மன்னிக்க வேண்டுமென்கிறார்கள்





வேர் முடிச்சுகளில்
புதைந்துறங்கும்
பிச்சைக்காரக் கிழவி
நைந்த மூட்டையோடு
வெறித்தபடி
இடம் பெயர்கையில்

வாடிக்கையாய் நிழல் பருகும்
உள்ளே குளிர்படிந்த
வெளிநாட்டுவகைக் காரொன்று
வேறு கிளைகள் தேடித்
தயங்கி ஊர்கையில்

இறக்கை முளைக்கா
குஞ்சுகளை

தாய்க்குருவியொன்று
இடமாற்றிடத் துடிக்கையில்

நாளை பூப்பெய்தலாமென
நினைத்த மொக்கொன்று
அவசரமாய் உதிரம் சொட்டியபடி
உதிர்கையில்

விரல்களைத் துண்டித்து
ஒரு கொலையைத்
துவங்குவதுபோல்
கிளைகளில்
துவங்குகின்றனர்
மரம் வெட்டும் கூலிகள்

கொதிக்கும் கோடையிலும்
மரம் வெட்டப்படுவதை
மேகங்கள் மன்னிக்க
வேண்டுமென்கிறார்கள்
மௌனமாய்க் கடந்து
செல்கிறவர்கள்!

-

7 comments:

gunasekaran said...

மழையும் வேண்டும்
மரமும் வேண்டும் என்கிறது
மனித மனம்

ஆனால்,
இங்கோ
அரிவாளோடும் ரம்பத்தோடும்
பாவம் செய்கிறது
கொஞ்சமும் ஈவிரக்கமின்றி...
எங்கே கொண்டு போய் விடப் போகிறார்களோ இப்பூவுலகை...?

அற்புதமான கவிதை நண்பரே..
வாழ்த்துக்கள் !

Thoduvanam said...

கொல்லும் மௌனம் ..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கற்பனையும் உவமையும் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சேக்காளி said...

'பரிவை' சே.குமார் said...

அற்புதமான கவிதை அண்ணா...

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை.

Unknown said...

எந்த வார்த்தையும் தேவையில்லை என்று ஒதுக்கி விடமுடியாத படியான வார்த்தை ப்ரயோகம்...கவிதையும்,சொல்லாடலும் அசத்தல்