இரவு







இரவின் அழுக்கை

விடியவிடிய வெளுத்ததில்

வெளுக்கிறது கீழ்வானம்



-



நீண்டு பயணிக்கும் இரவு

தான் விரும்பும் ஒரு கணத்தில்

பகல்மீது தடம் புரளலாம்



-



இரவில் நனையும் தினம்

பகலில் காயும்

வேறொன்றும் புதிதில்லை



-



ஏகாந்தமாய்

விளையும் இரவில்
எவர் பசி தீரும்



-


கசியும் மௌனம்





ஒரு மௌனத்தின் முடிச்சுக்குள்
மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும்
என் நாவிலிருந்து ஒரு சொல்லைப்
பறித்துவிடத் துடிக்கிறீர்கள்

பிறந்த குழந்தையின்
முதல் அழுகை சிதறும் நேரத்தில்
மரணம் மொய்க்கும் சொற்களைக்
கோர்க்க நிர்பந்திக்கிறீர்கள்

ஒரு முத்தத்தின் உச்சத்தில்
முயங்கிக் கிடக்கையில்
துரோகக்கறை தோய்ந்த சொற்களை
பொறுக்கச் சொல்கிறீர்கள்

நீள் பயணத்துக்கு ஆயத்தப்படுகையில்
காலணிகளைப் பிடுங்கிக்கொண்டு
முற்சொற்களை அணிந்து
நடைபயில பணிக்கிறீர்கள்

நிதானித்துக் கொண்டிருக்கிறேன்
பேச்சு உளி கொண்டு
மௌனத்தின் உச்சியில்
இடைவிடாது அடிக்கிறீர்கள்

மௌனத்தின் இறுக்கத்தில்
மூச்சுத்திணறிப் பிதுங்கும் சொல்
மரணத்தில் மூழ்கி
உதித்து வெளியேறலாம்

இப்போதும்கூட மௌனத்தின்
அடர்த்திக்குள் மூச்சு முட்டியபடி
மௌனமே எனது மொழியெனும்
வார்த்தைகளை கசியவிடுகிறேன்

*

மூளைச் சூடு



கோடை ஒரு அசாதாரண சூழலைத்தான் பரப்பிக் கொண்டேயிருக்கின்றது. வெயிலைத் தாங்கமுடியவில்லை என்று சொல்வது ஒரு காலத்தில் ஆடம்பரமாக இருந்திருக்கலாம். இப்போது எவராலும் தாங்க முடியவில்லைதான். உண்மையில் வெயில் அத்தனை சுடுகிறதா அல்லது வெயிலை, வெக்கையைத் தாங்கும் குறைந்தபட்ச தாங்குதிறனையும் நாம் இழந்துவிட்டோமா எனத்தெரியவில்லை.

கை பேசியில் பேசிக்கொள்வோரிடம் நாளுக்கு நாள் வழக்கத்திற்கு மாறாக குரல்கள் உரத்து ஒலிப்பதாக உணர்கிறேன். சட்டெனக் குரல் உயர்ந்து “நான் சொல்றத முதல்ல கேளு” என்பது போன்ற சண்டைக்கான அனுமதி நுழைவை எளிதாக வழங்கிவிடுகின்றன. நேர நெருக்கடியும், புறச்சூழலும் இதை இயக்குகின்றதெனப் புரிகின்றது. இது கோடைகாலத்தில் அதிகமாக நிகழ்கின்றதோ என்றும் தோன்றுகின்றன.

வெளியில் நிலவும் வெப்பமும் புழுக்கமும் கண்களைச் சுடுகிறது. விழிகளை ஒருமுறை இறுக்க மூடித் திறக்கிறேன். மூளைக்குள் ஏதோ ஒன்று அப்படியே இமைகளை மூடிக் கொள்ளச்சொல்கிறது. வெயிலுக்கும் வெக்கைக்குக்கும் பின்வாங்க வேண்டாமென மூளைக்குள் வேறு ஏதோ ஒன்று கட்டளையிடுகிறது. இதை எங்கே தொடங்கி எங்கே நிறைவு செய்வதென்ற நோக்கம் ஏதுமில்லை.



எனக்குத் தெரிந்தநாள் முதல் குடிதண்ணீருக்கென்று இன்னொரு கிணற்றைத் தேடிப்போயிடாத விவசாயக் குடும்பங்களையும் கூட இந்தக் கோடை ஆட்டிப்படைக்கின்றது. விவசாய பூமிக்கு, இருக்கும் கால்நடைகளுக்கு என்பதற்கெல்லாம் முன்பாக குடிக்க சமைக்க துவைக்க தண்ணீர் இல்லையென்ற சூழலை, காலம்காலமாய் விவசாயம் செய்த விவசாயிகள் காணத்தொடங்கியுள்ளனர். இந்தமுறை பெரும்பாலானோரின் ஆழ்துளைக் கிணறுகளும் கைவிட்டுவிட்டன. புலிவாலைப் பிடித்த கதையாய் எப்படியாவது சமாளித்துவிடுவோம் என வைத்திருக்கும் ஓரிரு எருமைகளைக் காப்பாற்றவும், தண்ணீர் தொட்டி வெடித்துப்போகாமல் இருப்பதற்காகவும் டிராக்டர் மூலம் காசு போட்டு தண்ணீர் வாங்கி ஊற்றிடும் அவலத்தையும் எங்கள் கிராமம் முதன்முறையாக சந்தித்துவிட்டது.
நகர்ப்புறத்தின் விளிம்பில் இருக்கும் சில விவசாய நிலங்களில் தண்ணீர் விற்பனை வெகு விமரிசையாய் நடப்பதைக் கண்டதுண்டு. உள்ளடங்கிய கிராமத்தில் சரியாக தட வசதிகூட இல்லாத விவசாய பூமிக்குச் சென்று லாரி மூலம் தண்ணீர் வாங்கிவரும் பணியை அந்தப் பகுதியில் புதிதாய் முளைக்கும் கம்பெனிகளும், கல்வி நிறுவனங்களும் செய்யத் தொடங்கிவிட்டன.

தண்ணீரை காசுக்கு விற்கலாமா எனும் கேள்வியை அந்த உள்ளடங்கிய விவசாயியின் மனசாட்சியை தட்டியெழுப்பியெல்லாம் கேட்டுவிட முடியாது. ”அவனை நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துறேன்” எனும் பதில் அவர்களிடம் தயாராக இருந்து கொண்டிருக்கலாம்.

என்னை நிறுத்தச்சொல்லும் முன்பு ”அவனை நிறுத்தச் சொல்லு” என எந்த திசையிலும் தைரியமாக இப்பொழுதெல்லாம் விரல் சுட்டலாம். தாங்கள் செய்வதை நிறுத்தாமல், செழிப்பாய் இருக்கும் பல ”அவன்கள்” இவர்களின் விரல் சுட்டலில் பட்டுவிடத் தயாராகத்தான் இருக்கின்றார்கள்.
மஞ்சள் வேகவைக்கும் அடுப்புக்கு பக்கத்தில் அமரவைத்தது போல் இருக்கின்றது மதிய வெயில். பாதாளச் சாக்கடைக்கு பல வீதிகளைக் குதறிவிட்டதால் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தேன். எனக்கு முன்பு நடுத்தர வயதைத் தாண்டியவர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கொளுத்தும் வெயிலில் சாலை வெறிச்சோடித்தான் கிடந்தது. நானும் ஏதோ சிந்தனையில் மெதுவாக பைக்கில் வந்து கொண்டிருந்தேன். நீண்ட நேரமாக ஒரு ஹார்ன் சப்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. கொஞ்சம் சிந்தனையை நிறுத்திவிட்டு எங்கே இந்த சப்தம் என பார்த்தேன். எனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தவர்தான் விடாமல் அடித்துக்கொண்டேயிருந்தார். ஆனால் அவருக்கு முன்னாலும் யாருமில்லை.

பாதாளச் சாக்கடைக்குத் தோண்டிப்போட்ட எச்சங்கள் பாதி சாலையை பாழ்படுத்திக்கிடந்தன. அவரை ஒதுங்கலாம் என்றாலும் வழிவிடாமல் ஆக்கிரமிப்பு பாவனையில் சென்று கொண்டிருந்தார். கவனிக்கத் தொடங்கியபிறகு ஆளே இல்லாமல் அடித்துக்கொண்டேயிருக்கும் அவரின் ஹார்ன் முழக்கம் வெயிலைவிட அதிகம் எரிச்சலை உண்டாக்கியது. வழக்கமாக பின்னால் வந்து இங்கிதமின்றி அடிக்கும் ஹார்ன்கள்தான் எரிச்சலை உண்டாக்கும். வெயில், வழிவிடாதது, ஆளில்லா சாலையில் ஹார்ன் அடித்தது என ஒரு கொலைவெறி எனக்குள் குடிகொண்டது. எந்த சாத்தானோ எனக்குள் விழித்தெழுந்து எனது இடது கை கட்டை விரலில் வைத்து அழுத்தியிருக்க வேண்டும். ப்ப்ப்பீய்ய்ய்ய்ய்ய்ங்ங்ங்ங்ங் என என் வண்டியின் ஹார்ன் அலறியது. தனக்கு போட்டியாக வந்த ஹார்ன் சப்தம் அவரை அதிர்ச்சியுறச் செய்திருக்கவேண்டும். இத்தனைக்கும் சில நொடிகள்தான். வண்டியை இடமும் வலமும் ஒடித்துத் தடுமாறி சட்டென ப்ரேக் போட்டவர் என்னைத் திரும்பிப் பாத்து “ஆரன் அடிச்சா, எப்படிப் போறதாம்” என்றார். அப்போது அவரை கடந்துவிட்டிருந்தேன். அதன்பின் அவர் ஹார்ன் அடிக்கவில்லை!

இது ஏன், எப்படி, எதனால் என ஆராயும் மனநிலையை வெயில் எனக்குத் துளியும் தரவேயில்லை.

சவிதா சிக்னல் அருகே செங்குந்தர் பள்ளியின் பின்புறம் வந்து கொண்டிருந்தேன். தூரத்தில் வரும்போதே சிவப்பு தெரிந்தது. 22 எனும் சிவப்பு எண் நொடிகள் கரைந்து கொண்டிருப்பதை உணர்த்தியது. கொஞ்சம் நிதானித்தேன். மெதுவாகச் சென்றால் நொடிகள் கரையவும் வண்டிகள் நகரவும் சரியாக இருக்குமென்று. ஒரு அரசுப் பேருந்து இடது பக்கம் நின்றுகொண்டிருந்தது. பேருந்துக்கும் அம்சாசுப்ரமணியம் மருத்துவனை சுவருக்கும் இடையே இருந்த இடைவெளியில் நேராகச்சென்று மேற்கு நோக்கித்திரும்பும் இருசக்கர வாகனங்கள் இரண்டு மூன்று நின்றுகொண்டிருந்தன. என்னை கொஞ்சம் உரசியவாறு வேகமாய் ஒதுங்கிய ஒருமாற்றுத் திறனாளியின் நான்கு(2சக்கர) சக்கர ஸ்கூட்டி, ஏற்கனவே நின்று கொண்டிருந்த வண்டிகளின் பின் நின்று நிதானிக்காமல் அநியாயத்திற்கு வலதுபக்கம் ஒடித்து நெருக்கிக்கடக்க முற்பட்டது. அப்போது சுமார் 12 நொடிகள்தான் மிச்சமிருந்தன..

”அட லூசுப்பயலே, இப்படிப் போனான்னா அந்த டிச்சுல விழுந்துடுவானே” என நினைத்துக்கொண்டிருக்கும் போதே, இன்னும் நெளிந்து நெருக்கி வலது ஓரத்திற்கு நகர்ந்து மற்ற வாகனங்களைக் கடக்க முற்பட்டது அந்த வண்டி.
அநியாயத்திற்குத் தங்களை ஒதுங்கும் வண்டியை இடதுபக்கம் நின்றிருந்த இரண்டு வண்டி ஓட்டிகள் ஒரு மாதிரியாகப் பார்ப்பதையும் கவனித்தேன். நொடிகள் 4,3 என குறையும்போதே முன்னால் நின்றிருந்த வண்டிகள் சீற, நானும் கியரை மாற்றி வேகத்தைக் கூட்டினேன். வலதுபக்கம் நுனியில் இருந்த அந்த மாற்றுத்திறனாளி இல்லாத சாலையை கற்பனை செய்தோ என்னவோ இன்னும் கொஞ்சம் வலதுபக்கம் ஒடித்து வேகத்தைக் கூட்டமுற்பட தார் சாலையின் மழுங்கிய விளிம்பு வலதுபக்க பின் சக்கரத்தைச் சரிக்க சாக்கடைக்குள் இறங்கப் போவதையும், பக்கவாட்டுச் சுவரில் உரசப்போவதையும் நிஜமும் கற்பனையுமாய், நான் உணரும் தருணத்தில் அந்த வண்டியைக் கடந்து பிரப்ரோட்டில் நுழைந்து விட்டிருந்தேன்.

யாரோ அய்யய்யோ எனக் குரல் எழுப்புவது புரிந்தது. அந்த இடத்தில் நிற்க நினைக்கக்கூட முடியாதபடி பின்னால் சீறிக்கொண்டிருந்தன வண்டிகள். சாலையைக் கடந்தாகிவிட்டது. அது மிகப் பெரிய சாக்கடையில்லைதான். அடுத்த சில நிமிடங்களில் மீட்பு நிகழ்ந்தேறியிருக்கும். ”பார்த்து பொறுமையா வரக்கூடாதா?” என்ற அறிவுரையோ பொதுபுத்தியின் முழக்கமாய் “உனக்கெதுக்கு இந்த சர்க்கஸ் வேலை” என்ற திட்டோ விழுந்திருக்கலாம்.

ஒருவேளை அது ஆழமும் அகலமுமான சாக்கடையாக இருந்திருந்தால். சிலவற்றில் அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் என்றெல்லாம் சமாளிப்பு வசனங்கள் சொல்ல வாய்ப்புக் கிட்டுவதில்லை. நாம் நிறுத்தவில்லையென்றால் வேறு ஏதோ ஒன்று நில்லாமல் போகலாம், அல்லது ஒட்டுமொத்தமாய் நின்றே கூடப்போகலாம்.

எல்லா கோக்குமாக்கு, கிறுக்குத்தனங்களுக்கும், பிறரின் இயலாமையை, தன் வறட்டு நம்பிக்கையை, அவசரத்தை, அறியாமையை, வெயிலை, குளிரை, மழையை, மதுவை, உணர்வை, சூழலை மட்டுமே குறை சொல்லமுடியாது.

மொத்தத்தில் மூளை சூடு கிளம்பித்தான் இருக்கின்றோம்.

-


கீச்சுகள் - 34



கோபத்தை மட்டும் வேகமாய் உடனுக்குடன் வெளிப்படுத்தும் மனது, அன்பையையும், நன்றியையும் அதே வேகத்தில் வெளிப்படுத்துவதில்லை!

-0-

இன்றைக்கு தேதி கிழிக்க மறந்து போனேன். அதனால் நேற்றிலேயே வாழ்ந்துவிட்டேன். #அடங்கப்பா எத்தன பல்பு! :)

-0-

பைக்ல இன்டிக்கேட்டர் இருப்பது ஆயுதபூஜைக்கு பொட்டு வெச்சு பூ மாட்டுறதுக்கு மட்டும்னு பலபேரு நினைக்கிறாங்க போல!

-0-

ஞாயிறு பிற்பகல் நகரப் போக்குவரத்தைப் பார்த்தால், 50 ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்டதுபோல் தோன்றுகிறது.

-0-



குடும்பத்தில் காட்டும் எல்லாக் கோபங்களுக்குப் பின்னாலும் ஒரு அன்பு இருக்கின்றதென்பதை தெரிவிக்க மறந்து விடுகிறோம்

-0-

தெளிவாக இருக்க முயல்வது போன்ற கிறுக்குத்தனத்திற்கு நிகர் ஏதும் இல்லை!

-0-

டாஸ்மாக் வாசலில் தள்ளுவண்டியில்கம்மங்கூழ்விற்பவன் ஏமாளியாகவும், புத்திசாலியாகவும், கருணை மிகுந்தவனாகவும் தெரிகிறான்.

-0-

நெருக்கடி மிகுகையில், விதவிதமாய்ப் பற்றும் கரங்களில் கடவுளை உணர்கிறேன்!

-0-

கம்மஞ்சோற்றை முதன் முதலில் படைத்தவன்/ள், ரொம்ப நாள் டாவடிச்சு போக்கு காட்டிய ஜீவனிடமிருந்து சூடாகாவோ / சில்லுனோ முத்தம் வாங்கிய ஒரு நேசிப்பு மிகுந்த தினத்தில்தான் உருவாக்கி, இப்படி பழைய சோறாக குடிக்க வேண்டும் என பக்குவமும் சொல்லியிருக்க வேண்டும்!
-0-

எல்லா கேள்வி, புகார்களுக்கு ஒற்றை முத்தம் பதில், தீர்வாக அமைந்து விடுவதுண்டு. சில பொழுது இல்லாத கேள்வி, புகார்களை எழுப்பியும்விடும்!

-0-

எதாச்சும் தத்துவத்தைப் போட்டு கீழே ”-யாரோஇப்படிப் போடுறாங்களே, இந்த ”-யாரோங்கிறது யாரா இருக்கும்?

-0-

போனில்அஞ்சே நிமிசத்துல கூப்பிடறேங்கனு சொன்ன ஒருத்தரைக்கூட, அஞ்சேகால் நிமிசத்துலகூட நான் கூப்பிட்டதேயில்லை #நல்லா வருவடா (மீ –>என்னை)

-0-

தென்னை உண்டு இளநீர் குடிப்பதில்லை, பனை உண்டு நொங்கு உண்பதில்லை..... ஆனாலும் பிள்ளைகள் வளர்கிறார்களாம். நாங்கள் வாழ்கிறோமாம்!

-0-

ஒவ்வொரு தினத்தையும் இன்பத்திலோ, துன்பத்திலோ நனைத்து உலரப் போடுகிறோம்! சில தினங்கள் மட்டும் அவ்வளவு எளிதில் உலர்வதில்லை!

-0-

பம்ப்செட் தண்ணி எடுக்கலைனா சாணியைக் கரைச்சு ஊத்தினா தண்ணி எடுக்கும்னு கண்டுபிடிச்ச விஞ்ஞானி நம்ம தமிழக விவசாயியாகத்தான் இருப்பார்!

-0-

டீ கடக்கார அண்ணே, சூரியன் சார் புண்ணியத்துல கொதிக்கிற பைப் தண்ணிய புடிச்சு தூளு சக்கரை போட்டு டீ தர்றீங்களே, ஒரு எட்டணா குறைச்சிக்கபடாதா?

-0-

மதிய சோற்றைவிட குழம்பு, ரசம் இருமடங்காக இருக்கும் நாட்களில் சமூகம் ஏதோ சேதி சொல்லவிரும்புவது புரிகிறது. #வெயில்ல யோசிக்கத்தான் முடியல

-0-

வாசிக்கிற லட்சணத்துல பார்த்தா, கையில் இருக்கும் புத்தகங்களை வாசித்து முடிக்கவே இன்னொரு ஜென்மம் தேவைப்படும்போல இருக்கே! #சோம்பேறித்துவம்

-0-

நமக்குகெடுதல் நிகழப்போவதாகமனது கற்பனை செய்த அளவிற்கு, நிஜத்தில் நிகழ்ந்திருக்குமானால் நம் எவராலும் வாழ்ந்து கொண்டிருக்கவே முடியாது!

-0-

பிறழ்வும் இனிதே! பிடித்திருக்கும் தருணங்களில்.

-0-

சட்டத்திற்குள் அடங்குவதே அழகு என்பதும் மாயை.

-0-

இருப்பதை விட, நம்மை கூடுதல் அழகாய் காட்டும் நிழற் படங்களை வெளியிடுவது ஒரு வித போதையோ?

-0-

கெட்டவனா/ளா இல்லாம இருக்கிறதுதான் பெரிய விசயம்!

-0-

விடியலின் வர்ணம் ஊருக்கு ஊர் வேறுபடத்தான் செய்கிறது

-0-

காலை மினுமினுக்கும் மேக்கப்பில் பார்க்கும் முகங்களைவிட, களைத்து வாடிய மாலை நேரத்து முகங்கள் வெகு இயல்பாய், கூடுதல் அழகாய் இருக்கின்றன

-0-
  
கொதிக்கும் வெயிலில் பெட்ரோல் தீர்ந்து வண்டியைத் தள்ளுபவன் துரதிருஷ்டசாலியாகவோ, பாவப்பட்டவனாகவோ மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை. சரியான நேரத்துக்குப் பெட்ரோல் போடாத சோம்பேறியாகவும் கூட இருக்கலாம். இறங்கும் இடம் தெரியாத பயணங்களும், வாழ்வில் தவிர்க்க முடியாதவை!

-0-

யுத்தமில்லா உலகை, போர் மூலமா தீர்மானிக்க முடியும்?

-0-

"சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்ததுபோல்" # இப்படி யாருய்யா கற்பனை செஞ்சது. ஒரு மாதிரிபிசுபிசுனு இருக்காது

-0-
விளையாட்டா கன்னத்தில் அடித்த மகளுக்கு முத்தம் தந்தால், ”இதுக்கு திருப்பி அடிச்சேயிருக்கலாம்ங்குது # கரண்ட் இல்லாட்டியும் பல்பு மட்டும்

-0-

காதுல செல்போன் வெச்சுட்டு போஸ் கொடுத்த ரியல் எஸ்டேட் ஆளுக, இப்ப டேபிள்ல லேப்டாப் வெச்சுட்டு போஸ் கொடுக்கிறாங்க #டெக்னாலஜி இம்ப்ரூவ்டாம்

-0-

ஒரு வேலை ரொம்ப கடியா இருக்கும்னு 10 நாளா தள்ளிப்போட்டேன். வேறு வழியின்றி இன்றைக்கு எடுத்தேன். 4 மணி நேரத்தில் ஓவர் #கேடுகெட்ட முன்முடிவு

-0-

தோல்விகள், துன்பங்கள் என வலிக்கவலிக்க சுயசரிதை எழுதும் வாய்ப்பு வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது!

-0-




சில பிரச்சனைகள் எந்த ஒப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டது!


 -0-

இணைய சமூகதளங்களில் சாதி, கட்சி, சினிமா என மக்கள் அடித்துக் கொள்வதில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட, இவர்களுக்கு சாதி / அரசியல் / சினிமா குறித்த உணர்வுகளை ஊட்டிய தலைகள்(!), தங்கள் எதிரிகளைச் சந்தித்தால் நிகழ்ந்துவிடாது...
இத்தனைக்கும் அவர்களின் கல்வியறிவு (கல்விக்கும் பக்குவத்திற்கும் தொடர்பில்லையெனினும்) இங்கேயிருப்போரைவிட சிறிது குறைவாகவும்கூட இருக்கலாம்!

-0-

நெருக்கடியான தருணங்கள் வாழ்க்கை குறித்த புரிதலோடு, அன்பாய், பரிவாய், கதகதப்பாய்ப் பற்றும் கரங்களையும் இனம் காட்டுகிறது!

-0-

IPL மேட்ச் பார்த்துட்டிருந்த நண்பர் இன்னுமா Nokia போன் வெச்சிருக்கீங்னு கேட்டாரு, நான் இன்னுமா IPL பாக்றீங்கனு கேட்டேன் #ஏன் முறைக்கிறாரு!

-0-

ரொம்ப பிசியா இருக்கிற ஆஸ்பத்திரில ஒருபொழுது இருந்து பார்த்தாத் தெரியும், உடல் ஆரோக்கியத்தோட வாழ்ந்துட்டு இருக்கிறதே எத்தனை பெரிய வரம்னு!

-0-

காதுகள் இரண்டாக இருக்கும் போதிலும், வாய் ஒன்று மட்டுமே இருப்பதென்பது ஏனோ அடிக்கடி மறந்து போய்விடுகிறது!

-0-

மன இடுக்கெங்கும் நிரம்புகிறது வெயில்!

-0-

ரயில்ரோட்டோரம் கெடக்குற இரும்பை பேரீச்சம்பழத்துக்கு போட்டாலே, இந்தியாவுல இருக்கிறவங்களோட இரும்புச் சத்துக்குறைபாட்டை சரி செய்திடலாம்.

-0-

நிஜமா சொல்றேன்ஓசி சோத்துக்குருசி அதிகம்! :)

-0-

தெருவில் சண்டை போடுபவனுக்கு எப்போதும் சண்டை முக்கியமில்லை வேடிக்கை பார்ப்பவனே முக்கியம்!

-0-

குளிர்காலத்துல பேங்க் போனா A/cய 16லவெச்சு முக்காமணி நேரம் வெயிட் பண்ணவெச்சாங்க, இன்னிக்கு போனா A/cய30லவெச்சுட்டு 3 நிமிசத்துல துரத்துறாங்க?

-0-

ட்விட்டர்ல யார்யாரையோ நான் ஃபாலோ பண்றேன், யார்யாரோ என்னை ஃபாலோ பண்றாங்க, என்னை நான் ஃபாலோ பண்றேனானு மட்டும் தெரியல!

-0-

90 நிமிசம் லேட்டா வர்ற ரயிலுக்கு என்னத்த "பயணிகளின் கனிவான கவனத்திற்கு" வேண்டியிருக்கு. "கடுப்பான கவனத்திற்கு"னு வேணா சொல்லுங்க.

-0-

அதென்ன சூரியன் சார், சினிம தியேட்டர் வாசல்ல மணிக்கணக்கா நிக்கிறவங்கள விட்டுட்டு, ஒன்னேகால் நிமிசம் சிக்னல்ல நிக்கிறவனை இப்படி சுடுறீங்க!

-0-

பல நேரங்களில் வேலை செய்வது சிரமமில்லை. வேலை குறித்த முன்முடிவுதான் சிரமப்படுத்துகிறது!

-0-

முதலில் தன்மீதும், அடுத்து பிறர்மீது குற்றம் காணாத மனிதன் சர்வநிச்சயமாக முன்னேறியே தீருவான்.

-0-

எங்கூர்ல கரண்ட் இருக்குனு சொன்னவங்களை விட, இப்போ எங்கூர்ல மழை பெய்யுது, குளுரடிக்குதுனு சொல்றவங்க மேலதான் ரொம்பப் பொறாமையா இருக்கு!

-0-

எல்லாவற்றிற்கும் காரணம் இருக்கும், பல நேரங்களில் அது தெரிவதில்லை, சில நேரங்களில் தெரிந்து கொள்வதில்லை!

-0-

வாழ்க்கையிலுள்ள புதிர்களின் முடிச்சவிழும் தருணம் பயம் நிரம்பியது

-0-

தன்னை நோக்கி தட்டப்படும் கைகளை பாராட்டு என நினைக்கும் கொசுவுக்குத் தெரிவதில்லைஇன்னிக்கு செத்தா நாளைக்கு பால்என்பது

-0-