கீச்சுகள் - 12



தென்றல் புயலாய் மாறியதாக உணர்ந்தால், ஏதோ உறவுக்குள் சிக்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். சுனாமியாய் உணர்ந்தால் அது திருமணமாகவும் இருக்கலாம் :)

-

2011ல் அதிக லாபம் அடைந்தும், மிகப்பெரியகாமடியன்போல் மாறிய கதாநாயகன் விஜயகாந்த் என்றே நினைக்கிறேன்.

-

பிடித்தவையெல்லாம் சரி எனவும், பிடிக்காதவையெல்லாம் தவறு எனவுமே மனது பட்டியல் இடுகிறது!

-

வன்னியர் வாக்கு வங்கியாக மாற குழந்தைகள், குலதெய்வம், பெற்றோர்கள் மேல சத்தியம் வாங்க வேண்டும்-ராமதாஸ் #அப்படியே உங்க தலையிலும் ஒரு சத்தியம்.

-

அமைதி என்பது சூழல் தரும் ஒரு வரம்

-

ரெண்டு பேருக்கு போன் போட்டு பொறந்த நாள் வாழ்த்துச் சொல்லிட்டேன். இதுல சந்தோசம் என்னன்னா அவங்களுக்கு ஒரு வயசு கூடிடுச்சு என்பதுதான் :)

-

நேரத்தை நாமும் தொலைக்கலாம், வேறு எவரிடமாவது களவும் கொடுக்கலாம். எப்படிப்பார்க்கினும் இழப்பு நமக்குத்தான்.

-

புளி, வெங்காயம், கல் உப்பு மூன்றையும் அம்மியில் வெச்சு அரைச்சு.... இப்ப நாக்குல எச்சில் ஊறலைனா, நாக்குனு ஒன்னு என்னாத்துக்கு இருக்கனும்!?

-

சில மௌனங்கள் சாதுர்யம் எனினும், அவை நம்மை மழுங்கடிப்பவை. மௌனத்தில் கூர்தீட்ட கூடுதல் வலிமை தேவை.

-

எதாச்சும் கிறுக்கனுமேன்னு நாமளும் கிறுக்குறோம், அதுக்கு எதாச்சும் சொல்லனுமேன்னு அவங்களும் சொல்றாங்க #பலநேரங்களில்

-

அநியாயத்துக்கு குளிருது....... ஃபேனை ரிவர்ஸில் சுத்தவிட்டால் குளிர் எதும் குறையுமா!?

-

வருசத்துல ஏன்தான் இந்தக் கடைசி வாரம் வருதோ? எங்க பார்த்தாலும் TOP-10 பட்டியல்தான்! நம்மாளு ஒருத்தர் TOP-10 டாஸ்மாக் லிஸ்ட் போடுறாரு!

-

நேசம் வழியும் நட்புகள் அடர்த்தியாய் வைக்கும் புள்ளிகளுக்குள், அன்பு தோய்ந்த ஆயிரம் சொற்களை வாசிக்க முடிகின்றது

-

மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள் - ஆய்வில் தகவல்
# இதுக்கெதுக்குடாஆய்வுஎல்லாம். லூசுப்பசங்களா! :)

-

ஒருவரை மகிழ்விப்பதைவிட, கோபப்படுத்துவது எளிதாக இருக்கின்றது!

-

என்னதான் இருக்கு என எல்லாவற்றிலும் எட்டிப்பார்த்தது ஒரு காலம், எதுக்கு இதுல தலையை விடனும்னு ஒதுங்கிப்போவது ஒரு காலம் #இணைய பொங்கல்கள்

-

வெகு இறுக்கமான, கடுப்பான மனோநிலையை, பூங்கொத்து போல் கைகளில் தஞ்சம் புகும் குழந்தையால், ஒற்றை நொடியில் ஒட்டுமொத்தமாய் கரைத்துவிட முடிகிறது!

-

இருக்கும் பதில்களுக்கு கேள்விகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

-

பாராட்டை பொதுவில் சொல்லு, குறையை தனியா சொல்லுனா, மக்கள் எதை எங்கிட்டு எப்படிச் சொல்லனும்னு தெளிவா இருக்காங்க!
-

எல்லோருக்குமே மத்தவங்க மட்டும் தங்களைவிட சந்தோசமா இருக்கிற மாதிரியே ஒரு மாய நினைப்பு #ஃபீலிங்ஸ்!

-
ஏற்ற வேடத்துக்கு 100% நேர்மையாய்ப் பாடுபடும் நடிகர்களுள் ஒருவர் "பிரஷாந்த்".
#இதை எழுதினவன் மட்டும் என் கையில கிடைச்சா, சட்னிதான்! :)

-

பால், தகுதி, அழகு, வசதியென எல்லாம் கடந்து ஒருவரைக் கூடுதலாய் நேசிக்கும்போது நினைக்கத் தோன்றுகிறது இது ஏதோ ஜென்மத்தின் விட்டகுறை தொட்டகுறையென

-

கடிக்கும் கொசுவைத் தடுக்க முடியாதபோது வலிமையற்றவனாகிறேன்!

-

பலருக்காக சிலரையும், பலவற்றிற்காக சிலவற்றையும் தாங்கிக்கொள்கிறோம் # சமரசங்கள்

-

எல்லாக் கேள்விகளுக்கும் அவளால் அன்பை மட்டுமே பதிலாகத் தரமுடிகின்றது.

-

முல்லை பெரியாறு விசயத்துல சினிமாக்காரங்க மழுப்புன மழுப்பல் இருக்கே யெப்பா, தண்ணியில்லாட்டி 5 மாவட்டத்துல திருட்டு DVDலகூட படம்பார்க்க ஆளிருக்காதே!

-


போராட்டங்களை கலவரங்களாக மாற்றி பின் கொண்டாட்டங்களாக மாற்றுவதில் மனிதசமூகம் மிகக் கேவலமாய் முன்னேறிவிட்டது

-

IPL போட்டியில் ஹர்பஜன் சிங் என்னை அறையவேயில்லை - ஸ்ரீசாந்த் பல்டி # முல்லைப் பெரியாறு மேட்டரை டீல் பண்ண உன்னை மாதியான ஆளுதான்யா சரி!

-

ஆதலினால்....





தடுமனில் தவித்தவனிடம்
ஆவி பிடித்தாயா என்றாள்
அருகில் சூடாய் மூச்சுவிட்டபடியே!

-

மழைக்கு ஒதுங்க வந்தவள்
உருவாக்கிவிட்டுப் போகிறாள்
ஒரு பெரும் புயலை!

-

விதைகளை பூக்களாக
மாற்றும் இரசவாதத்தை
அவள் மட்டுமே அறிந்திருக்கிறாள்!

-

மௌனங்கள் நிரம்பிய காதலில்
எழுதவும் வேண்டுமா
கடன் வாங்கி ஒரு கவிதையை!

-

பூக்கள் உரசி
நெருப்பு மூளும் மாயம்
முத்தங்களில் மட்டுமே!

-

படத்தில் முத்தம் பதிக்கவா
எனக்கேட்டாள், வேண்டாம்
எறும்பு மொய்க்கும் என்றேன்!

-

ஆனந்த விகடன் - என் விகடன் “வலையோசை”யில் நான்!

என் விகடன் - கோவை அட்டைப் படம்







ஒருவேளை சாப்பாடு ஒரு ரூபாய் - கட்டுரை குறித்து




சாம் ஆண்டர்சன் - கட்டுரை குறித்து
அதீத நெகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் வார்த்தைகள் தொலைந்து போய்விடுகின்றன அல்லது தீர்ந்து போய்விடுகின்றன.  
 கவிதை, கட்டுரை, சிறுகதை, உலகப்படங்கள் என எதுகுறித்தும் எந்தவித அனுபவமுமின்றி, திட்டமிடலின்றி, இலவசமாகக் கிடைக்கிறதே, அதுவும் தமிழில் எழுதமுடிகின்றதே என்ற எண்ணத்தில் மட்டுமே வலைப்பக்கத்தை எட்டினேன். அதுவும், எதையோ தேட, எதுவோ கிடைக்க, கிடைத்தை வாசித்து நேசிக்க.... நேசித்த நெகிழ்ச்சியில் நாமும் எதையாவது எழுதுவோமே என்று தொடங்கிய வலைப்பக்கத்தின் மூலம் எனக்கு கிடைத்த அங்கீகாரம் என்பது வார்த்தைகளில் அளவெடுக்க முடியாதது.


ஒரு கிராமத்து சாமானியனின் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதை மனம் முழுக்க மகிழ்ச்சியோடு தாங்கிச்செல்கிறேன். வலைப்பக்கத்தில் எழுதத் துவங்கியபின், எழுதும் நோக்கத்தோடு நான் இதுவரை சந்தித்த நபர்கள் எனக்குள் நிகழ்த்திய மாற்றங்கள் அளப்பரியது. 


மிகுந்த நேசிப்புக்குரிய ஆனந்தவிகடனில் அதுவும் நான் அதிகம் புழங்கும் எங்கள் கொங்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்கள் அடங்கிய ”என் விகடனில்” எனது வலைப்பக்கத்திற்கு சிறப்பானதொரு அறிமுகத்தை அளித்திருக்கும் விகடனுக்கு கோடானுகோடி நன்றிகள்.


ஒவ்வொருகட்டத்திலும் என்னைத் தட்டிக்கொடுத்து, ஊக்கப்படுத்தி, செம்மைப்படுத்தி வரும் அனைத்து இணைய நண்பர்களுக்கும் நன்றிகள்.


ஒரு வலைப்பதிவராக எனக்கு கிடைத்திருக்கும் இந்த மகிழ்ச்சியை எனது “ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமத்”திற்கு சமர்ப்பிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி எய்துகிறேன்.


இந்த வாரம் வலையோசைப் பகுதிய அலங்கரித்திருக்கும் பதிவர்கள் அதிஷா, கேவிஆர், புதுகைத் தென்றல், டக்ளஸ் ராஜூ ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

-0-

கீச்சுகள் - 11



நான் எழுதநினைக்கும் உணர்வு தளும்பும் வரிகளை என்னை விடச்சிறப்பாய் எவரேனும் எழுதிடுகையில் நான் தோற்றுப் போகிறேன் என்வரிகள் ஜெயித்துவிடுகின்றன

-

கடவுள்ஹிக்ஸ் போஸன்இருப்பது உண்மை-செய்தி. ஆசிரமம், கெடாவெட்டு, மாலை விரதம்னு ஆளாளுக்கு ஆரம்பிச்சிடுவாங்களே #கடவுள் பாவம் :)

-

சிலரிடம் சேரவேண்டிய செய்தியை, ஒருவரிடம் சொல்லி அந்தச்சிலரிடம் சொல்ல வேண்டாம் எனச்சொல்லுங்கள் அனைவரிடமும் சரியாகப்போய்விடும்! #எப்பூடி:)

-

அடர்ந்து வெற்றி பெறுபவனிடம், கொண்டாடிக் கொண்டாடி உலகம் பொறு(றா)மையாய் எதிர்நோக்கி காத்திருக்கிறது, அவன் முதல் தோல்வியைக் கொண்டாட!

-

சில கடித உறைகளை வாங்கிய வேகத்தில் கிழிப்பது தெரிந்தால், தபால்காரர் வழியிலேயே கிழிச்சுடுவார்னு நினைக்கிறேன் #ஆணிகளில் சில தேவையில்லாததும்

-

உண்ணாவிரதம்னா காலை 6 - மாலை 6 மணிதானே, கொஞ்ச நாளா காலை 8 - மாலை 5 வரைதான் உண்ணாவிரதமாம்# பேசாம இரவு 9 - காலை 8னு கூட மாத்திக்கலாம் போல!

-

பாரதியின் எழுத்தில் வழியும் கம்பீரமே, அவரை வரைந்திருக்கும் அனைத்து ஓவியங்களிலும் வெளிப்படுகிறது

-

"வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்” - பாரதி #வெள்ளக்காரன் கட்டின முல்லை பெரியாறுக்கே மூச்சுமுட்டுது சாமி!

-

அன்பும் நட்பும் எதையும் கொண்டாடும்!

-

16GB SPY PEN 3.2MP Cam Video/Recording/Photos MRP:4999 U pay:1990 Hurry # SMS அனுப்பிட்டே இருக்கான். வாங்கி அவன் வீட்லையே வெச்சுடலாமா?

-

ஜெ.மோ-வின் யானை டாக்டர் படித்த பிறகு, அரசு 48 நாட்களுக்கு யானைகளை காட்டுக்குள் அனுப்புவது அவசியம் என்றுதான் தோன்றுகிறது.

-
ஆண்மையற்ற அமைப்புகளில் மத்திய நீர் ஆணையமும் ஒன்று என்றே நினைக்கின்றேன். தண்ணீருக்கான வஞ்சகம் இனி போராகவும் மாறலாம்.

-

பெரும்பாலானோர் அமைதியாகக் கவனிக்கின்றார்கள் தளும்பும் அரை குடங்களை

-
BMW காரின் பின் இருக்கையில் ஒரு சாக்கு மூட்டையை வெச்சிருக்காங்க. ஒருவேளை பணமூட்டையா இருந்திருக்குமோ!? #பெட்ரோல் பங்க்

-
தண்ணீரைவிடச் சுவையானதும் கண்ணீரைவிடக் கனமானதும் ஏதுமில்லையெனினும் சூழல்களே தீர்மானிக்கின்றன.

-

எழுதுவதில் என்ன பெரிய கடினம். வார்த்தைகளைச் செதுக்குவதும், எண்ணிக்கையை குறைப்பதும்தான் கடினம்ம்ம்ம். :)

-

நீங்கள் எதுகுறித்து வேண்டுமானாலும் வினாத் தொடுக்கலாம். பதில் எனக்குத் தெரிந்ததிலிருந்துதான் #'விதி'

-


யோசிக்காமல் நிகழ்வது உணர்வுப்பூர்வமான தாக்குதல், ஆறஅமர யோசித்து, திட்டமிட்டுத் தாக்குவது ஒளிந்துகிடந்த, தீர்க்கவேண்டிய வன்மத்தின் வடிகால்!

-

இணையத்துக்கான புனைப்பெயரை சிலபேரு ரொம்படெர்ர்ர்ர்ரராவெச்சுக்கிறாங்களே... மெய்யாலுமே அவங்க அம்புட்டுடெர்ரரா ஆட்கள்தானா!?

-

இந்தியா மாதிரி ஒரு நாடு உண்டா? குஜராத் சரக்குக்கு தடை, ஒடிசா காய்ச்சி விற்கலாம். கேரளா கர்நாடகா கள் அனுமதி, தமிழக அரசு சரக்குலதான் ஓடுது!

-

போன தலைமுறையின் பிற்பாதியில் ஆரம்பித்தது, தங்களைவிட்டு பிள்ளைகளைப் பிரித்து ஒதுக்கி வைத்து அழகு பார்க்கும் அவலம்!

-

மனிதர்களிடையே 143 உணர்வு சாகும்பொழுது 144 தடையுத்தரவு பிறக்கிறது!

-

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்துஅன்புமணி
# வேணாம்ணே, மனுசமக்கா ஏற்கனவே பஸ் கட்டணம் பால் விலைனு கடுப்புல இருக்காங்க!

-

கத்திக்கதறிய தமிழனின் வார்த்தைகளும், ஓசையும் தமிழர்க(ளுக்கும்)ள் தவிர்த்து புரியவேயில்ல. ’கொலவெறிமட்டும் எப்படி எல்லோருக்கும் புரிஞ்சுது!

-

ரசிப்பின் சுவை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் ரசனை என்பதும் ஒரு வரம் என!

-

ஆள்மாறாட்ட புதுவை முன்னாள் அமைச்சரிடம் 300 கேள்விகள். அடக்கொடுமையே 30 - 40 கேள்விக்கு பதில் எழுத கூலி ஆள் வெச்சதுக்கு 300 கேள்வியா!?

-

தெரியாத எண்ணிலிருந்து போன் செய்துஎன்னை யார்னு தெரியுதா?”னு கேக்குறவங்க தலையில் எல்லாம் கொம்பு முளைக்க கடவுவதாக!

-

மக்களவை உறுப்பினர்கள் iPad வாங்க தலா ரூ.50000 நிதி ஒதுக்கீடு. # iPad இயக்க ஒரு ஆள் வெச்சுக்கனுமே அதுக்கும் சம்பளம் கொடுத்துடுவாங்களா?

-

தியாகங்களின் பின்னால் இருக்கும் வலியும் விலையும் பெரும்பாலும் தெரிவதில்லை

-

கவிதை ஒன்று தேடும் பொழுதில்என்னடா செய்றேஎனும் அவளின் அழைப்பில் கண்டடைந்தேன் எனக்கானதொரு கவிதையை!

-

செய்யவேண்டிய வேலை தவிர, மற்ற எல்லா வேலைகளும் ஆர்வம் மிகுந்ததாக இருக்கு. #உருப்பட்ட மாதிரிதான்

-

திமுக கூட்டத்துக்கு பாட்டுப் போட்டிருக்காங்கஏறுது பாரு விலைவாசி. இந்த எம்.ஜி.ஆரு ஆட்சிக்கு வந்த முகராசி”.  # அட ச்ச்சே கேசட்ட மாத்துங்கப்பா!

-