தடம் புதிது



வெள்ளரிக்கொடியாய் சாலைகள்
கிளைத்துக் கிடக்கின்றன...

ஒருபோதும்
தீர்ந்து போய்விடுவதில்லை
என் நம்பிக்கை மூட்டை போல்....


முட்டுச் சந்துகளில்
முற்றுப்பெறும் சாலைகளில்
சிலசமயம் குறுகிப்போய்
உடல் சிலிர்க்க‌ உறைந்து நிற்கிறேன்....


பின்வாங்கி திரும்புகையில்
குறைக்கும் நாய் கண்டு
குமைகிறது மனது
மேகம் கவ்விய‌ வெயில்போல்....


சாலைப்பிரிவுகளில் மட்டும்
தயங்கி நிற்கிறேன்
தொட‌ர்வ‌ண்டி நிலைய‌த்தில்
தந்தையின் கை பிரிந்த சிறுவனாய்....


கால்கள் இழுத்துச்செல்கிறது
நேற்று போலவே
புதியதொரு பாதையில்
வளைவுகளுடனும் நெளிவுகளுடனும்....

-0-

6 comments:

சந்தனமுல்லை said...

நல்லாருக்குங்க...

//கால்கள் இழுத்துச்செல்கிறது
நேற்று போலவே
புதியதொரு பாதையில்
வளைவுகளுடனும் நெளிவுகளுடனும்....//

:-)

kk said...

சிலருக்கு சிலது புரியும் பலருக்கு பலது புரியாது
அதுபோல் எனக்கு இந்த கவிதை புரியவில்லை யே!

ஈரோடு கதிர் said...

நன்றி.. சந்தனமுல்லை


//kk said...
சிலருக்கு சிலது புரியும் பலருக்கு பலது புரியாது
அதுபோல் எனக்கு இந்த கவிதை புரியவில்லை யே!//

ம்ம்ம்ம்ம்... என்ன சொல்ல....
இப்போதைக்கு...
வருகைக்கு நன்றி

நாகா said...

உங்கள் கவிதைகள் எல்லாமே ஏனோ மனதை பாரமாக்குகின்றன. நீங்களும் உடுமலை அருகே என்று அறிந்தது மிக்க மகிழ்ச்சி.. வெகு சில தினங்களுக்கு முன்பே வலைப்பதிவில் ஆரம்பித்தேன் ஆனால், இதனால் எண்ணட்ற மணித்துளிகள் விரயமாவதால், பொதுவாகவே குறைவாகவே பின்னூட்டமிடுவேன், ஆனால் உங்கள் எழுத்து மிகவும் பிடித்ததால் நேற்றே உங்களைத் தொடர ஆரம்பித்து விட்டேன்..

ஈரோடு கதிர் said...

அன்பு நாகா...

//பாரமாக்குகின்றன//
உண்மைதான்... நானும் வெளியே வர விரும்புகிறேன், ஆனால் உள்ளேயே மீண்டும் சுகமாய் சுழல்கிறேன்..

நான் கரட்டுமடத்தில் இரண்டு வருடம் படித்தேன்... மறக்க முடியாத, மறக்க கூடாத வருடங்கள் அவை... அதுபற்றி என் "கலைந்து போன கடுதாசி" பதிவில் கொஞ்சம் நீங்கள் படிக்கலாம்

மற்றபடி நான் பவானி பக்கம் ஒரு சிறு கிராமம்...


// உங்கள் எழுத்து மிகவும் பிடித்ததால் நேற்றே உங்களைத் தொடர ஆரம்பித்து விட்டேன்..//

தங்கள் அன்பிற்கு நன்றி

Unknown said...

வாழ்க்கை பயணத்தை சாலைப்பயணமாக உருவகப்படுத்தி எழுதியதாக உண்ர்கிறேன்..இந்த கவிதை கட்டுரை போல் மனதில் விரிகிறது.ஏதேதோ சொல்லவருகிறது,ஆனால் பின்னூட்டமிட சரியான வார்த்தை அகப்படவில்லை....