ஊளமூக்குப் பிள்ளையிடம் ஒளிந்து கிடந்த கருணை



வாகான மண்ணெடுத்து
நையப் பிசைந்து
சாமி சிலை
செய்யத் துவங்குகிறான்
அந்திமத்தை நெருங்கும்
அந்தக் கிழட்டுக் கலைஞன்

பாதத்திலிருந்து
மெல்லமெல்ல மேலேறி
வழவழப்பாய் தொடைகள் வைத்து
வடிவாய் இடுப்பு வளைத்து
எடுப்பாய் மார்புகள் குவித்து
வனப்பாய் கழுத்து தறித்து
பூரணமாய் முடித்து நிற்கிறான்

இறைவனின் முகத்தில்
என்னவோ குறைகிறது
இதழ்களில்
புன்னகை வழிந்தாலும்
கண்களில் ஏனோ
காய்ந்து கிடந்தது கருணை

மீண்டும் கண்களை மேவி
கோடு கிழித்து
இமைகள் திறந்து
கருவிழி வைக்கும்
தருணத்தில்
கால்களைக் கட்டிக்கொள்கிறது
தாயில்லா
ஊளமூக்குப் பிள்ளையொன்று

நடுங்கும் கரங்களால்
வாரியணைத்து
சேற்று விரல்களால்
சளி சிந்தும்
கிழவனின் கைகளில்
ஒட்டிக் கொள்கிறது கருணை

இனி
அது கடவுளின் கண்களுக்கும்
கடந்து போய்விடக்கூடும்!

-

3 comments:

Prapavi said...

Wonderful!

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா...

i'm விக்னேஷ் said...

அருமை என்பதற்கு வேறொரு வார்த்தை இருந்தால் சொல்லுங்களேன் ..