சிதைவுகள்

இரட்டைக் கொலை
சடசடவென முறிகிறது மரம்
பிடிபடாத கவிதைக்காக
கசக்கி எறிந்த காகிதத்தோடு

வலி
விழுங்கும் கோழித்துண்டு
தொண்டையில் குத்துகிறது
கூண்டுக்கோழி அனத்தலில்

பைத்தியம்
பிரிவுகளின் மையத்தில் நின்று
நாலா திசையும் வழி சொல்கிறான்
பைத்தியக்கார உலகத்துக்காக

சிறை
மதகிடுக்கில் பீறிட்டு வரும் நீரை
குடுவைகளில் சேமிக்கிறேன்
பிடித்த வடிவத்தில் சிறைவைக்க

_____________________________________

உதிரும் எழுத்துகள்

கனமாய், காதலாய், வலியாய்
சினமாய், மணமாய், காமமாய்
கலந்தடிக்கும் உணர்வுகளோடு
உனக்கான எழுத்துகளைத் தேடுகிறேன்

எண்ணத்தின் இண்டு இடுக்குகளில்
சிக்கிக் தவிக்கும் எழுத்துகளை
மீட்டெடுத்து வருகிறேன் உன்போல்
அழகாய் ஒரு வாக்கியம் எழுத

இலகுவாய் கோர்த்தெடுக்கிறேன்
மிகக் கச்சிதமாய் சில நேரங்களில்
இணைய மறுக்கின்றன சிலமுறை
என்னதான் போராடினாலும்

எப்படியோ எழுதி முடிக்கிறேன் உனக்காக
எனக்குப் பிடித்த ஒரு கவிதையை,
கால் கடுக்க நடந்த கடும் வெயிலில்
கண்ட வேம்பு நிழலின் சுகமாய்

உன்னிடம் வாசிக்க ஓடோடி வந்து
உன்முகம் பார்க்கும் போது ஏனோ
உதிர்ந்து போகிறது ஒவ்வொரு எழுத்தும்
எனக்காய் கவிதை சிந்தும் உன் புன்னகைக்கு முன்

_________________________________

வேற எந்தக் கெட்ட பழக்கமுமில்ல

அது ஒரு மூனு வருசம் இருக்கும். நான் ஷேர் மார்க்கட்டில் காலடி எடுத்து வைத்த ஆரம்பம் (பெரிய்ய்ய்ய்ய்ய்ய காலடி வைக்கிறாராம்... ங்கொய்யாலே பில்டப் வேறையா.... மேல சொல்லுய்யா). நானும் பெருசா பங்குச்சந்தையில வியாபாரம் பண்ணி பட்டாசு கிளப்பிடலாம்னு நம்பிக்கையோட தெனத்திக்கும் காத்தாலே ஒன்பதேமுக்காலுக்கு சோறு தின்னும் திங்காம வேகவேகமா ஷேர் புரோக்கிங் ஆபிசுக்கு ஓடீருவேன். வீட்ல ஷேர் மார்க்கட்டுக்கு போறதப் பத்தி ரொம்ப பெருமையா வேற பேசிக்குவாங்க. ஆனா அங்க போய் திருவிழாவுல தொலைஞ்சு போன மாதிரி, திருதிருனு நான் முழிக்கிறது யாருக்கும் தெரியாது.


அங்க பார்த்தாக்க, கம்ப்ப்யூட்டர் ஸ்கிரீன்ல பொளிச்சு பொளிச்சுனு ஒரே நெம்பரா ஓடிக்கிட்டிருக்கும்.... நானும் வேடிக்கை பார்த்துக்கிட்டேயிருந்தேன்... கண்ண மூடி முழிக்கிறதுக்குள்ளே பல தடவ மாறிடுது, ஆனாலும் ஒன்னும் புரியல.... ஆனா அதே கம்ப்யூட்டரச் சுத்தி ஏழெட்டு பேர் ஒக்காந்துக்கிட்டு உடா...............ம பார்த்துக்கிட்ருந்தாங்க... சரி நாமளும் தொழில கத்துக்குவோம்னு அவங்கள மாதிரியே கம்யூட்டர் ஸ்கிரீனையே பாத்துக்கிட்டு ஒக்காந்திருப்பேன். இப்படியே ஒரு வாரம் ஓடுச்சு, ஒன்னும் புரிபடலை. புரிபட்ட ஒரே விசயம் 11 மணி ஆச்சுன்னா, மசால் வடை மணக்க ஆரம்பிச்சிடும்.

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சது. அந்த ஏழெட்டு பேர்ல ரெண்டு பேர் மட்டும் ரொம்ப பிசியா எந்நேரமும் ஏதாவது சொல்லிட்டேயிருப்பாங்க... ”அத பை பண்ணுங்க சார், ம்ம்ம்ம் அடிங்க அவன பார்த்துக்கலாம்” (அடிங்கன்னா.. விக்கிறதாம்....அது தெரிய 30 நாள் ஆச்சு. ரெபிடெக்ஸ்ல முப்பது நாளில் பங்குச்சந்தை வார்த்தைகள் கற்றுக் கொள்ளலாம்னு புக்கு வரமா போனதால எனக்குத் தெரியல) அப்படினு பிசியாவே இருப்பாங்க.

நானும் இந்த ரெண்டு பேரையும் நல்லாப் பார்த்து தொழில கத்துக்கிடலாம்டானு நம்ம்ம்ம்ம்ப்பிக்கையா அவங்களையே பார்த்துக்கிட்டிருப்பேன். அவங்க வட சாப்புடறது, டீ குடிக்கிற ஸ்டைல கூடப் பார்ப்பேன்... காலையில வந்த உடனே ரொம்ப பிசியா இருக்கிற ஆளுக... மத்தியானம் ஆகஆக கொஞ்சம் டல்லடிக்க ஆரம்பிச்சிருவாங்க... அப்புறம் மேனேஜர் கிட்ட கேப்பாங்க... குருட் ஆயில் (கச்சா எண்ணைங்க) என்ன ரேட்டுன்னு..... அவ்வளவுதான் குருடு எறுது... மார்க்கெட்ட சாத்திருவாங்கனு சொல்லுவாங்க, நான் கேட்பேன்.. ”குருட் ஏறுனா ஏன் சந்தைய மூடிறுவாங்கனு” அதுல ஒருத்தரு அசோகன் (அதாங்க பழைய நடிகர்) மாதிரி சிரிப்பாரு, ”சாத்துவாங்கன்னா, மார்க்கட்ட அடிச்சிருவாங்னு அர்த்தம்”னு.

எனக்கு ஒரு கருமாந்திரமும் புரியல ”சந்தைய யார் வந்து அடிப்பாங்க, எப்புடி அடிப்பாங்க”னு, அப்புறம் தான் புரிஞ்சுது சாத்திருவாங்க, அடிச்சிருவாங்கன்னா... சந்தை இறங்கிடும்னு (மவனே ரெபிடெக்ஸு நீ மட்டும் கையில கிடைச்சா கொலைதான்)

தெனமும் காலையில உற்சாகமா வந்தவங்க... மூனரை மணிக்கு சந்தை முடிவடையும் போது காத்து போன பலூன் மாதிரி டல்லா வேற போவங்க. ரொம்ப நம்பிக்கையா வேற பேசிக்குவாங்க ”இன்னிக்கு தப்பு பண்ணிட்டோம், அந்த ஒன்ன மட்டும் மாத்திப் பண்ணியிருந்தா லாட்டரிதான், நாளைக்கு பார்த்துருவோம் ஒருகை”. எனக்கு அந்த தன்னம்பிக்கை ரொம்ப பிடிக்கும் (ஹ்ஹும், கெட்ட நேரம் வந்துதுன்னா... எல்லாம் பிடிக்கும்டா)

இப்பிடியே போச்சு... தெனமும் பத்தாயிரம் ரூவா பணத்தோட நானும் போவேன்... வெளியே வரும் போது பத்தாயிரம் ரூவா லாபத்தோட திரும்பிவருவேன்(!!!!). அட கொண்டு போன பணம்தான். மார்க்கட்ல நஷ்டம் பண்ணாத வரைக்கும் அது லாபம்தானே.

நாமதான் கம்னு இருக்க மாட்டோமே... சரி இந்த பத்தாயிரத்துல ரிஸ்க் எடுத்து அவங்க ரெண்டு பேரும் எந்த ட்ரேடில் (ஒரு தடவை வாங்கி விற்பதை ஒரு ட்ரேடு என்பார்கள்) சம்பாதிக்கிறாங்களோ அதுல நாமும் இறங்கனும்னு தயாரா இருந்தேன்... ஒரு மாசம் பார்த்ததில ஒரு ஃபார்முலா புரிஞ்சுது... சராசரியா மூன்று ட்ரேடு நஷ்டம் ஆச்சுன்னா அடுத்த ட்ரேடு லாபம் எடுப்பாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதே மாதிரி நாலாவது ட்ரேடுல நானும் குதிச்சேன்... ரெண்டு பேரும் கைகுடுத்து... ”ஆர்டர் போடுங்க சார்... நாங்க கூட இருப்போம்னாங்க....” அட அந்த இடத்தில அந்த தன்னம்பிக்கைதான் முக்கியமாத் தெரிஞ்சுது. எவனொருவன் ஒரு காரியத்தை தொடங்கும் போது, அதே தொழிலில் இருப்பவனிடம் தன்னம்பிக்கையை பெறுகிறானோ... அவன் அதீத வெற்றி பெறுவான்... இந்த அருமையான தத்துவத்தை நானே கண்டுபிடிச்சு, எனக்குள்ளேயே திரும்ப திரும்பச் சொல்லிக்கிட்டேன்...

நானும் இறங்கினேன்... எதை, எங்கே வாங்கனும்னு அதுல பாண்டிங்கிறவருதான் சொன்னார். வாங்கினேன். அரை மணி நேரம் கழிச்சு.. இப்போ வித்துடுங்கன்னு சொன்னார்... கணக்கு பார்த்தா ஆயிரம் ரூபா லாபம்..... அட.... சாமி... கையில பிடிக்க முடியல.... ஏங்க பத்தாயிரம் போட்டு... அரை மணி நேரத்துல ஆயிரம் ரூபானு சொன்னா.. எப்பிடி இருக்கும்..

அடுத்த நாள் ஒன்பதை மணிக்கே ஆஜர்.... பாண்டியை தலைவரேனு கூப்பிட ஆரம்பிச்சேன்... முதல் நாள் செய்த அதே தந்திரம் வெறும் 200 ரூபாதான் கிடைத்தது. வீட்டில் போன் செய்து நேற்று போட்ட சட்டையை துவைத்து அடுத்த நாளுக்கு தயார் படுத்தச் சொன்னேன் (..ஸ்ஷ்ஷ்ஷ் சென்டிமென்டுங்க). ஆனா... அடுத்த நாள் பால் பாண்டி வரல. போன்லயே என்னென்னவோ ட்ரேட் பண்ணினார்.... இப்படியே இரண்டு வாரம் ஆனது... கையில் இருந்து கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் நஷ்டம் ஆகியிருந்தது..... அட பாண்டிக்கு இல்லைங்க... எனக்கு... எனக்கு

அந்த ஆபீஸ் மேனேஜர் மெல்லமா என்னிடம் பேச்சுக்கொடுக்கதார். ”ஏன் சார்.. இவ்வளவு வேகமா பண்றீங்க... நீங்க தனிப்பட்ட முறையில மார்க்கட்ட ஸ்டடி பண்ணுங்க... மத்தவங்களை ஒட்டு மொத்தமா ஃபாலோ பண்ணாதீங்க” என்றார். ஏனோ அவருடைய அட்வைஸ் பிடிக்க வில்லை...(அது பிடிச்சா உருப்பட்டுத் தொலைச்சிடுவோமே) இத்தனைக்கு பாண்டி ஷேர் மார்க்கட்ல இருபது வருச அனுபவம்(!!!!!) வேற.

பாண்டி ஷேர் புரோக்கிங் ஆபிஸ்க்கு அடிக்கடி வருவது குறைந்தது.... சில சமயம் வருவார், பத்து நிமிடம் கூட உட்கார முடியாது, அவருடைய மனைவியிடமிருந்து ஷேர் ஆபிஸ் நெம்பருக்கு போன் வரும்.... “எங்க வீட்டுக்காரி கேட்டா, நான் இங்க வரலைனு சொல்லிடுங்க”னு சொல்லிட்டு ஓடிப்போயிடுவார். எனக்கு ரொம்ப வருத்தமா போச்சு, அட நம்ம ஹீரோ இல்லாம எப்படி தொலைச்ச ஐம்பதாயிரத்த திருப்பி எடுக்கிறதுன்னு...

அடுத்த சில நாட்களில் திடீர்னு வர்றதும், கொஞ்ச நேரத்துக அவருக்கு போன் வர்றதும் சகஜமா இருந்துச்சு. ஒருநாள் பார்த்தா அவரோட சம்சாரம் ஆட்டோவுல ஷேர் ஆபிஸ்க்கு வந்துட்டாங்க. அதுக்கப்புறம் பாண்டி வரவேயில்லை. நானும் மார்க்கெட்ல ஒன்னும் பண்ணாம இருந்தேன். ”பணம் ரெடியா இருக்கு, ஆள் அனுப்புங்கன்னு” பாண்டிகிட்டேயிருந்து போன் வந்தது. பணம் வாங்கப்போன ஆள் என்னிடம் கள்ளச்சிரிப்பாய்”சார் உங்க தலைவர பார்க்கப் போறேன், வர்ரீங்களா” என்று கேட்டார்.

அட நம்மாளை போய் பாத்துட்டு வந்துடுவோம்னு நானும் சந்தோசமா போனேன். அவர் வீடு இருக்கும் பகுதிக்குப் போய் ஆள் நடமாட்டம் குறைவான வீதியில் நின்னுக்கிட்டு “பாண்டி சார், நான் ஸ்பாட்ல இருக்கேன்” னு இவர் போன் பண்ண, எனக்கு ஒரே மர்மமாக இருந்தது. கொஞ்ச நேரம் கழிச்சு இவரோட செல் போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்துச்சு. இவரு அண்ணாந்து பார்க்க மாடியிலிருந்து ஜன்னல் வழியாக ஒரு மஞ்சப்பை முடிச்சு விழுந்துச்சு. இவரு எடுத்துகிட்டு ஆபிஸ்க்கு போலம்னார். பாண்டி என்ன பார்த்து கைய அசைச்சாரு.

ஆபிஸ் வந்தும் எனக்கு ஆச்சரியம் அடங்கல என்ன நடக்குதுன்னு. அதுக்குப் பின்னாடிதான் தெரிஞ்சுது,

நம்ம பாண்டி மாசத்தில இருபதுக்கு குறைஞ்சது பதினாறு நாளாவது நஷ்டம் செய்வார்னு. ரெண்டு வருசத்துல இந்த ஆபிஸ்ல மட்டும் குறைந்தது பத்து லட்சம் நஷ்டம்னு.

பெரிய அளவில் பரம்பரையாக நடக்கும் கடை இருக்கிறதால பணம்பத்துன கவலை இல்லையாம். கொஞ்ச நாளாக அவரோட சம்சாரம் ரொம்ப கெடுபிடி பண்றதால, போன் பண்ணி ஜன்னல் வழியா பண முடிச்ச வீசுவாராம். அவருக்கு கம்பெனி, பணமே இல்லாம கூட ட்ரேடு பண்ணலாம், அதிக பட்சம் ஐந்தாயிரம் நஷ்டம் ஆயிடுச்சுன்னா அன்னிக்கு ட்ரேடு அவ்வளவுதானு சலுகை கொடுத்திருந்தாங்க. ஐந்தாயிரம் என்னைக்கெல்லாம் ஆகுதோ, அன்னிக்கு உடனே கூப்பிட்டு பணம் முடிச்ச வீசிடுவாரம்.

எனக்குள்ள கேள்வின்னா கேள்வி அத்தன கேள்வி. இத்தன வருசம் பண்ணி, கிட்டத்தட்ட தெனமும் நஷ்டமா? சரி தெனமும் நஷ்டம்னா அந்தக் கருமத்த ஏன் பண்ணனும்? இப்படி பல கேள்வி... ஒருநாள் பெரிசா லாபம் சம்பாதிச்சப்போ எல்லார்த்துக்கும் விருந்து வச்சாராம் ஒரு ஹோட்டலில். அப்போ மேனேஜர் ”ஏன் சார் இப்படி நிறைய நஷ்டம் பண்றீங்கன்னு” கேட்டப்போ “சார், சொத்து பலகோடிக்கு இருக்குங்க. நான் தண்ணி, தம்மு, சீட்டு இப்புடி எந்தக் கெட்ட பழக்கத்திலேயும். பணத்த அழிக்கிறதில்லை... மார்க்கட் மட்டும்தான் சார்... வேற எந்தக் கெட்ட பழக்கமுமில்ல, அதனால சரி இதுவாவது இருந்துட்டுப் போகுதேன்னு பண்ணிக்கிட்டிருக்கேன்”னு சொன்னாராம்

அதக் கேட்டுட்டு அன்னிக்கு ஓடிவந்தவன்தான் ட்ரேட் பண்றேன்னு அந்த ஷேர் ஆபிஸ்க்குள்ள மார்க்கெட் நடக்கிற நேரத்துல இதுவரைக்கும் போனதில்லை.. பாண்டியையும் பார்க்கவேயில்லை.
_______________________________

பொய் முகங்கள்

குழந்தையாய்
சிறுவனாய்
இளைஞனாய்
காதலனாய்
கணவனாய்
அப்பாவாய்
தாத்தாவாய்
.................என

நினைவு தெரிந்த
நாள் முதலாய்

அழகில்
அன்பில்
அறிவில்
பண்பில்
காதலில்
காமத்தில்
பணத்தில்
குணத்தில்
கோபத்தில்
பொறுமையில்

தொடர்ந்து தொடர்ந்து
யாரோ ஒருத்தனோடு
ஒப்பிடப்படுகிறான்

ஒருபோதும்
பொருந்தவேயில்லை

ஒருத்தருக்கும் தெரியவில்லை
ஒருபோதும்
அவனை அவனோடு மட்டும்
ஒப்பிட்டுப் பார்க்க!

________________________________

தூக்கணாங்குருவிக்கூடு





ஊட்டோரம் ஒசந்த தென்னையில
ஒய்யாரமா வளைஞ்ச மட்டையில
எங்கிருந்தோ வந்த ஒரு குருவி
என்னமோ மாயம் பண்ணுச்சு

ஓடியாடி வேல பாத்து தேடித்தேடி
எடுத்து வந்து அவசரமா கட்டுனதுல
ஆடி அசையுது அழகான கூடு ஒண்ணு
ஓலக்கீத்துல ஒட்டிவச்ச பந்து போல

ஆடி மாசம் அடிச்சு தள்ளுன காத்துல
பத்தாளு மேஞ்ச கூரை பறந்து போகப்பாத்துச்சு
மரம் ஆடுச்சு, மட்டையும் ஆடுச்சு கூடவே
கூடும் ஆடுச்சு ஆனா குருவி ஆடுச்சு ஒய்யாரமா

ஐப்பசியில பேஞ்ச அடமழைக்கு
ஆறேழுபக்கம் ஒழுகுது ஊத்துது...
குருவியும் குறுகுறுனு கூடு தங்குச்சு
ஒரு சொட்டு தண்ணி உள்ள படாம

மலைய கொடஞ்சோம், மரத்த வெட்டுனோம்
மழைய தொலச்சோம், மண்ண கெடுத்தோம்
ஆனா ஒருத்தருக்கும் தெரியலையே
ஒரு தூக்கணாங்குருவி போலக் கூடுகட்ட

________________________________________________

முனையுள்ள நூல்கண்டு

பார்வையை சற்று விசாலப்படுத்தித் தேடிப்பாருங்கள். இரண்டு விதமான மனிதர்களை நாம் பார்க்க முடியும், ஒன்று தனக்கு வந்த பிரச்சனைகளை சரி என ஏற்றுக்கொண்டு நடைபோடுபவர்கள் மற்றொன்று தனக்கு வந்த அந்த பிரச்சனையை ஏற்றுக்கொள்ள மறுதலித்து அதை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு அதைப் பற்றியே என்னேரமும் பேசிக் கொண்டிருப்பவர்கள். ஒன்று மட்டும் தவிர்க்க முடியாத உண்மை பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் இல்லை.

வாழ்க்கையில் ஏதாவது ஒரு வடிவில் சிக்கல்களோ அல்லது பிரச்சனைகளோ வருவதை ஒரு போதும் தவிர்க்க முடியாது. ஆனால் வந்த பிரச்சனையை எப்படி கையாள்கிறோம் என்பதுதான் முக்கியம்.

காரணம் இருந்தாலும், சில சமயம் காரணம் இல்லாவிட்டாலும் கூட பிரச்சனை என்பது ஏதோ ஒரு உருவத்தில் வரத்தான் செய்யும். முதலில் நமக்காக வரும் பிரச்சனையை முழுதாய் உள்வாங்குவது அவசியம், அப்போதுதான் அதன் நீள அகலம் தெரியும், அதை எப்படி அணுகுவது என்பது குறித்து ஆராய முடியும். இங்கு மிக முக்கியம் குறைந்த பட்சம் பிரச்சனையை உள்வாங்குவது, அதை விடுத்து பிரச்சனையை உள்வாங்காமல் உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு, எனக்கு பிரச்சனை வந்துடுச்சு, எப்படித் தீர்க்கப்போறேனேனு தெரியலை என்று புலம்புவதால் ஒரு போதும் பிரச்சனையைத் தீர்க்க முடிவதில்லை.

என்னிடம் யாராவது தங்களுடைய பிரச்சனையை குறித்து பேசும் பொழுது, முதல் தடவை அதை முழுதாக கேட்பேன். அதே நபர் திரும்பவும் அதே பிரச்சனை குறித்து முதலில் பேசிய விசயத்தையே மீண்டும் பேசினால் கிட்டத்தட்ட புரிந்துவிடும், அவர் தன்னுடைய பிரச்சனையை எதிர்கொள்ளத் தயாரில்லை. யார் ஒருவர் தன் பிரச்சனையை உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு அதைப் பற்றியே பேசுகிறாரோ அவருக்கு தீர்வு கிடைப்பது கடினம்.

அது போல் எப்போதும் பிரச்சனையை மட்டுமே தொடர்ந்து, தொடர்ந்து பேசும் நபர்களிடம் அடிக்கடி சொல்லும் விசயம்... ” நீ உயிரோடு இருப்பதற்கு, புத்தி தெளிவாக இருப்பதற்கு, உடல் நலத்தோடு இருப்பதற்கு, வேலையோ தொழிலோ செய்வதற்கு முதலில் சந்தோசப்படு, ஏதோ ஒரு கட்டத்தில் பிரச்சனையைத் தீர்த்து விடலாம் அல்லது பிரச்சனை பக்கத்தில் வைத்துக்கொண்டே வாழ்க்கையை நல்லபடியாக நகர்த்த பழகிக்கொள்ளலாம்” என்பதுதான்.

முகத்திற்கு நேராக கையை நீட்டி விரல்களை விரித்து அந்த விரல்களின் வழியே பாருங்கள்.... விரல்களின் ஊடாக உலகம் தெரியும், இப்போது விரல்களை மட்டும் பாருங்கள், விரல்கள் மட்டும்தான் தெரியும், உலகம் மங்கிப்போயிருக்கும்

முனைகள் இல்லாத நூல் கண்டு இல்லை, தேடினால் கிடைக்கும், சில சமயம் உடனே.... சில சமயம் காலம் தாழ்ந்து...
_______________________________________

தங்கக்கூண்டு

இந்தத் தலைமுறை இது வரை எந்தத் தலைமுறையும் கொண்டாடாத அளவிற்கு குழந்தைகளை தாங்குதாங்கென்று தாங்கிக் கொண்டாடுகிறது. அதுவும் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களின் குடும்பங்களில் வரும் சின்னச் சின்ன சண்டைகளுக்கு குழந்தைகள் மீது காட்டும் அதீத அன்பும் காரணமாக இருக்கின்றது.

கிராமப் பின்னணியிலிருந்து நகரத்துக்குள் புலம் பெயர்ந்தவர்கள் கூட குழந்தைகளை வீதிகளில், மண் புழுதியில், தங்கள் பகுதியில் இருக்கும் பூங்காக்களில், மொட்டை மாடிகளில் விளையாட அனுமதிப்பதில்லை. பள்ளிக்கு காடு, கரையில் நடந்து போய், பலமைல் தூரம் மிதிவண்டியில் போய் படித்தவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை குறைந்த பட்சம் தங்கள் வீதியின் எல்லை வரை நடக்க இன்று அனுமதிப்பதில்லை. வாசலிலேயே பள்ளி வாகனத்தில் ஏற்றி, இறக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.

வெளியில் விளையாடினால் ஆரோக்கிய குறைவாகிவிடும் என வீடியோ விளையாட்டுகளில் கட்டிப் போட்டு, வெளியில் அழைத்துச் செல்ல வாசல் படியில் நம் வாகனத்தை தயாராக நிறுத்தி எல்லா வகையிலும் நம் குழந்தைகள் சராசரியான வாழ்க்கையைத் தாண்டி வாழவேண்டும் என நினைப்பதும், இரவில் நீண்ட நேரம் குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கவும், காலையில் தாமதமாக எழுந்திருக்கவும் அனுமதிப்பதையும், பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில் ஏதோ ஒரு ஜங் ஃபுட்டை திணிப்பதையும், பாட்டிலில் அடைத்த குளிர்பானங்களையும், சாக்லெட்களையும் எப்போதும் குளிர்சாதனப் பெட்டியில் நிரப்பி வைத்திருப்பதையும் அன்பின் வெளிப்பாடு என்று நினைக்கிறோம்.

வீட்டில் அவர்களை சுயமாக பல்துலக்க, குளிக்க வைப்பதை கூட அனுமதிக்காமல் அல்லது அதை செயல் படுத்தத் தெரியாமல் நாமே செய்ய நினைப்பது அன்பின் பெயரில் திணிக்கும் வன்முறையாகவே தோன்றுகிறது. குழந்தைகள் மேல் இதுபோல் அன்பும் செல்லமும் பொங்கி வழிகிறது, திகட்டுமளவிற்கு பல நேரங்களில்.

யார் நமக்கு இப்படிக் கற்றுக் கொடுத்தது? எங்கே கற்றுக் கொண்டோம், ஏன் கற்றுக்கொண்டோம் இப்படி குழந்தைகளை வளர்க்க.

இன்னொரு விதமான குழந்தைகள் உலகமும் நமக்கு மிக அருகில் தானே இருக்கின்றது. நம் பகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அவர்கள். பெரும்பாலும் காலை நேரங்களில் சாரை சாரையாக தார் சாலையின் ஓரத்தில் அணி அணியாக கொஞ்சம் கசங்கிய சட்டையோடு, காலில் செருப்புகள் கூட இல்லாமல் தினமும் பள்ளிக்கு நடந்தே வருவதை கவனித்திருக்கிறேன். ஐந்திலிருந்து பத்து வயதிற்குள் இருக்கும்.

எல்லோரின் முதுகிலும் ஒரு புத்தகப்பை தொங்கிக் கொண்டிருக்கிருக்கும். சிலரிடம் மதிய உணவுக்கான பை தொங்கும், மற்றவர்கள் அநேகமாக பள்ளியில் மதிய உணவை உண்ணும் பிள்ளைகளாக இருப்பார்கள்.




நெரிசலான சாலைகளை மிக அநாயசமாக கடந்து போகக் கூடிய தைரியத்தை அவர்களுக்கு வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கிறது. தங்களை கடந்து போகும் இரு சக்கர வாகனங்களை எந்த வித கூச்சமும் இல்லாமல் கைகளை நீட்டி, கட்டை விரலை உயர்த்தி “அண்ணா... ஸ்கூலு வரைக்கு வர்ரேண்ணா... ப்ளீஸ்ணா” என கேட்கும் மன உறுதியை அந்தப் பிள்ளைகளிடம் சமூகம் கற்றுக் கொடுத்திருக்கிறது.

அநேகமாக அவர்கள் நகரத்தின் ஓரத்தில் பிதுங்கி நிற்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மனிதர்களின் பிள்ளைகளாகத்தான் இருப்பார்கள். நிச்சயமாக அந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் தினக்கூலிகளாகத்தான் இருக்க வேண்டும். சில பிள்ளைகளுக்கு காலை நேர உணவை வீட்டில் தயாரித்துக் கொடுக்க பெற்றவர்களுக்கு நேரம், வசதி இருப்பதில்லை. முதல் நாள் இரவு சமைத்த உணவையே அடுத்த நாள் காலையிலும் சாப்பிடவேண்டிய நிலை இந்தப் பிள்ளைகளுக்கு இருந்து கொண்டிருக்கும்.

மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது அந்தப் பிள்ளைகள் சாலையோரங்களில் குதூகலமாக விளையாடிக்கொண்டு போவதைப் பார்க்கமுடியும். வீட்டுக்குச் திரும்பும் நேரங்களில் அவர்களின் பெற்றோர் வீட்டில் இருக்க வாய்ப்பில்லை. யாராவது வேலைக்கு போகமுடியாத வயதானவர்கள் இருந்தால்தான் அவர்களைக் கவனிக்க வாய்ப்பிருக்கும், அப்படியில்லாத குடும்பங்களில் அந்த பிள்ளைகள் இரவு வரை கவனிப்பார் யாரும் இல்லாமல்தான் அவர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் அந்த குழந்தைகளிடம் ஏதோ ஒரு துணிவு அதிகம் குடி கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

விலை உயர்ந்த கல்வி, உலகத்தை உள்ளங்கையில் கொண்டு வரும் தொடர்பு வலை, விலை உயர்ந்த, சத்தான (!!!) உணவு, குடும்பத்தினரின் அதீத கவனிப்பு என கிடைக்கும் குழந்தைகளுக்கு, சமூகத்தோடு ஊடுருவிப் பழகும் வாய்ப்பு, சாலைகளில் சகஜமாக விளையாடிப் பெறும் நோய் எதிர்ப்பு சக்தி, சட்டென இன்னொரு மனிதனோடு ஒட்டும் திறன், எந்தச் சிக்கலையும் எதிர்கொள்ளும் மனோபாவம் திகட்டத் திகட்ட நாம் திணிக்கும் அன்பால் கொஞ்சம் குறைவாகவே புகட்டப்படுவதாகவே என நினைக்கிறேன்.

தங்கத்தில் செய்தாலும் கூண்டு சிறைதானே....

______________________________________________

சாயும் துலாக்கோல்



மேகக் கூடல் உிய மழைத்துளியாய்

தொப்புள்கொடி அறுந்த நாள் முதல்
நெளிந்து வளைந்து ஓடுகிறேன்
வாழ்வினில் ஒரு மனிதத் துளியாய்....

தொண்டைக்குழிக்குச் சற்றும் கீழே தொங்கும்
துலாக்கோல் இடவலமாய் ஊசலாடுகிறது
ஒருபக்கம் நல்லதும் மறுபக்கம் கெட்டதும்
துகள்களாகத் தொடர்ந்து படிந்திட....

அன்பு கனிவு காதல் காமம் கர்வம்
கோபம் குரோதம் செரக்கு பணிவு துரோகம்
எல்லாம் இயல்பாய் திணிக்கப்படுகின்றது
தேடித்தேடிப் பற்றுகிறேன் இன்னும் சில

விதவிதமாய் வர்ணங்களைப் பூசுகிறேன்...
வேடம் மாற்றி மாற்றிப் பூணுகிறேன்
மிகக் கவனமாக முடிந்தவரை நல்லவனாக
எனினும்ுயுர்கிறு  நல்லவன் தட்டு!

-

சுக்குநூறாக உடைத்தெறி

ஒரு படைப்பாளி மனதில் மிதந்து கொண்டிருந்த விசயங்களை இறக்கி வைக்கும் ஒரு தளமாகவே பெரும்பாலும் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறான். ஆரம்பத்தில் இலக்கு என ஏதும் இல்லாமல் எழுதியதை சக பதிவர்களும், திரட்டிகளும், எழுத்தையொட்டி வந்த பின்னூட்டங்களும், வாக்குகளும், காரசாரமான விவாதங்களும் தன் போக்கில் எண்ணற்ற வாசகர்களிடம் எடுத்துச் சென்றதை மறுக்க முடியாது. ஒரு கட்டத்தில் வலைத்தளம் நம் கைகளை இறுகப் பற்றிக் கொண்டதும் உண்மை.

படைப்பு குறித்து பேசுபவர்கள், பின்னூட்டமிடுபவர்கள் மற்றும் வாக்கு அளிப்பவர்கள் பெரும்பாலும் நமக்கு அடையாளம் தெரிந்தவர்கள். வாக்குகள் போடத் தெரியாமல், பின்னூட்டமிடத் தெரியாமல், எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளத் தெரியாமல், தொடர்பு கொள்ளும் அவசியமில்லாமல் பலதரப்பட்ட, பல்லாயிரக்கணக்கான நமக்கு அடையாளம் தெரியாத வாசகர்கள் ஏதோவொரு நம்பிக்கையின் பேரில் எங்கெங்கிருந்தோ தொடர்ந்து தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருக்கின்றனர்.

இன்று எதன் பொருட்டு தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறோம் என்ற சுய பரிசீலனை மிக முக்கியமானது. சுய திருப்திக்காகவா, சக பதிர்வகளுக்காகவா அல்லது நம்மோடு நேரிடையாக எந்த வகையிலும் தொடர்பில்லாமல் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்காகவா? இதில் எதன் பொருட்டு எழுத நினைக்கிறேமோ அதன் பொருட்டு அதற்கான நேர்மையைக் கடை பிடிப்பது அடிப்படையான ஒன்று.

ஆனால் வாசகர்கள் கொடுக்கும் அதீத அங்கீகாரம் சில படைப்பாளிகளுக்கு கர்வத்தை ஊட்டி ஒரு கட்டத்தில் அகந்தையாக மிளிர்கிறது.

அந்த அகந்தை .....

* சக படைப்பாளிகளை தெருவில் சண்டையிடும் விலங்குகளெனவும், அவர்களின் படைப்புகளைக் குப்பைகளெனவும் சொல்ல வைக்கிறது.

* சக படைப்பாளியின் படைப்பினை கிழித்தெறியச் செய்கிறது, சாலையில் செல்லும் ஒரு பெண்ணைக் குறித்தான மனவக்கிரத்தை அப்பட்டமாக எழுதத் தூண்டுகிறது.

* சக எழுத்தாளனின் உடல்கூறுகள், உடலில் இயற்கையில் அமைந்த குறைபாடுகளைக் குறித்து குரூரமாகப் பேசவைக்கிறது.

இந்த உரிமையை இவர்களுக்கு வழங்கியது யார் ....

பலவிதமான எதிர்பார்ப்புகளோடு வாசித்து, மிக நன்றாக எழுதுகிறீர்கள் என்று கொண்டாடிய வாசகர்கள் கூட்டமா.....?

தன்னால் சொற்களை அடுக்கி அழகாக எழுத முடியும் என்ற கர்வத்தில், நேர்மையான எழுத்தை எதிர்பார்க்கும் வாசகர்களுக்குச் செய்யும் துரோகம் இது. படைப்பாளியின் இந்த வக்கிரமும், அகந்தையும் எந்த வடிவில் இருந்தாலும் அது சுக்குநூறாக உடைத்தெறியப்பட வேண்டும். அது வாசகர்களால் நிச்சயம் சாத்தியமே.

நன்றி ஜோதிபாசு அவர்களே

கடந்த சில வருடங்களாக நீங்கள் அதிகம் செய்திகளில் வலம் வந்ததில்லை, காரணம் நீங்கள் ஓய்வுபெற்ற அரசியல்வாதி. முதுமையைக் காரணம் காட்டி ஓய்வு பெற்ற பெருமை கொண்டவர் நீங்கள். ஆனால் உங்களைப் பின்பற்ற ஓரிருவரைத் தவிர, வேறு அரசியல்வியாதிகளுக்கு இன்னும் அந்த மனப் பக்குவம் வரவில்லை...


உங்களைப் பற்றி ஆழமாக நான் ஏதும் வாசித்ததில்லை, ஆராய்ந்ததில்லை. நீங்கள் மிகச்சிறப்பாக ஆட்சி செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். எளிமை, சிறந்த நிர்வாகம், தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் முதல்வராக இருந்த பெருமை என ஒரு நேர்மையான தலைவருக்கான சிறந்த அடையாளமாகவே நீங்கள் இருந்திருக்கிறீர்கள். மிகச் சிறப்பாக பணியாற்றி... உண்மையான உதாரணமாக இருந்து மிக அற்புதமான ஒரு சரித்திரத்தை, தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுத்தான் வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறீர்கள்.

கடந்த சில நாட்களாக நீங்கள் மிகக்கடுமையான உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததினால் செய்திகளில் அவ்வப்போது உங்களைக் காண நேர்ந்தது. 95 வயதை கடந்த உங்கள் முதுமை, உங்களை உடல் நலக் குறைவிலிருந்து மீட்க உதவாது என்பதாகவும் மனதிற்கு பட்டது. ஒருவேளை நீங்கள் இறந்தால் உங்கள் கண்கள் தானமாக அளிக்கப்பட்டால் நன்றாக இருக்குமே என்றும் கூட நினைத்தேன். இன்று அது நடந்ததை நினைக்கும் போது, மனதிற்கு நிறைவாக இருக்கிறது.
இந்த தேசத்து மக்களுக்கு எத்தனையோ நல்லது செய்த நீங்கள், இறந்த பின்னும் கூட தொடர்ந்து இந்த தேசத்தை பார்த்து மகிழ உங்கள் இரண்டு கண்களை தானம் செய்துவிட்டதை அறியும் போது, நீங்கள் இருந்த திசை நோக்கி வணங்கத் தோன்றுகிறது.

நீங்கள் அளித்த கண்களிலிருந்து பெறப்பட்ட கருவிழிகள் பார்வையில்லாத இரண்டு நபர்களுக்கு தலா ஒன்று வீதம் அளிக்கப்படும் என்பதை அறிவேன். அந்த இரண்டு நபர்களின் வாழ்க்கையில் இருந்த இருட்டை முற்றிலும் உங்கள் விழிகள் துடைத்து எடுக்கும். நீங்கள் தானமாக அளித்த விழிகள் மூலம் அவர்கள் இன்னும் பற்பல ஆண்டுகள் வெளிச்சத்தை, வண்ணங்களை, இருளை, நிலாவை, நட்சத்திரங்களை இதையெல்லாம் தாண்டி சக மனிதர்களை, தன் உறவுகளை பார்த்து மகிழ முடியும்.

இன்னும் பல ஆண்டுகளுக்கு
நீங்கள் செய்த நல்ல காரியங்களும்...

நீங்கள் வகுத்த நல்ல கொள்கைகளும்...
வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்...

........கூடவே உங்கள் இரண்டு விழிகளும் மிகப் பிரகாசமாக.


குறிப்பு: ஜோதிபாசு அவர்களின் உடலும் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்படவுள்ள செய்தி மனதை நெகிழச் செய்கிறது. இந்த தேசத்தில் தன்னுடைய உடலையும் தானமாகக் கொடுத்த தலைவர் இவராகத்தான் இருப்பார் என நினைக்கிறேன்.

மாட்டுப் பொங்கல்(!!!) - புகைப்படங்கள்


சில நாட்களுக்கு முன் அறுவடை செய்த நெல்வயல்


இன்னும் பாதி அறுவடை செய்யாத நெல் வயல்








குதித்து விளையாட நிரம்பியிருக்கும் கிணறு




அறுவடைக்குப்பின் காய வைக்கப்பட்டிருக்கும் நெல்
 

மாட்டுப்பொங்கல் பூஜை





குக்கரில் வைத்த சர்க்கரைப் பொங்கல்




குக்கரில் வைத்தாலும் சுவையாகவே இருந்த சர்க்கரைப் பொங்கல்



மாட்டுப்பொங்கல் நாயகிகள்



கரிநாளுக்கு இதுல யாருனு இன்னும் முடிவாகலை!!!



______________________________

பொறுப்பி : நிழற்படங்கள் நோக்கியா 5310 மூலம் எடுத்தவை.... நல்ல கேமரா கொடுத்தாலும் கூட, நாம போட்டோ எடுக்குற லட்சனம் இம்புட்டுத்தானுங்கோ!!!

கிராமத்துப் பொன்மாலைப் பொழுது

அவை இப்போது போல் தொலைக்காட்சிகளையும், சினிமாவையும் தொங்கிக் கொண்டிருக்கும் சிறப்பு பண்டிகை தினங்கள் அல்ல. அப்போதெல்லாம் பொங்கல் பண்டிகையை குதூகலமாக வரவேற்க பல காரணங்கள் இருக்கும். முதல் காரணம் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் உடனடியாக வரும் விடுமுறை வாரம். அதற்குப் பின் முழு ஆண்டுத்தேர்வுக்கான படிப்புகள் விறுவிறுப்பாக(!!!) தொடங்கிவிடும்.


அடுத்த காரணம் பொங்கல் திருநாள் என்பது விவசாயக் குடும்பத்தில் நேரடியாக மகிழ்ச்சியை விதைக்கும் ஒரு பண்டிகை. பொதுவாக தை முதல் நாளான பொங்கல் தினத்தில் பொங்கல் வைத்து கொண்டாடுவது எங்கள் பகுதி விவசாயக் குடும்பங்களில் வழக்கம் இல்லை. பொங்கல் தினத்தன்று குலதெய்வம் கோவிலுக்கோ, கூடுதுறை, கொடுமுடி அல்லது பழனிக்கோ செல்வது வழக்கம். அப்படி போய் வருவதற்காக முதல் நாளே கட்டுச்சோறு கட்டி பொங்கல் தினத்தன்று விடியற்காலையில் கிளம்பி மதியமோ, மாலையோ களைத்து வீடு திரும்புவது மிக மகிழ்ச்சியான ஒன்று. அடுத்த நாள் வரும் மாட்டுப் பொங்கல் தான் வண்ணமயமாக கொண்டாடப்படும்.

எங்கள் வீட்டில் பசுமாடு வளர்த்ததாக நினைவில்லை. பாலுக்காக எருமைகளும், உழவுக்காக எருதுகளும், ஆடிமாதம் வெட்டி விருந்து வைப்பதற்காக ஆட்டு கிடாய்களும் வளர்த்திருக்கிறோம். பொங்கலுக்கு இரண்டொரு நாட்கள் முன்பாக எருதுகளுக்கு லாடம் அடிக்கப்படும்.

மாட்டுப் பொங்கலன்று காலை முதல் கட்டுத்தறை கூட்டிப் பெருக்கப்பட்டு மிக நேர்த்தியாக சுத்தம் செய்யப்படும். அடுத்ததாக எருமை மாடுகளும், மாட்டு வண்டியும் வாய்க்காலுக்கு கொண்டு செல்லப்பட்டு தேய்த்து கழுவி சுத்தம் செய்து, வண்டியின் பலகைகளில் புதிய வண்ணம் அடிக்கப்பட்டு மெருகேற்றப்படும். எருதுகளின் கொம்புகளுக்கு பெயிண்ட் அடிக்கப்படும். அடிக்கப்ட்ட பெயிண்டுக்கு எதிர்நிறத்தில் கொம்புகளில் புள்ளி வைக்கப்படும். எருமைகளுக்கு பெயிண்ட் சூடு என்ற காரணம் சொல்லி, காவிக்கல் சாயம் மட்டும் பூசப்படும். எல்லாவற்றிற்கும் புதுக்கயிறுகள் மாற்றப்படும்.

அதே சமயம் ஒரு ஓரமாக மூன்று கற்கள் வைத்து பச்சரிசிப் பொங்கல் வைக்கப்பட்டிருக்கும். கட்டுத்தறையில் ஒரு பகுதியில் சாணம் போட்டு மொழுகி, அதில் மாட்டுச்சாணம் மூலம் ஒரு பிள்ளையார் வைத்து, சில அருகம்புல் சொருகி, பூக்கள் தூவப்படும். பொங்கல் பானையை நடுவில் வைத்து, மஞ்சள் தூர், கரும்புத் துண்டுகளோடு, சின்ன சின்ன வாழை இழைகளில் பொங்கல் சோறு வைக்கப்பட்டு கொஞ்சம் வாழைப்பழம் அதில் வைக்கப்படும். அது தழுவுச் சோறு என அழைக்கப்படும். கிணற்றில் நேரடியாக எடுத்து வந்த சொம்பு நீரோடு தேங்காய் உடைத்து கலக்கப்பட்டு தீர்த்தமாக்கி, பூஜையில் நீர் விழாவி, கற்பூரம் காட்டி, சாம்பிராணி புகையோடு பூஜை நிறைவடையும். அதன் பின் ஒவ்வொரு எருமை மாட்டிற்கும் சாம்பிராணி புகை காட்டப்பட்டு, தழுவு சோறு ஊட்டுவதோடு மாட்டுப் பொங்கல் இனிதே நிறைவேறும்.

காலப் போக்கில் உழவுக்கு ஏர், கலப்பை, உழவு எருதுகள் தேய்ந்து போய் கொஞ்சம் கொஞ்சமாக இயந்திரம் உட்புகுந்தது, தற்சமயம் எங்கள் கிராமத்திலும், அநேகமாக சுற்றியுள்ள கிராமங்களிலும் கூட உழவுக்கான எருதுகள் அற்றுப்போனதாகவே நினைக்கிறேன். பாலுக்காக வளர்க்கப்படும் மாடுகளும், எருமைகளும் இன்னும் கிராமங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மாட்டுப் பொங்கலும் கொஞ்சம் பழைய நேர்த்தியை இழந்திருந்தாலும், இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

மாட்டுப் பொங்கல் தினத்தின் மாலை ஒவ்வொரு விவசாயின் பட்டியிலும், கட்டுத்தறைகளில் பொன் மாலைப் பொழுதாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
___________________________________________

கேமரா! சாக்கிரதைங்கோ

அன்னைக்கு ஒருநாளு... பாப்பா வெளையாடணும்னு சொல்லுச்சேனு, பூங்காவுக்கு கூட்டிட்டுப் போனேனுங்க... அதென்னடானு பார்த்தா நெம்ப பிசியா இருக்குற பூங்காவா போச்சுங்க... எங்க பாத்தாலும், திமு திமுனு ஒரே கூட்டம்.

எங்க பார்த்தாலும் கொழந்தைக, பெரிய புள்ளைக, கல்யாணம் ஆன பொம்பளைங்கனு ஒரே கூட்டம்னா கூட்டம். நானும் பாப்பாவ ஒரு எடத்துல வெளையாட விட்டுப்போட்டு, ஓரமாக உட்கார்ந்து வலையில என்னத்த எழுதலாம்னு ஓசனை பண்ணிகிட்டுருந்தேன்...

கொழந்தைகளுக்கு செரி சமமா... வயசு வந்த புள்ளைகளும், பெரிய பொம்பளைங்களும் சந்தோசமா ஓடியாடி வெளையாடிட்டு இருந்தாங்க... பரவாயில்லையே பெருசுகளும் கொழந்தைகளாட்ட வெளையாடுதுகளேனு ஆச்சரியமா பாத்துகிட்டிருந்தேன்..

இன்னொரு ஓரமா பார்த்தா ரெண்டு சில் வண்டு பசங்க ஒக்காந்திருந்தாங்க. மஞ்ச சட்டை போட்டவன் சுத்தி பராக்கு பாத்துகிட்டுருந்தான், நீலக் கலர் சட்டை போட்டவன் தலைய நட்டுக்கிட்டே இருந்தான். அந்த பராக்கு பார்த்தவன் மட்டும் ஏதோ அப்பப்போ தலை நிமிராம ஒக்கார்ந்திருந்தவங்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தான், இவன் அடிக்கடி கையில வச்சிருந்த செல்போனை மெதுவா மெதுவா ஒவ்வொரு பக்கமா திருப்பிகிட்டிருந்தான், ஆனா தல மட்டும் நிமிரவேயில்லீங்க...

அவனுங்களை பார்த்தா என்னுமோ தப்பு பண்ற ராஸ்கோலுவ மாதிரியே தெரிஞ்சுதுங்க. நானும் பெரிய இவனாட்டம் அவனுங்கள நோட்டம் உட ஆரம்பிச்சேன்...

அப்போதான் ஒன்ன கவனிச்சேன், அந்த நீலச் சட்டைக்காரன் செல்போன் வச்சிருந்த தெசையில பார்த்த.. அங்கே கொழந்தைங்க வெளையாடற சறுக்கல் பலகையில பெரிய பொண்ணுங்க செல பேரும், கனகாம்பரம் வச்சிருந்த நாலஞ்சு பொம்பளைங்களும் போட்டி போட்டுக்கிட்டு ரொம்ப சந்தோசமா சறுக்கல் உட்டுகிட்டிருந்தாங்க....

திடீர்னு மண்டையில என்னமோ பளிச்சுனு தோணுச்சு, அட இவனுங்க அந்த பொம்பளைங்களும், பொண்ணுகளும் சறுக்கி விளையாடறத செல் போன் கேமராவுல வீடியோ புடிப்பானுங்க போல இருக்கேனு... ஒரு நிமிசம் மனசு திக்னு ஆயிப்போச்சு.

நெசமாவே அப்படிப் பண்ணுவானுங்களானு ரொம்ப ஓசனையோட அவனுங்களையே உத்துப் பார்த்தா, அந்த மஞ்ச சட்டக்காரன், என்னையே ஒரு நிமிசம் பார்த்தான், டக்னு எந்திரிச்சு நீலச் சட்டக்காரன இழுத்துக்கிட்டு வேகவேகமா என்னை ரெண்டு வாட்டி திரும்பிப் பார்த்துட்டே ஓட்டமும் நடையுமா போக ஆரம்பிச்சுட்டான். எனக்குன்னா கொழப்பம்னா கொழப்பம், நெசமாவே அவனுங்க கேமராவுல படம் புடிச்சிக்கிட்டி இருந்துருப்பானுங்களா, அப்படியில்லீனா நான் பாக்குறதப் பாத்தவொடனே ஏன் அங்கிருந்து ஓடிப்போனானுங்கனு...

இங்க பார்த்தா அந்த பொம்பளைங்க சும்மா சிரிப்பும் கும்மாளமுமா சறுக்கறதும், ஓடிப்புடிக்கறதுமா வெள்ளந்தியா வெளையாடிக்கிட்டு இருந்தாங்க...

வலையில சில தளங்களுல ஹிடன் கேமார பிக்சர்னு போடற கருமாந்திரம் இப்படித்தான் பொது எடத்தில, அவங்களுக்கே தெரியாம, அசாக்கிரதையா இருக்குறப்போ எடுப்பானுங்க போல இருக்குங்க...

பஸ்லெ, பொது எடத்துல ”திருடங்க சாக்கிரதை”, ”பிக்பாக்கெட் திருடங்க சாக்கிரதைனு” எழுதியிருக்குறது கூட்வே “செல் போன் கேமரா சாக்கிரதைனு” எழுதி வெக்கவேணும் போல இருக்குதுங்க...

அதுதான்.. ரோட்டோரம் பால் குடுக்குற பொம்பள, தடுப்பு மறைவுல குளிக்கிற பாவப்பட்ட பொம்பள, பஸ்லே கைதூக்கி நிக்கிற பொம்பள, ரயில்ல கீழ் சீட்ல உக்காந்திருக்குற பொம்பள, நடக்கிறப்ப மாராப்பு வெலகின பொம்பள, எதையாவது குனிஞ்சு எடுக்குற பொம்பளைனு பரதேசி பொறுக்கிங்க விதவிதமா செல்போன் கேமராவுல எடுத்து வலையேத்தி வுட்டுடறாங்களாமே...

இத கண்டுபுடிச்சு தடுக்குறதுக்கு தனியா போலீசு கூட பெரிய பெரிய ஊர்ல இருக்குதுனு சொல்றாங்க, ஆனா இவனுங்க தங்களத்தான் வீடியோ எடுக்குறானுங்கனு பாவம் முக்காவாசிப் பேருக்கு தெரியறேதேயில்லீங்களே....

ச்சேரி.... வேற என்னங்க பண்றது.. நம்பு மானம் வலையேறாம இருக்கோனும்னா நாமதானுங்க சூதானமா இருக்கோனும், இந்த நாறப்புத்தி இருக்குறவனுங்கள அவ்வளவு சுளுவா திருத்தவா முடியும்?

_________________________

நம்பிக்கை நுனி







காசு கேட்டு நேற்று தொடர்ந்து வந்த
தம்பியின் குறுந்தகவல்கள்...

பேசும்போதெல்லாம் செருமிச் செருமி
இருமிய அப்பாவின் கம்பீரமற்ற குரல்...

காதுகுத்தி மொட்டையடிக்க காத்துக்
கிடக்கும் முடிவளர்ந்த தங்கச்சி பையன்...

மூன்று நாளாய் நண்பனைத் தவிர்க்க வைத்த
திருப்பி கொடுக்காத கைமாத்து....

வறண்டு கிடக்கும் கறுத்த பணப்பை
எட்டாத மதிய உணவுக்கு எரியும் வயிறு

சாமானியனின் சரித்திரம் இதுதான் என
சாட்டை சுழற்றி விரட்டும் மாதக்கடைசி...

வாகனத்தை விரட்டி பறக்க, அலறி அழைக்கும்
அலைபேசிக்கு பதில் சொல்ல காலூன்ற

சாலையோரத்தில் காக்கை எச்சம் வழியும்
தலைவரின் கருப்புச் சிலை நிழலில்

இருளை மட்டும் கண்களில் தேக்கியவன்
வாசித்து வழியவிடும் புல்லாங்குழல் இசையில்

கனமாய் இருந்த சுவாசம் மெலிகிறது
எங்கோ நம்பிக்கை விளக்கு எரிகிறது

தவித்து தேடிய கடைசி வரி கிடைத்த
கவிதையாய் மனம் சிலிர்க்கிறது

_________________________________________________________

புதிய மொந்தை

இரண்டு வருடங்கள் இருக்கும், வழக்கம்போல் மதிய உணவுக்காக வீட்டுக்கு இருசக்கர வாகனத்தைக் கிளப்பிய, என் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தின் முகப்பில் கடை வைத்திருக்கும் நண்பரும் அதே சமயம் தன் இரு சக்கர வாகனத்தை கிளப்புகிறார். ஒரு விநாடி நேருக்கு நேராக பார்த்து சம்பிரதாயமாக மின்னல் போல் புன்னகைத்து புறப்படுகிறேன், அவரும் நான் போகும் சாலையிலேயே உடன் வருகிறார், சுமார் அரை மைல் தொலைவு தூரம் வரை அவர் எனக்கு சற்று பின்னால் வருவதை பக்கவாட்டில் இருக்கும் கண்ணாடி மூலம் எதேச்சையாக பார்த்தேன். அரசு மருத்துவ மனைக்கு எதிரில் இருக்கும் பிரிவில் நான் இடப்பக்கம் திரும்பி வீட்டுக்கு சென்று விட்டேன்...

சரியாக முப்பது நிமிடங்கள் கழித்து மதிய உணவை முடித்துக்கொண்டு அலுவலகம் வந்தபோது, அலுவலக கட்டிடத்தின் முன்பு கொஞ்சம் கூட்டம், எல்லோர் முகத்திலும் கடும் இறுக்கம்.

என்னவென்று விசாரிக்க, கடைக்காரர் விபத்தில் இறந்துவிட்டதாகவும், உடல் அரசு மருத்துவமனையில் இருப்பதாகவும் ஒருவர் கூறினார்.

அரை மணி நேரம் முன்பு தானே பார்த்தோம், நான் போன சாலையில்தானே வந்தார் என பதறியடித்து அரசு மருத்துவமனைக்கு ஓடினேன்... பத்து வருடங்களுக்கு மேல் அவரோடு பழக்கம்.

அரசு மருத்துமனை பிரிவு வரை அவரைப் பார்த்தது நினைவிருக்கிறது. அதிலிருந்து வெறும் ஐம்படி தூரத்தில் விபத்து நடந்திருக்கிறது. அவருடைய வண்டி மற்றும் உடலில் சிறு சிராய்ப்பு கூட இல்லை. தட்டிவிட்டுப்போன வாகனத்தில் பட்டோ அல்லது விழுந்த வேகத்தில் நிலத்தில் பட்டோ தலையில் மட்டும் காயம் ஏற்பட்டிருந்தது.

மனைவி, வயதான தாயார், கல்லூரியில் படிக்கும் இரண்டு மகள்கள் என இருந்த அந்தக் குடும்பத்தின் ஆணிவேரே அவர்தான். இத்தனைக்கும் அவர் சென்றது டி.வி.எஸ் 50 மொபட்தான். ஒருவேளை அவர் தலைக்கவசம் அணிந்திருந்திருந்தால் அன்று பிழைத்திருக்க வாய்ப்புண்டு என எல்லோருமே பேசிக்கொண்டோம்.

சாப்பிட புறப்படும்போது அவரை சந்திக்கிறேன். சாப்பிட்டு விட்டு திரும்பும் போது அவர் உயிருடன் இல்லை என்பதை எதன் பொருட்டும் ஜீரணிக்க முடியவில்லை....

அடுத்த சில நாட்கள், வாரங்களாக அந்த விபத்தும், அவருடைய இழப்பும் மிகப் பெரிய பாடமாக எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டேயிருந்தது. பல வருடங்களுக்கு முன்பே தலைக்கவசம் வாங்கியிருந்தாலும்... தொலைவாக செல்லும் (அதில் ஒரு சல்ஜாப்பு, பக்கமா போனா மெதுவா போவோம், தொலைவா போனா வேகமா போவோமாம்) போது மட்டும் கவசம் அணிந்து வந்த நான்.... அன்று முதல் வாகனத்தை எடுக்கும் போதே தலைக்கவசம் அணிய ஆரம்பித்தேன், கவனம் கூடியிருந்தது, வேகம் குறைந்திருந்தது... காலப்போக்கில் (நாலாஞ்சு நாளிலேயே...) எல்லோரையும் பின்பற்றி தலைக்கவசம் அட்டாலிக்கு போனது, வேகம் சர்வசாதாரணம் ஆனது...

கடந்த மாதம் சென்னை சென்ற போதும், நேற்று கோவை சென்ற போதும் ஒன்றைக் கவனித்தேன், இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் எல்லோரும் தலையில் கவசம் போட்டிருந்தனர்... சட்டம் இயற்றி பலவருடம் அரசாங்கம் அதைக் கிடப்பில் போட்டாலும், ”அப்பாடா மக்கள் திருந்திட்டாங்களே”னு சந்தோசப்பட நண்பர் சொன்னார் “மக்கள் திருந்தல, அரசாங்கம்தான் வேற வழியில்லாம திருந்திடுச்சு” என்று. இந்த நாட்டில் மட்டும் தான் சட்டம் போட்டால் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனெனில் ஏதேனும் ஒரு காரணத்தை வைத்து, எப்படியும் அதை அமல் படுத்த மாட்டார்கள். ஆனாலும் காலம் கடந்தேனும், தலைக்கவசம் ஒருவழியாக கட்டாயமாகி வருகிறது.

தலைக்கவசம் அணிவதால் இரண்டு நன்மைகள். கீழே விழுந்தால் முகம், தலை, ஓரளவு காக்கப்படும், அடுத்து வாகனத்தில் போகும்போது கழுத்தை வளைத்து தலைக்கும், தோளுக்கும் இடையே அலைபேசியை வைத்து கோணிக்கொண்டு பேசும் சர்கஸ் நின்று போகும். ஆனாலும், வாகனத்தை ஓட்டிக்கொண்டே அலைபேசியை எடுத்து, தலைக் கவசத்துக்குள் திணித்து பேசி இன்னும் சாகசம் புரிவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

சில வருடங்களுக்கு முன்பு தலைக்கவசம் கட்டாயம் எனச் சட்டம் வந்தபோது, அடித்துப்பிடித்து தலைக்கவசம் வாங்கியர்கள், அந்தச் சட்டம் அமல் படுத்தப்படாமல் காற்றில் மிதந்தபோது தலைக்கவசம் வாங்கிய தண்டச் செலவுக்காக கப்பல் மூழ்கிப் போனதற்கு நிகராக கவலைப்பட்டார்கள். இப்போது மீண்டும் ஆங்காங்கே அமல் படுத்தும் போது, காசு போட்டு வாங்கி, அட்டாலியில் கிடக்கும் தூசு படிந்த தலைக்கவசம் உயிர் பெறுவதை நினைத்து... மெதுவாய் மகிழ்ச்சி பிறக்கிறது...

போக்குவரத்து காவல்துறையினர் விதிக்கவிருக்கும் சில நூறு ரூபாய் அபராதத்திற்கும், பிடிபட்டால் குறைந்தது அரை மணி நேரமாவது சாலையோரம் நிற்க வேண்டுமே என்ற சிரமத்திற்கும் பயந்து கட்டாயமாக தலைக் கவசம் அணிவது என உறுதி பூண்டிருக்கிறேன்.... சட்டத்தை தொடர்ந்து அமல் படுத்தி காவல்துறை நான் பூண்டிருக்கும் உறுதியை நிலை நிறுத்துமா...


(ங்கொய்யாலே!!! ரொம்பத்தான் ஏத்தம்னு மனசாட்சி(!!!) திட்டுதுங்க)

_________________________________________________________

தொடர்ந்து தொலையும் நேர்மை?


வீட்டிற்கு வந்ததும் வழக்கம்போல் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

திருமணமாகி எட்டு மாதங்களுக்குப் பின், முன்னாள் காதலனோடு மீண்டும் புதுப்பிக்கப்பட்ட உறவால் கணவனை 26 தூக்க மாத்திரைகளை பாலில் கலந்து கொடுத்து காதலன் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து கொலை செய்து, உடலை ஆந்திரமாநிலத்துக்கு கடத்தி சென்று வீசிய கும்பலைப்பற்றிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செய்தி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. கூடுதலாக காவல் நிலையத்தில் குனிந்து அமர்ந்திருந்த பெண்ணின் தலையை ஒரு பெண் அதிகாரி தடவி விட்டுக் கொண்டிருந்தார். உடலை எடுத்துச்சென்ற வாகனம் காட்டப்பட்டது. காவல் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் விதமாக, தொலைக்காட்சிக்கு விபரமாக பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தனர்.


இதெல்லாம் சகஜம் என்ற மனநிலைக்கு ஏற்கனவே தள்ளப்பட்டிருந்த நான் பெரிய ஆர்வம் ஒன்றுமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்

மகள் அருகில் வந்தாள் “அப்பா... உங்ககிட்ட ஒன்னு கேக்கட்டுமா?”

“என்ன குட்டி?”

“இதையெல்லாம் நம்மகிட்ட ஏம்ம்ம்ப்ப்ப்பா சொல்றாங்க?”

குழந்தைகளின் கேள்விகளில் ஒருபோதும் ஒளிவு மறைவு, சூது வாது இருப்பதில்லை, எப்போதுமே நேர்மை நிரம்பியிருக்கும்...

அன்று என்னுடைய பதிலில் நேர்மை இல்லவே இல்லை.

என்னுடைய பதிலில் மட்டுமல்ல, ஊடக சுதந்திரத்திலும் கூட...


ஏது நிகர்?


குதித்துவரும் அலை கண்டு இறுகப்பற்றும்
குழந்தைகளின் கைகளை இன்னும் கொஞ்சம்
இறுக்கிப் பிடிப்பதில் முளைக்கிறது
ஓராயிரம் நம்பிக்கைத் துளிர்கள்...

ன்றி நிற்கும் கால்களை கடந்து
பின்வாங்கும் அலைகள் திருடும் மணல்துகள்கள்
உள்ளங்காலுக்குக் கீழே உருவாக்கும் குறுகுறுப்பில்
கரைந்துபோகிறது சேர்ந்துகிடந்த சோர்வு...

திரும்பிச்சென்ற அலைகள் விட்டுப்போன
பிசுபிசுப்பை கழுவிவிட வரும் புதிய அலை
இந்தமுறை மனதில் அழுத்தமாக அப்பிச்செல்கிறது
கூடுதலாய் சந்தோச பிசுபிசுப்பை...

குழந்தைகளின் உலகத்துக்குள்
கொஞ்சம் கரைந்துபோகும் சுகத்துக்கும்
அலைகளிடம் கால்களை கொடுத்து
மனதை இழக்கும் இதத்திற்கும் நிகர் ஏது?
_________________________________________________