இலங்கையில் ஐந்து நாட்கள் - 1



எல்லாமே வியப்பாகத்தான் இருக்கின்றது. திடீரென திட்டமிட்ட பயணம், அதில் மிகப்பெரிய செயல்திட்டங்கள். நான்கு இரவுகளும், நான்கரை பகல்களும் கொண்டிருக்கும் அந்த தருணத்தில் நாட்டின் முக்கால் பாகத்தை பயணித்துவிட வேண்டும். தினந்தோறும் ஒரு கூட்டம் அல்லது பயிற்சி வகுப்பு என விமானம் ஏறும்போதே மனது முழுக்க நிலை கொள்ளாமல்தான் இருந்தது. மதுரை விமான நிலையத்தில் விமானத்திற்காக பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டு இறக்கிவிடப்பட்டபோது பொம்மை போன்று ஒரு குட்டி  விமானம் நின்றிருந்தது. நான் இதுவரை பயணித்ததில் மிகச்சிறிய விமானம் அது. 



பகல் நேரப் பயணம் என்பதாலும், சிறிய விமானம், குறைவான உயரம் என்பதாலும் மதுரையிலிருந்து கொழும்பு நோக்கிக் கிளம்பிய விமானத்திலிருந்து அது பறந்து செல்லும் பாதையெங்கும் விரிந்து கிடக்கும் நிலத்தைக் காண முடிந்தது. நமக்கு கீழே மேகமும், அதன் கீழே பரந்துவிரிந்து கிடக்கும் நிலமுமென கண்ட காட்சிகள் அத்தனையும் சிலிர்ப்பூட்டக் கூடியவைதான். மேகங்களுக்கடியே நிலப்பரப்பில் கிடக்கும் நிழலும் மிக அழகான ஒன்று. கடலும் நிலமும் கலக்கும் இடம்தான் எத்தனை அழகு. இந்திய தேசத்தின் நிலப்பரப்பு முடிந்து இரண்டு நாடுகளுக்குமிடியே இருக்கும் கடல் மேல் பஞ்சு மேகங்களில் பறந்துகொண்டிருந்தது விமானம்.



பசுமை போர்த்திய நிலப்பரப்பு இலங்கையின் வான் வெளிக்கு வந்திருப்பதை உணர்த்தியது. நோக்கும் திசைதோறும் பசுமையென தென்னை மரங்கள் நிறைந்து கிடந்தன. சமீபத்திய மழைக்கு வளைந்து நெளிந்து செம்மண் நிறத்தில் ஓடும் ஆறு கனத்துக் கிடந்தது. ஆற்று வெள்ளம், சாலைகள் என அழகிய ஓவியமாய் விரிந்துகிடக்கிறது அந்த தீவு தேசம்.

2010, 2014 மற்றும் இப்போது என மூன்றாவது முறையாக இலங்கைக்குள் கால் பதிக்கிறேன். அன்று மாலை துவக்கும் கூட்டத்திலிருந்து அடுத்தடுத்த நாட்களுக்கு நீண்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் கொஞ்சம் கனமாக என்னை எனக்கு உணர்த்துகிறது. வேறெதில் கவனம் செலுத்தவிடாமல், மனசு முழுதும் எதிர்வரும் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகள் குறித்த ஒற்றைப் புள்ளியில் குவிந்துவிடுகிறது.

விமான நிலையத்திலிருந்து கொழும்பு செல்லும் எஸ்பிரஸ் ஹைவே முடிந்த இடத்திலிருந்து தேங்கித் தேங்கித்தான் வாகனங்கள் நகருகின்றன. பின் மதியப் பொழுது, பள்ளிகள் விடும் நேரம் என்பதால் நெரிசல் தவிர்க்க இயலாதது. கைதிகளும் மனிதர்கள்தான் என வெலிக்கடை சிறைச் சுவற்றில் எழுதியிருப்பதை கசந்த புன்னகையோடு கடக்கிறேன். பொதுவாக கொழும்பு நகருக்குள் இருப்பது வேறொரு தேசத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தருவதில்லை. பெரும்பாலான இடங்களில் தமிழ்ப் பலகைகள் இருப்பதும் ஒரு காரணம்.

மாலை 6 மணிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் அரங்கைச் சென்றடைந்தேன். வாரத்தின் மைய நாளான புதன்கிழமையும் அந்த சிறிய அரங்கின் பெரும்பாலான நாற்காலிகள் நிரம்பியிருந்தன. ஆச்சரியமாக முன் வரிசை இருக்கைகளும் நிரம்பியே இருந்தன. மேலோட்டமான பார்வையில் 10 வயது பிள்ளைகள் முதல் 70 வயது நிரம்பிய மூத்தவர்கள் வரை அரங்கில் இருப்பதை உணர முடிந்தது. எந்த ஒரு அமைப்பின் கீழும் வராத, அழைப்பாளர்களின் நட்பு உறவு என பொதுமக்களாகவே அந்தக் கூட்டத்தினர் இருந்தனர். சிங்கப்பூருக்கு அடுத்து நிகழ்த்தும் வெளிநாட்டு உரை இது. சிங்கப்பூர் கூட்டத்தில் இருந்தவர்களில் மிகப்பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்கள். அவர்களுக்கும் எனக்கும் மொழி ஒன்றே. ஆனால் கொழும்பில் கூடியிருந்தவர்கள் நம் தொப்புள்கொடி உறவென்ற போதும், அவர்களின் தமிழும் என் தமிழும் வேறுவேறானவை. ஒரு வகையில் நம் ஊர் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் எனப் பார்த்து தமிழகத்தின் கலப்புத் தமிழுக்கு அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதை பின்னர் அறிந்துகொண்டேன். அதுவரை உரை முழுதும் நான் பேசும் தமிழ் அவர்களுக்குப் புரியுமா எனும் சிறு சந்தேகத்துடனே கூட்டத்தைக் கையாண்டேன்.



சுமார் 80 நிமிடங்கள் "வாழ்தலும் பிழைத்தலும் தலைப்பில் பேசிய உரைக்குப் பின்னர், கூட்டத்தினர் கொடுத்த மதிப்புரை மகிழ்ச்சியைக் கொடுத்தது. குறிப்பாக உள்ளே அமர்ந்திருக்கும் தமது தாயிடம் ஏதோ ஒன்றை பெற்றுச்செல்ல வந்திருந்த மிக இளவயது மகள் ஒருவர், அம்மாவின் கட்டாயத்தின் பேரில் ஐந்து நிமிடம் மட்டுமே அமர்ந்திருப்பேன் எனும் நிபந்தனையோடு உள்ளெ வந்திருக்கிறார். வந்தவர், ஐம்பது நிமிடங்களுக்கும் மேலாக உரை முடியும்வரை அமர்ந்திருந்ததை அவரின் தாயார் ஆச்சரியமாக மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டிக்கொண்டேயிருந்தார். எல்லாவற்றையும் எளிமைப்படுத்த இல்லம்தேடி வந்திருக்கும் நவீன மின்னணுக் கருவிகளின் பயன்பாட்டில் உலகம் சுருங்கி, உறவுகள் தொலைவிற்குச் சென்றுவிட்டது குறித்து உரையில் தெரிவித்த அச்சம் அவர்களுக்குள்ளும் ஊடுருவி இருப்பதை உணர முடிந்தது. கூட்டத்தை ஏற்பாடு செய்து, ஒழுங்குபடுத்தி செம்மையாக நடத்தி, மனதிற்கு நிறைவினை அளித்த திருமதி.மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் அவர்களுக்கு அன்பும் நன்றிகளும். முதல் கூட்டத்தின் பாராட்டு தந்திருந்த தன்னம்பிக்கையும் உற்சாகமும் அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்த நம்பிக்கையை அதிகரித்திருந்தன.

-

2 comments:

KANNAA NALAMAA said...

நிறைய கற்றிருந்தும்,
நீள்புகழ் பெற்றிருந்தும்,
தன்னுள் தானாக இருக்கும்
ஈரோட்டரின் கீர்த்தி
கடல் கடந்தும்
பெருமையுறுவதில்
பேருவகையுறும் பல்லோரில்
நானும் ஒருவனாக !

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பரே