கீச்சுகள் தொகுப்பு : 54





எச்சூஸ்மி தகப்பா....  ஒரு ஸ்லைஸ் பாட்டில கீழ போட்டதுக்கு 'சப்பு'னு அறையறதுக்குப் பேரு வீரம் இல்ல....  உங்கிட்ட அடிவாங்கிட்டு அழாம அமைதியா இருந்துட்டு, அஞ்சு நிமிசம் கழிச்சு 'அப்பா'னு மடில வந்து உக்காந்தனே... அதுக்குப் பேருதான் வீரம்!'

--

பெரம்பூர்ல எறங்கனும்னா அரக்கோணத்லேயே முழிச்சு லைட்ட போட்டு கலவரம் பண்றத குலத் தொழிலாகவே செய்யுது மேற்கத்தி சனம்!

-

வேட்டி கம்பெனி விளம்பரங்களில்தூய்மை இந்தியாவிசயம் சேர்ந்திருப்பதுகூடசெவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்எனும் டிசைன் வகைதான்

-

எதாவது திட்டம் குறித்துப் பேசும்போதுபொறுமையாக யோசித்துச் சொல்என்பதில் மறைந்திருப்பது நான் விரும்பும் பதிலையே சொல் என்பதுதான்.

-

அதிகம் கசப்பு சுவைத்துப் பழகிய நாக்கிற்கு, ஒரு கட்டத்தில் இனிப்பு ஒவ்வாத சுவையாகிவிடுகிறது.

-


பல நேரங்களில் வாழ்க்கை குறித்தான கனவு, பலூனில் ஊதப்பட்ட காற்று!

-

இந்தடச் ஸ்கிரீன்போன் பழகியதிலிருந்து, ஆல்பங்களில் இருக்கும் போட்டோக்களையும் இரண்டு விரல்களால் நிரடி, பெரிதாக்கி பார்க்கத் தோணுது!

-

பேரலைபோல் எப்போதாவது மனதில் மோதும் பாராட்டு அலை, அவ்வளவு எளிதில் அன்றிரவு தூங்க அனுமதிப்பதில்லை...

-

வரும் வழியில் ஒரு மூன்று சாலை சந்திப்பு மையத்தில் கொழுத்த நாயொன்று உறங்கிக்கொண்டிருந்தது. சுகமான வெயில் கீற்றுகள் குளிருக்கு மிக இதமாய். பரபரப்பான போக்குவரத்து அற்ற சாலைதான். எனினும் வேகமாய் வந்து ஒதுங்கும், திரும்பும் ஒரு காரோ, பைக்கோ நாய் மீது மோதிவிடலாம் எனும் நினைப்பில் அருகில் நின்றுப்ப்ச்சூ..ப்ப்ச்சூஎன அழைத்தேன். சாவகாசமாய் திறந்து பார்த்த நாயின் கண்கள் மெல்ல சொருகிக்கொண்டன. இமை திறத்தலும் மூடுதலும் ஒரு கவிதை போல் இருந்தது. மீண்டும் அழைத்தேன்.... உறுத்துப் பார்த்த நாயின் பார்வையில், ”இந்த இளம் வெயிலின் சுகமறியாப் பொறாமை பிடித்தவனேஎனும் தவிப்போ, ஏளனமோ இருந்தது புரிந்தது.

ஏதேதோ சந்தர்ப்பங்களில்
அந்த நாய் போல நானும்
நான் போல வேறு யாருமோ
இருந்திருக்கலாம்!

-

எதிலும் தன்னை முன்னிறுத்தஎழவு வீட்ல கூட பொணமா இருக்கனும்னு ஆசைப்படுறவங்களுக்கு சொல்றது, நீ அந்த நொடியோ வுழுந்து செத்துப்போய்டு தல!

-

தாயக்கட்டை உருட்டியவுடன் ஓடும் காய்கள் போல், அவரவர் பிழைப்பிடம் நோக்கி ஓடுகிறார்கள் நீள் விடுப்புக்குப்பின்னே!

-

பாக்கெட்ல செல்போன் பாடுது, கையில் ஜூ.வி வைத்துக்கொண்டு படிக்கிறார், இடைவிடாது அருகில் இருக்கும் மனைவியுடனும் பேசுகிறார் #பஸ் அலப்பறைகள்

-

மாட்டுப் பொங்கலன்று பட்டியிலிருக்கும் ஆட்டுக்கும் பூஜை போட்டுவிட்டு, அடுத்த நாள் காலையில் கறிக்கடையில் நிக்கிறவுக எல்லாம் நம்ம பயலுவகதான்.

-

நம்ம வீட்ல கரண்ட் போனவுடனே, ’குலவழக்கப்படிபக்கத்து வீட்டிலும் கரெண்ட் போய்டுச்சானு பார்க்கிறதெல்லாம் அவ்ளோ பெரிய குத்தமா!?

-

ஒரு மனிதன் சக மனிதனை வெறுக்கும் அளவிற்கு, ஒரு மிருகம் சக மிருகத்தை வெறுப்பது நிகழுமா!?

-

ஞாயிற்றுக்கிழமை வயிறு முட்ட சாப்பிட்டு மதியம் தூங்கும் சுகம் கண்டிருந்தால், புத்தன் வீட்டை விட்டு வெளியேறியிருக்க மாட்டார். :)

-

சம்பாதிக்கும் பணத்தைவிட, கடன் வாங்கும் பணம் தான், ’பரபரவென வேகமாகக் கரைகிறது!

-

உலகத்தில் இப்போதைக்கு ரொம்ப ஈஸிவாட்சப் குரூப்ஆரம்பிக்கிறதுதான் போல. நேத்து மட்டும் என்னைய மூனு குரூப்ல சேர்த்திருக்காங்க!

-

எச்சம் - குங்குமம் கவிதை



நெடுந்தொலைவு பயணித்த
பறவையொன்று
வறண்டுபோன நதி மடியில்
குட்டையாய்த் தேங்கிக்கிடக்கும்
நிறங்களடர்ந்த சாயக்கழிவில்
தாகம் தணித்திட அமர்கிறது

கசப்பேறிய நீரினைப் பருகி
வானமேகும் பறவையின்
நனைந்த இறகுகளிலிருந்து
கடக்கும் வெளியெங்கும்
நிரம்பிக் கொண்டேயிருக்கிறது
துரோகத்தின் வாசம்

அந்தப் பறவை
பறந்தாகவேண்டும்
துரோகம் கரைந்தொழியும்
வரையேனும்

மலையுச்சியில்
பாறையிடுக்கில்
கசியும் சுனை நீரில்
கால் நனைக்கையில்
இறக்கை நுனியில்
துரோகத்தின்
எச்சமிருத்தலாகுமோ!

-

குறிப்பு : குங்குமம் (02.03.2015) இதழில் வெளியான கவிதை