்த சிறிய நிலப்பரப்பில், கடலை மட்டுமே உலகின் வாசலாக வைத்துகொண்டு எப்படி இத்தனை படகுகளை, இத்தனை கருவிகளை புலிகளால் உருவாக்க முடிந்தது எனும் ஆச்சரியத்தில் தத்தளிக்கிறேன். அப்படியான உருவாக்கங்களுக்குப் பின்னால் இருந்த அறிவும், தெளிவும் குறித்து நினைக்கவே சிலிர்க்கிறது. ஆனாலும் ஆச்சரியங்களும், சிலிர்ப்புகளும் ஒரு கடும் வருத்தத்திற்குள்ளேயே தோய்ந்து போவதையும் கசப்புடன் உணரவும் முடிந்தது.

வார் மியூசியம் அருகே ஒரு குளத்தின் மையத்தில், ராணுவ வெற்றியைக் கொண்டாடும் பிரமாண்டமான சிலையொன்று இருப்பது அரை இருளில் தெளிவற்றுத் தெரிகிறது.

இலங்கையில் ஒட்டுமொத்தமாகப் பயணித்ததில் அகலத்தில் சற்று குறைவாக இருந்தாலும் ஏ-35 சாலைதான் மிக மிக நேர்த்தியான சாலை என்பேன். வாகனத்தில் மிகச்சன்னமான குலுங்களைக்கூட உணர்த்திடாத சாலை. மனது குலுங்க ஆயிரமாயிரம் காரணங்களும் நினைவுகளும் காலத்திற்கும் இருக்கும்போது, உடல் குலுங்காவிட்டால் என்ன?. மிகச்சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்பகுதியெங்கும் எழுந்தடங்கிய மரண ஓலங்களும், பறிக்கப்பட்ட உயிர்களும், சிதைக்கப்பட்ட உடல்களும் குறித்து நினைக்க மனது இன்னும் வேகமாகக் குலுங்குகிறது.

வனப்பகுதி போல் ஒரு இடத்தைக் கடக்கிறோம். இடது புறச் சாலையோரம் சுமார் நூறு மீட்டர் தொலைவிற்கு ஒரு குடில் என ராணுவத்தினர் துப்பாக்கியோடு அமர்ந்திருப்பதையும் காண முடிந்தது. 2010ல் தாண்டிகுளத்திலிருந்து ஓமந்தை வரை ஏ9 சாலையில் பயணித்தபோதும் இதே போன்று பார்த்தது நினைவிற்கு வந்தது. வெளியிலும், மனது முழுக்கவும் இருள் சூழ பாதை தீர்ந்துகொண்டேயிருந்தது. முகப்பு விளக்கோடு வாகனம் விரைந்துகொண்டிருக்கிறது. பயணம் நீண்டு கொண்டிருந்தது. 




















-

2 comments:

Indhu said...

நேரில் பார்த்தது போல ஒரு அனுபவம்

ஆரூர் பாஸ்கர் said...

மனதை உலுக்குகிறது..