சோப்புக் குமிழி மின்னும் தருணங்கள்

அன்றைய தினத்தை ஆர்வம் மிகுந்த தினமாகவும், அசமந்தமான நாளாகவும் எது மாற்றுமென உறுதியாகத் தீர்மானித்து எதிர்பார்த்துக் காத்திருக்க முடிவதில்லை. எதுவேண்டுமானாலும் நம்மை கவிழ்த்துப் போடலாம். நிமிர்த்தியும் உட்கார வைக்கலாம்.

பிரபு வந்துஅண்ணாஎன்றபடி எட்டிப்பார்த்த போது மூன்று பேர் புடை சூழ வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.

வா பிரபு

பிசியாங்ண்ணாஏதோ சொல்ல வந்தவராய், உடன் மூவர் இருப்பதைக் கண்ட தயக்கத்தில் தடுமாறுவது தெரிந்தது.

பிசியெல்லாம்ல்ல….ம்பிரபு

ஒன்னுமில்லைங்ண்ணாசும்மா வந்தேன் அப்படியே எட்டிப்பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்

என்னவோ தயக்கம் நிலவிக்கொண்டிருந்தது. சில நொடிகள் புன்னகைத்தபடி நின்றுவிட்டுசெரீங்ண்ணா.. நான் அப்றம் வர்றேன்

என்னவோ தயக்கம் தொணித்ததால் நானும் வற்புறுத்திக் கேட்கவில்லை. வெறுமனே என்று போகிறபோக்கில் வந்த வருகையாய்த் தோன்றவில்லை. அரைநிமிட இடைவெளியில் போன் ஒலித்தது. அதே பிரபு.

ஏம் பிரபு…”

ஒன்னுமில்லீங்ண்ணா,,,, ஒரு சின்ன உதவிங்கநீங்க ஃப்ரீயாய்ட்டு சொல்லுங்க.. நா முன்னால இருக்கேன்

ஐந்து நிமிடங்கள் கழித்து பிரபுவிற்கு அழைத்தேன்.

பிரபுவை இரண்டு வருடங்களாகத் தான் நட்பு. நான் சந்தித்த மிகச்சில அதிசுவாரஸ்யம் மிகுந்த நபர்களில் பிரபுவும் ஒன்று. எங்களிருவருக்கும் குறிப்பிடும்படியான வயது வித்தியாசம் இருக்கும். ஆனாலும் அந்த வயசு வித்தியாசத்தை ஒருபோதும் உணர்ந்திட முடியா சுவாரஸ்யங்கள் கொண்ட உரையாடல்தான் நிகழும்.

அண்ணாஒரு சின்ன உதவிங்ண்ணா!”

என்ன பிரபு?”

ஒரு வாழ்த்து ஒன்னு வேணும்ங்ணா

வாழ்த்தா…. என்ன விஷேசம்?”

ஃப்ரெண்டுக்கு கல்யாணம்ங்ண்ணா…. சும்மா ஒரு நாலு வரில வாழ்த்து வேணும்

ஆஹாதிடீர்னு கேட்டா என்னத்த எழுதுறது

எனக்கு எழுத வராதுங்ளேஉங்களுக்கு தோணுறத சும்மா நாலு வரி எழுதித்தாங்க

யேம்ப்பா…. இப்படி திடீர்னு கேட்டா…. ஒன்னுமே தோணலயே பிரபு….”

ம்ம்ம்

என்ன செய்யப்போறே…. எதும் வாழ்த்து அட்டையாடைப் பண்ணி எதும் தரணுமா!?”

இல்லீங்ண்ணாஒரு சின்ன பேப்பர்ல எழுதித் தாங்க

அத என்ன பண்ணப்போறே?”

அப்படியே கொண்ட்போயி குடுத்ருவனுங்

எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஒன்றுமே தோன்றவில்லை. முன்பு ஒரு காலத்தில், இதுபோல் ஓரிரு வரிகள் எழுதித்தரச் சொல்லி யாராவது கேட்பதுண்டு. யாரென்றே தெரியாத ஒருவரை என்னவென்று வாழ்த்துவதெனக் மனதில் குழப்பம் நிலவியது. புன்னகையோடும், கொஞ்சம் தவிப்போடும் எதிரில் எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் பிரபுவை என்ன சொல்லி சமாளிப்பதெனத் தெரியாமல் தடுமாறினேன்.

யாருக்கு கல்யாணம்?”

ஃப்ரெண்டுக்குங்ண்ணாகொடுமுடில.. மத்யானம் ரிசப்சனுக்கு போகனும்ங்அப்ப நீங்க கொடுக்கிறத கொடுத்துடுவேன்

என்னைத் தெரிஞ்ச ஃப்ரெண்டா?”

இல்லீங்ண்ணாஎன்னோட ஃப்ரெண்ட்ங்

அதே ட்ரேட் மார்க் சிரிப்பு


பையனா பொண்ணா…”

பொண்ணுங்ண்ணா

ஒரு துண்டுக் காகிதத்தில் எதாவது வாழ்த்து எழுதிப்பார்க்கலாமே எனத் துவங்குகிறேன். முகம் மங்கலாய்த் தெரிந்த ஒரு தம்பதி வாழ்க்கையின் அற்புதமான தமது தருணத்தில் மாலையும் கழுத்துமாய் மனதிற்குள் நிற்கிறார்கள். மாலையும் கழுத்துமாய் பளீரிடும் வெளிச்சமான மேடையில் வீற்றிருக்கிறார்கள். அவர்கள் கடந்து வந்த பாதையின் அனுபவங்கள் குறித்தும், அவர்களுக்கு காத்திருக்கும் பாதையின் சுவாரஸ்யங்களும் குறித்தும், ஒரு திருமணம் தரும் கனவுகள் குறித்தும் பலவாறு மனதில் ஓடுகிறது. மனமொன்றி, கனிந்து விரல் நுனி தழுவி காகிதத்தில் சொற்கள் சேருகின்றன. மடித்து மடித்து வார்த்தைகளைக் கோர்க்கிறேன். ஆறேழு வரிகள். எனக்கே கொஞ்சம் நிறைவாக இருக்கின்றது.

போதுமா பாரு

போதும்ங்ண்ணாமுகம் மலர்கிறது

இருஒரு 4 சீட்ல எழுதித் தர்றேன்




வெள்ளைத்தாள் ஒன்று எடுத்து, சிவப்பு மை பேனாவால் எழுதத் துவங்குகிறேன். காகிதத்தில் இப்படி எழுதுதல் மறந்து பல ஆண்டுகளாகின்றன. அவ்வப்போது பில் போடுவது மட்டுமே அதிகபட்ச எழுத்து. மற்றபடி எல்லாமே கணினியில் தட்டச்சுவதுதான். கொஞ்சம் நாட்களுக்கு முன்பு இடது கையால் எழுதிப் பழகலாமே என வெட்டியாக முயற்சி செய்து பார்த்தேன். வலது கையால் எழுதினாலே ஒவ்வொரு முறையும் ஒரு வடிவத்தில் எழுத்து வருகிறதென்ற அவலத்தில் இடது கையால் இந்த விஷப்பரிட்சை தேவையா எனச்சொல்லி சோம்பேறித்தனத்தால் அதை முற்றிலும் கை விட்டேன்.

சுமார் இருபத்தைந்து சொற்கள் இருக்கும். இடைவெளி விட்டு மடித்து மடித்து எழுதியதில் முக்கால் பக்கம் வந்தது. காகிதத்தை மடித்துக்கொடுத்தேன்.

கீழ உம் பேரும் எழுதிருட்டுமா?

இல்லீங்ண்ணாஎதுமே போடாம இப்டியே குடுத்தர்றனுங்

மதியம் அந்த வாழ்த்து அந்தத் தம்பதிகளை எட்டியிருக்கலாம். வாழ்த்து குறித்து எதாவது சொல்லியிருக்கலாம். தம்பதிகள் மகிழ்ச்சியெய்தியிருக்கலாம் அல்லது எந்த உணர்வுமற்றுக் கடந்தும் போயிருக்கலாம். அது அவர்களின் நட்பு பொறுத்து. அவர்கள் வாசிக்கும் விதம், சூழல் பொறுத்து.

என்னவாக இருந்தாலென்ன 

அசமந்தமாக இருந்த முன் மதியப்பொழுதை ஒரு நிர்பந்தத்தை உருவாக்கி, யோசிக்க வைத்து, மனதிற்குள் ஒரு காட்சியை உருவாக்க வைத்து, முகம் தெரியா யாரையோ வாழ்த்த மனம் கனியச்செய்து சுவாரஸ்யமாய் மாற்றியதை நினைக்க நினைக்க இனிக்கிறது. மாலை முழுதும் மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருக்கிறது. மழை நனைத்த காற்று பிரியமானதாய் இதமானதாய் இருக்கிறது. இன்னும் மகிழ்ச்சியாக இரு என ஏதோ ஒன்று உந்துகிறது.

-